2021 தேர்தலுக்குப் பிறகே முதலீடு: கைவிரித்த தொழில் நிறுவனங்கள்!

Published On:

| By Balaji

முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு அமைத்த பணிக் குழுவின் பேச்சுவார்த்தையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் கசிகிறது.

உலகப் பொருளாதாரத்தில் கொரோனா நோய்ப் பரவல் ஏற்படுத்திய பெரும் தாக்கத்தால் பல வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள், இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இடம்பெயர முடிவு செய்துள்ளன. குறிப்பாக, ஜப்பான், தென் கொரியா, தாய்வான், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தொழில் நிறுவனங்கள் தமது தொழிற்சாலைகளை இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இடமாற்றம் செய்ய முடிவு செய்துள்ளன.

இந்த நிறுவனங்களை தமிழகத்துக்குக் கொண்டு வரும் நடவடிக்கைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடுத்து வருகிறார். முதலீடுகளை ஈர்ப்பதற்காக தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் சிறப்புப் பணிக்குழுவும் அமைக்கப்பட்டது.

அந்த வகையில் கடந்த மே 27ஆம் தேதி, சுமார் 15,128 கோடி ரூபாய் முதலீட்டுக்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுடன் கையெழுத்தானது. தமிழகத்தில் தொழில் தொடங்க ஆப்பிள், அமேசான், ஹெச்.பி உள்ளிட்ட 13 நிறுவனங்களுக்கு முதல்வர் கடிதம் எழுதியிருந்தார். உலகிலுள்ள முன்னணி வானூர்தி நிறுவனங்களின் தலைவர்களுக்கு தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தும் கடிதம் எழுதினார்.

இதுபோலவே தலைமைச் செயலாளர் தலைமையிலான சிறப்பு பணிக் குழு, முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்குவதில் உள்ள சாதக அம்சங்கள், அரசின் உதவிகள், சிறப்பு சலுகைகள் போன்றவற்றை எடுத்துக் கூறி பேச்சுவார்த்தை நடத்திவந்தது. தொடக்கத்தில் முதலீடுகளை ஈர்க்க சிறப்புப் பணிக்குழு மும்முரமாக முயற்சி செய்து வந்த நிலையில், தற்போது அதுபோன்ற பேச்சுவார்த்தைகள் ஏதும் நடைபெறவில்லை என்ற தகவல் வெளிவந்தது.

இதுதொடர்பாக தொழில் துறை வட்டாரங்களில் விசாரித்தோம்…

“சிறப்புப் பணிக்குழுவினர் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தினாலும் முதலீட்டாளர்கள் எதற்கும் பிடிகொடுக்கவில்லை. அடிக்கடி இவ்வாறு பேசி எங்களை தொந்தரவு செய்ய வேண்டாம். 2021 மே மாதத்திற்குப் பிறகுதான் தமிழகத்தில் முதலீடு செய்வது பற்றி நாங்கள் முடிவுக்கு வருவோம் என்று ஒரே வார்த்தையாக பதில் சொல்லிவிட்டார்கள். இதனால் பணிக் குழுவில் இருப்பவர்கள் அடுத்தகட்டமாக என்ன செய்வது என யோசித்து வருகிறார்கள்” என்று கூறுகின்றனர்.

2021ஆம் ஆண்டு மே மாதம் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தற்போது முதலீடு செய்தால் அது தங்களுக்கு வீண் பிரச்சினையாக அமையும். ஆகவே, தேர்தலில் யார் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றுகிறார்கள் என்பதைப் பார்த்துவிட்டு பிறகு முதலீடு செய்யலாம் என்பதுதான் முதலீட்டு நிறுவனங்களின் எண்ணம். ஆகவேதான் தொழில் துறையின் பேச்சுவார்த்தை வேகம் குறைந்துவிட்டதாகக் கூறுகிறார்கள் தொழில் துறையினர்.

**எழில்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share