உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் இன்று (அக்டோபர் 25) விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தமிழகத்தில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களில் கடந்த 6, 9 ஆகிய தேதிகளில் இருகட்டத் தேர்தல் நடைபெற்று, கடந்த 12ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்றத் தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் போன்ற பதவிகளுக்கு 161 பேர் போட்டியிட்டனர். அதில் 110 பேர் வெற்றி பெற்றனர்.
வெற்றிபெற்ற 110 பேரும், தோல்வியடைந்தவர்கள் மற்றும் இயக்க நிர்வாகிகளையும் இன்று மாலை 3.00 மணிக்குச் சந்திக்க நேரம் கொடுத்திருந்தார் விஜய்.
இதனால் வெற்றிபெற்றவர்கள்,
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கானத்தூருக்கு உட்பட்ட பனையூர் 8வது அவென்யூ எண் 247 முகவரியில், அமைந்துள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்திற்கு காலை 11.00 மணிக்கெல்லாம் குவிந்துவிட்டனர். அவர்களுக்காகப் பந்தல், சேர்கள் போடப்பட்டிருந்தன.
நடிகர் விஜய், பிற்பகல் 3.00 மணியளவில் அலுவலகத்திற்கு வந்தார். தேர்தலைப் பற்றி விசாரித்தவர், “நாம் ஒவ்வொரு படியாக ஏறுவோம் அடுத்தகட்ட பணிகள் தலைமையிலிருந்து கொடுப்பார்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்தி மக்களுக்குச் சேவை செய்து மக்கள் மனதில் இடம் பிடியுங்கள்” என்றார்.
பின்னர், குரூப் போட்டோ மற்றும் தனித் தனியாகப் போட்டோ எடுத்துக்கொண்டு வழி அனுப்பி வைத்தார் விஜய்.
2024 எம்.பித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு மக்கள் ஆதரவு எப்படி இருக்கிறது என்று அறிந்துகொள்ளும் திட்டத்துடன் தேர்தல் பணிகளைச் செய்து வருவதாக விஜய் ரசிகர் மன்றத்தினர் கூறுகின்றனர்.
**-வணங்காமுடி**
�,