சிறப்புக் கட்டுரை: சமூக வளர்ச்சியும் பரிவர்த்தனையும்! – பகுதி 2:

Published On:

| By admin

b> பாஸ்கர் செல்வராஜ்
ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பு போரில் அமெரிக்கத் தோல்வி என்பது ஒரு தனித்த நிகழ்வு அல்ல. இராக், சிரிய போர்கள், இரானிய மோதல் என மத்திய கிழக்கைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் கண்ட தோல்விகளின் தொடர்ச்சி. அதேபோல ஆப்கன் போருக்கான காரணம், ஆசிய – ஐரோப்பிய கண்டங்களின் நிலவழி இணைப்பைத் தடுத்து முந்தைய பட்டுச்சாலை வர்த்தகம் உயிர் பெறுவதைத் தடுப்பது; ஆப்கனின் அருகிலுள்ள இரான், ரஷ்யா, சீன நாடுகளைக் கட்டுக்குள் வைக்க முற்படும் முயற்சி; மத்திய கிழக்கின் எண்ணெயை மற்ற ஆசிய நாடுகளுக்கு நிலவழியாக குழாய் அமைத்துக் கொண்டு செல்வதைத் தடுத்து நிறுத்தும் சூழ்ச்சி; அடுத்த மின்னணு பொருளாதாரத்துக்குத் தேவையான கோபால்ட், லித்தியம் போன்ற மூலப்பொருட்களைக் கைப்பற்றிக் கட்டுப்படுத்தும் முனைப்பு எனப் பலரும் பல பூகோள அரசியல் பொருளாதார காரணங்களை அடுக்கினார்கள். இவற்றில் உண்மை இல்லாமலும் இல்லை. ஆனால், இந்தப் போர்களின் மையமான நோக்கத்தை இவை விளக்கப் போதுமானதாக இல்லை.

**போர்களின் நோக்கம் வர்த்தகம்!**
உதாரணமாக, உலக எண்ணெய் உற்பத்தியில் அமெரிக்காவின் பங்கு இன்று 18 விழுக்காடாகவும், அங்கே ஒபாமா காலத்திலேயே இறக்குமதியை நிறுத்தி ஏற்றுமதி செய்து கொண்டிருக்கும் நிலையை அடைந்துவிட்ட நிலையில் இந்தப் போர்கள் அமெரிக்க எரிபொருள் தேவைக்கானது என்று கூற இயலாது. அதேபோல அமெரிக்க நுகர்வுக்குத் தேவையான பொருட்கள் பெரும்பாலும் ஆசியாவில் உற்பத்தியாகி செல்லும் நிலையில் அந்த உற்பத்தியை சீர்குலைக்கும் நடவடிக்கையாகவும் இதைப் பார்க்க இயலாது. பிறகு எதற்கு இந்தப் போர்கள், அரசியல் நகர்வுகள் என்று சிந்தித்தால் எஞ்சி நிற்பது பொருட்களின் வர்த்தகம். உலகம் முழுக்க உற்பத்தியாகும் பொருட்கள் டாலரில் விலை நிர்ணயிக்கப்பட்டு டாலரின் மூலமாகவே பரிவர்த்தனை (Exchange) செய்து கொள்ளப்படுகிறது. ஏன் தங்களது சொந்த நாணயங்களைத் தவிர்த்து, மற்ற நாணயங்களை விடுத்து டாலரில் பரிவர்த்தனை செய்கிறார்கள் என்ற கேள்விக்கும், தற்போதைய நிகழ்வுக்குமான தொடர்பை உலகம் எப்படி இந்த இடத்தை அடைந்தது என்பதை சுருக்கமாகப் பார்ப்பதன் மூலம் புரிந்துகொள்ள முயற்சி செய்யலாம்.


**ஆதி சமூகம் பரிவர்த்தனையை நோக்கி…**
மனிதர்கள் காடுகளில் குழுவாக வசித்து ஒன்றாக வேட்டையாடி உண்டபோது அவர்களுக்குள் பொருளைக் கொடுத்து பொருளைப் பெறும் பரிவர்த்தனை இருந்திருக்க இயலாது. ஏனெனில், உணவு உள்ளிட்ட பொருட்களின் உற்பத்திக்கு அடிப்படையான காடும், ஒன்றாக உழைத்து உருவாக்கும் பொருட்களும் எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கும்போது அவர்களுக்குள் பொருட்களைப் பரிவர்த்தனை செய்து கொள்ளும் தேவை எங்கிருந்து எழப்போகிறது. உழைத்து, உண்டுவாழ அடிப்படையான இயற்கை வளமும், உழைத்து உருவாக்கும் செல்வமும் அந்த சமூகத்தின் சொத்தாக (Social wealth) இருந்த அந்த சமத்துவ சமூகத்தில் வாழ்ந்த மனிதர்கள் சுதந்திரமானவர்களாகவும், சகோதர(ரி)த்துவ உணர்வுடனும் இருந்தது இயல்பானது. அப்போது அவர்களுக்குள் பரிமாறிக்கொள்ள அன்பைத் தவிர வேறெதுவும் இருந்திருக்க முடியாது.
இப்படியான ஆதிகால பொதுவுடைமை சமூகங்கள் (Primitive Communistic Societies) பல்கிப் பெருகி அதன் பெருகிய உணவுத் தேவைக்கு வேட்டைத் தொழிலில் இருந்து அதிக உற்பத்தி திறனுடைய கால்நடை வளர்த்தல் மற்றும் விவசாயத்தை நோக்கி நகர்கின்றன. தாயை முதன்மையாகக் கொண்ட இந்த வேட்டை சமூகங்களின் தாய்வழி (Matriarchy) குடும்ப அமைப்பு இப்போது தந்தையை முதன்மையாகக் கொண்ட தந்தைவழி (Patriarchy) குடும்ப அமைப்பை நோக்கி மெல்ல மாற்றம் காண்கிறது. இந்த மாற்றம் அந்தந்த குழுக்கள் வாழ்ந்த பகுதிகளின் நீர், நிலம் உள்ளிட்ட இயற்கைவளம் மற்றும் தட்பவெப்ப சூழல் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடுகிறது. அதேபோல இவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் தன்மையும் வாழ்நிலைக்கு ஏற்ப மாறுபடுகின்றன. அதோடு இந்த சமூகங்களுக்குள் வயது, பாலினத்தைப் பொறுத்து இவர்கள் செய்யும் வேலைகளிலும் பிரிவினை (Division of Labour) ஏற்படுகிறது.

**வேலைப் பிரிவினையும் பண்டமாற்றும்…**
சமநில பகுதிகளில் வாழ்ந்த மக்கள் தானிய உற்பத்தியும், பாலைவன மற்றும் கடல்சார் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் முறையே கால்நடை உற்பத்தி, மீன்கள், முத்துகள் போன்ற பொருட்களை உற்பத்தி செய்ததையும் இங்கே நினைவுபடுத்திக் கொள்ளலாம். அதேபோல முன்பு பொதுவாக வேட்டைத் தொழில் செய்தவர்கள் இப்போது விவசாயி, தச்சர், குயவர், மீனவர் எனத் தொழிலின் அடிப்படையில் பிரிகிறார்கள். ஆரம்பத்தில் இந்த வேறுபட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் தங்கள் குழுவுக்காகவே உற்பத்தி செய்கிறார்கள். ஆனால், ஒரு குழுவைச் சேர்ந்தவர் இன்னொரு குழுவுக்குப் பொருளை உற்பத்தி செய்து கொடுக்க மாட்டார். இப்படி வேறுபட்ட பயனுள்ள பொருட்களை உற்பத்தி செய்யும் இரு வேறு சமூகங்கள் சந்தித்துக் கொள்ளும்போது இந்தச் சமூகங்களுக்கு இடையில் பொருட்களைப் பரிவர்த்தனை செய்து கொள்வதற்கான சூழல் ஏற்படுகிறது.
இந்தப் பரிவர்த்தனைகள் பெரும்பாலும் பொருளைக் கொடுத்து பொருளைப் பெற்றுக் கொள்ளும் பண்டமாற்றுமுறை (Barter). இந்த பண்டமாற்று செய்து கொள்வதற்கான முக்கிய நிபந்தனைகள்… 1. பரிமாறிக்கொள்ளும் பொருட்கள் இந்த மக்களின் தேவைக்குப் போக எஞ்சி இருக்க வேண்டும்; 2. மற்றவருக்கு இந்தப் பொருட்கள் பயனுள்ளதாக இருக்க வேண்டும்; 3. இந்தப் பொருட்களை வைத்திருக்கும் நபர்கள் நேரடியாக ஓரிடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் சந்தித்துக் கொள்ள வேண்டும். முதலில் சமூகங்களுக்கு இடையில் நிகழும் இந்தப் பரிவர்த்தனை, பின்பு இந்தக் குழுவைச் சேர்ந்த மக்களுக்கு இடையிலும் நடக்க ஆரம்பிக்கிறது. முன்பு குழுவாக தங்களுக்கு வேண்டிய பொருட்களை உற்பத்தி செய்து (Social Production) பயன்படுத்தியது மாறி இப்போது ஒவ்வொருவரும் தனித்தனியாக பொருட்களை உற்பத்தி (individual production) செய்து பரிமாறிக் கொள்வது என்பதாக மாறுகிறது.
உணவு தானியங்கள், கூடை, பாண்டங்கள் போன்ற பொருட்களைச் செய்பவர்கள் எனப் பல்வேறு பொருட்களின் உற்பத்தியாளர்கள் தனித்தனியாக உற்பத்தி செய்து தங்களுக்குள் பண்டமாற்று மூலம் பரிவர்த்தனை செய்து கொள்கிறார்கள். இவர்கள் ஓரிடத்தில் சந்தித்து ஒருவருக்கொருவர் பயன்மதிப்பு (Use Value) கொண்ட பொருட்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள். சமூகங்களுக்கு இடையிலான பரிவர்த்தனைக்கு பல நகரங்களுக்குப் பயணம் செய்து வணிகம் செய்யும் சிலப்பதிகார கோவலனையும், மக்களுக்குள்ளான பரிவர்த்தனைக்கு குறிப்பிட்ட நாளை சந்தை நாளாக அறிவித்து சந்தை நடைபெறும் இடத்தில் மக்கள் கூடும் பழக்கத்தையும் இங்கே நினைவுபடுத்திக் கொள்ளலாம். பணம் தோன்றியிராத அந்தக் கால பண்டமாற்று முறையில் ஒரு பொருளைக் கொடுத்து இன்னொரு பொருளை எப்படி பரிமாறிக் கொண்டிருந்திருப்பார்கள்?


**பண்டமாற்றின் அளவுகோல்!**
ஒரு புரிதலுக்காக நான்கு படி நெல்லுக்கு ஒரு பானை எனப் பரிமாறிக் கொண்டதாகக் கொள்வோம். இந்த இரு பொருட்களின் பரிவர்த்தனையின் போது… 1. ஒருவர் பொருளுக்கு எதிராக இன்னொருவரின் பொருளை சமப்படுத்துகிறார்கள் (Eqaute); 4 படி நெல் = 1 பானை; 2. பானை நெல்லின் மதிப்பை அளக்கப் பயன்படும் அளவுகோல் ஆகிறது. எப்படி?
நாம் கத்திரிக்காய் வாங்கும்போது கடைக்காரர் கத்திரிக்காயை ஒருபுறமும் எடைக்கல்லை மறுபுறமும் வைப்பார். அப்போது 15 கத்திரிக்காய்கள் நிற்பதாகக் கொள்வோம். 15 கத்திரிக்காய்கள் = 1 கிலோ எடைக்கல். இந்த உதாரணத்தில் அளவுரீதியாக (Quantitative) 15 கத்திரிக்காய்கள் 1 கிலோ எடைக்கல்லுக்கு சமமானது என்பது பொருள். இங்கே அளவிடப்படும் பண்புரீதியிலான (Qualitative) காரணி என்பது நிறை (Weight). இதில் நாம் கண்களால் பார்த்து உணர்வது இரும்பின் எடையைவிட கத்திரிக்காயின் எடை குறைவு.
4 படி நெல் = 1 பானை… உதாரணத்தில் ஒரு பானைக்கு நான்கு படி நெல், இரண்டு பானைக்கு எட்டு படி நெல் என அளவுரீதியாக சமப்படுத்துவதில் சிக்கல் இல்லை. ஆனால், இங்கே சமப்படுத்தப்படும் பண்பு என்ன? இந்தப் பொருட்களை உருவாக்க செலுத்தப்படும் மனிதனின் உழைப்பு என்கிறார் மார்க்ஸ். இதன்படி பானை செய்ய செலுத்தப்படும் உழைப்பைவிட நெல்லுக்கு ஆகும் உழைப்பு குறைவு என்றாகிறது. ஆனால், நடைமுறையில் ஒரு பானையை ஒருவர் ஓரிரு நாட்களில் உருவாக்கிவிட முடியும். ஆனால், நெல்லை உருவாக்க எவ்வளவு நாட்களும் ஆட்களும் தேவை. இந்த ஒப்பீட்டு அளவுமுறை எப்படி சரி என்று கேள்வி எழலாம்.

**சாதாரண உழைப்பும் தனிச்சிறப்பான உழைப்பும்…**
இத்தனை ஆட்களும் ஒரு வயலில் இவ்வளவு நாட்கள் செலுத்தும் மொத்த உழைப்பு பல மூட்டை நெல்லாக உருவாகிறது. அப்படி என்றால் ஒரு மூட்டையில் உள்ள நான்கு படி நெல்லில் இருக்கும் உழைப்பின் அளவு என்பது குறைவு என அளவுரீதியில் பதில் சொல்லலாம். ஆனால், பண்புரீதியில் பானை, நெல் இரண்டில் பானை எப்படி உயர்வான இடத்தைப் பெறுகிறது என்ற கேள்வி தொக்கி நிற்கிறது. கத்திரிக்காய் உதாரணத்தில் கத்திரிக்காயையும் இரும்பையும் வைக்கும்போது அங்கே சமப்படுத்தப்படும் காரணி நிறை. கத்திரிக்காயைவிட இரும்பின் அடர்த்தி (Density) அதிகம் என்பதால் பண்புரீதியாக அது உயர்வான இடத்தைப் பெறுகிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. பானை, நெல் உதாரணத்தில் சமப்படுத்தப்படும் காரணி மனித உழைப்பு. இங்கே பண்புரீதியாக நெல்லைவிட பானை எப்படி உயர்வானது?
நெல்லை உற்பத்தி செய்ய தேவையான விதைத்தல், நடுதல், களையெடுத்தல், அறுத்தல், அடித்தல், தூற்றுதல் ஆகிய வேலைகளை அந்தந்த சமூகத்தில் உள்ள எவரும் செய்துவிட முடியும். ஆனால், சக்கரத்தைக் கொண்டு குறிப்பிட்ட வடிவில் பானையை உருவாக்குவது என்பது ஒரு சிலரால் மட்டுமே செய்ய முடியும் என்ற சூழலில் இவரின் உழைப்பு மற்றவர்களின் உழைப்பைவிட உயர்வான இடத்தைப் பெறுகிறது. எனவே, நெல் உற்பத்தியில் ஈடுபடுபவர்களின் உழைப்பு எல்லோராலும் செய்யக்கூடிய சராசரி உழைப்பு (Average Labour); பானை என்பது ஒரு சிலரால் மட்டுமே செய்யக்கூடிய தனிச்செயல்திறன்மிக்க உழைப்பு (Skilled Labour) ஆகிறது. எனவே பானை ஒப்பீட்டு அளவில் உயர்வான இடத்தைப் பெறுகிறது.
நெல்லையும், பானையையும் சமப்படுத்தும்போது நாம் பார்த்து உணர்வது சராசரி உழைப்பில் உருவான நெல்லைவிட தனிச்சிறப்பான உழைப்பில் உருவான பானை மதிப்புமிக்கது. எவ்வளவு மதிப்புமிக்கது? பல மூட்டை நெல்லில் உள்ள மொத்த சராசரி உழைப்பின் அலகான (Unit) 1 சராசரி உழைப்பு = 1 படி நெல் எனக் கொண்டால், பானை நான்கு மடங்கு மதிப்பு கொண்டது. அதாவது 1 தனிச்சிறப்பான உழைப்பு பானை = 4 சராசரி உழைப்பு நெல். ஆனால், இங்கே 1 கிலோ எடைக்கல் அளவைப்போல பானையை அடிப்படையாகக் கொண்ட அளவு நிரந்தரமாக இருக்க முடியாது. ஏனெனில் காலப்போக்கில் பானை செய்யத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது அதுவும் சராசரி உழைப்பின் நிலையைப் பெற்றுவிடும். மேலும் வேறு நபர்களால் தனிச்சிறப்பான உழைப்பைச் செலுத்தி புதிய பொருட்கள் சந்தைக்குக் கொண்டு வரப்படும். இப்படி ஒரு நூறுக்கும் மேற்பட்ட பொருட்கள் சந்தைக்கு வருகிறது எனக்கொண்டால், அப்போது அத்தனை பொருட்களையும் ஒவ்வொரு பொருளுக்கு எதிராகச் சமப்படுத்தி எவ்வளவு என நிர்ணயித்து பரிவர்த்தனை செய்துகொள்வது சாத்தியமா?
என்ன செய்திருப்பார்கள் என்று பார்ப்பதற்கு முன்னால் இப்படியான பரிவர்த்தனை நமக்குள் நிகழ்ந்ததா? எப்படி எப்போது நிகழ்ந்திருக்கும்?

**நாளை காலை 7 மணி பதிப்பில் பார்க்கலாம்.**

**[பகுதி 1](https://minnambalam.com/politics/2022/02/05/5/US-Afganisthan-issues-and-dollar-shanges-effect-in-India)**

**கட்டுரையாளர் குறிப்பு**

**பாஸ்கர் செல்வராஜ்**, தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்.
.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share