தமிழகத்தில் இந்த வருடம் நீட் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறுகிறது. ஆனால், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் தமிழகத்திலுள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகளின் நிலைப்பாடாக இருக்கிறது. சட்டமன்றத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட நிலையில், அது கிடப்பில் உள்ளது.
தற்போது, கொரோனா பரவலை கருத்தில் கொண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் அகில இந்திய அளவில் எழுந்துள்ளது. இந்த நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் தேர்வு மையங்கள் குறித்து தேசிய தேர்வு முகமை நேற்று தகவல் வெளியிட்டது.
அதன்படி, நாடு முழுவதும் நீட் தேர்வை எழுத 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் 238 மையங்களில் நடைபெறும் தேர்வில் 1,17,990 பேர் மட்டுமே தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். கடந்த வருடம் 1,34,714 பேர் நீட் தேர்வு எழுதியிருந்த நிலையில், தற்போது அதனைவிட 16,724 பேர் குறைவாக விண்ணப்பித்துள்ளனர். அதாவது தமிழகத்திலிருந்து நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை 12.41 சதவிகிதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக 50 நீட் தேர்வு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதுபோலவே டெல்லி, ராஜஸ்தான், கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதேவேளையில் பீகாரில் 28% பேரும், உத்தர பிரதேசத்தில் இருந்து 16% பேரும் கூடுதலாக நீட் தேர்வுக்கு இந்த ஆண்டு விண்ணப்பித்துள்ளனர்.நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் விரைவில் வெளியிடப்படும் என்றும், ஒரு அறையில் 24 மாணவர்களுக்கு பதில் 12 மாணவர்களே அமர வைக்கப்படுவார்கள் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
**எழில்**
�,