கொரோனா காரணமாக ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தை குறைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு , ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதனால் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.
2021-22ஆம் ஆண்டுக்கான வகுப்புகள் தற்போது ஆன்லைனில் நடந்து வருகிறது. இருப்பினும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வீட்டிற்குள்ளேயே முடங்கி இருப்பதாலும், ஆன்லைன் வகுப்புகளில் சரியாக பாடங்களை கற்று கொள்ள முடியாததாலும் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதாக கூறுகின்றனர். அதுமட்டுமில்லாமல் ஆன்லைனில் அனைத்து பாடங்களையும் நடத்துவது கால விரயத்தை அதிகரிப்பத்தோடு, ஆசிரியர்களுக்கும் பெரிய சவாலாக உள்ளது. இதுபோன்ற பிரச்சினைகளை சமாளிப்பதற்காக கடந்த ஆண்டில் பாடத்திட்டம் குறைக்கப்பட்டதுபோன்று, இந்தாண்டும் ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு நேற்று(ஆகஸ்ட் 13) வெளியிட்டுள்ள அரசாணையில், “ கொரோனா காரணமாக மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைக்கப்படுகிறது. ஒன்றாம் , இரண்டாம் வகுப்புகளுக்கு 50 சதவிகிதமும், மூன்றாம், நான்காம் வகுப்புகளுக்கு 51 சதவிகிதமும், ஐந்தாம் வகுப்புகளுக்கு 52 சதவிகிதமும், ஆறாம் வகுப்புக்கு 53 சதவிகிதமும், ஏழாம், எட்டாம் வகுப்புகளுக்கு 54 சதவிகிதமும், ஒன்பதாம் வகுப்புக்கு 62 சதவிகிதமும், பத்தாம் வகுப்பு 61 சதவிகிதமும், பதினோராம், பனிரெண்டாம் வகுப்புகளுக்கு 60-65 சதவிகிதமும் பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் எதிர்கால படிப்புகளுக்கு தேவையான பாடங்கள் குறைக்கப்படாமல், பிற பாடங்களின் தகவல்கள் குறைக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறக்கும் போது 45 முதல் 50 நாட்களுக்கு அனைத்து வகுப்புகளுக்கும் புத்தாக்க வகுப்புகள், இணைப்பு வகுப்புகள் நடத்த வேண்டும்.
கடந்த கல்வி ஆண்டில் (2020-21) முன்னுரிமை கொடுத்து அனுமதிக்கப்பட்ட பாடத்திட்டத்தை, இந்த கல்வி ஆண்டிலும் நடத்த வேண்டும்.
குறைக்கப்பட்ட பாடப்பகுதிகள் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்ப வேண்டும்.
குறைக்கப்பட்டுள்ள பாடத்திட்டங்கள் அடிப்படையில்தான் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் மற்றும் அந்த பகுதியிலிருந்துதான் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.
அதுபோன்று டிஎன்பிஎஸ்சி போன்ற போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் அவற்றுக்கான பாடப்பகுதிகளை தாங்களே படித்துக் கொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறப்பதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
**-வினிதா**
�,”