சசிகலாவுக்கு ஆதரவு: பன்னீர் மகனை எடப்பாடியால் நீக்க முடியுமா?

Published On:

| By Balaji

ஓபிஎஸ் – இபிஎஸ் – இன்றைய நிலவரம்

சசிகலா விடுதலையாகி பெங்களூருவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரை வரவேற்பது தொடர்பான கருத்துகளால் அதிமுக அமர்க்களப்பட்டு வருகிறது. சசிகலா விடுதலை ஆவதற்கு ஒரு வாரம் முன்பு ஜனவரி 18ஆம் தேதி டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது பயணத்தின் முக்கிய சந்திப்பாக பிரதமர் மோடியைச் சந்தித்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை. அவர் அதிமுகவில் உறுப்பினரே இல்லை. அவர் மீண்டும் கட்சிக்குள் வருவதற்கு 100% வாய்ப்பே இல்லை” என்று அடித்துக் கூறினார்.

இந்த நிலையில் இது கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியேயும் விவாதப் பொருளான நிலையில், ஜனவரி 27ஆம் தேதியன்று சசிகலா விடுதலையாகிவிட்டார். ஆனாலும் அவர் இன்னமும் மருத்துவ சிகிச்சை நிமித்தம் பெங்களூருவில் இருக்கிறார்.

இந்த நிலையில், தமிழக துணைமுதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வத்தின் இரண்டாவது மகன் ஜெய பிரதீப், நேற்று (ஜனவரி 28) தனது ட்விட்டரில் சசிகலாவுக்கு வாழ்த்து சொல்லி வெளியிட்ட பதிவுதான் அதிமுகவை மீண்டும் கலக்கிக் கொண்டுள்ளது,

அவர் தனது ட்விட்டர் பதிவில், “பெங்களூருவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மதிப்புக்குரிய அம்மையார் திருமதி சசிகலா நடராஜன் அவர்கள் பூரண குணமடைந்து இனிவரும் காலங்களில் நல்ல உடல்நலம் பெற்று அறம் சார்ந்த பணிகளில் கவனம் செலுத்தி மன நிம்மதியுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன். இப்படிக்கு அம்மாவின் உண்மைத் தொண்டன் வி.ப. ஜெயபிரதீப்’ என்று கூறியிருக்கிறார்.

இந்தப் பதிவு நிச்சயம் அரசியல் ரீதியாகப் பேசப்படும் என்பதை நன்கு அறிந்தே கூடவே ஒரு பின் இணைப்பையும் ஒரு சேஃப்டிக்காக சேர்த்திருக்கிறார் ஜெயபிரதீப். அதாவது, ‘இது அரசியல் சார்ந்த பதிவல்ல, என் மனதில் தோன்றிய மனிதாபிமானம் சார்ந்த பதிவு’ என்று ஒரு குறிப்பையும் கோர்த்திருக்கிறார் ஓ.பன்னீரின் மகன்.

ஆனாலும் அதிமுகவுக்குள் இது சர்ச்சையாகியிருக்கிறது. இதற்குப் பின்னணியாகப் பல விஷயங்களைக் கூறுகிறார்கள் தென் மாவட்ட அதிமுகவில்.

“சசிகலாவை அதிமுகவில் சேர்க்க முடியாது என்று டெல்லியில் எடப்பாடி பேட்டி கொடுத்தபோதும் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் இதுபற்றி எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில்தான் மறுநாள் ஜனவரி 20ஆம் தேதி வெளியான அமமுகவின் நமது எம்.ஜி.ஆர். நாளிதழில், 7ஆம் பக்கத்தில் அம்புஜம்-பங்கஜம் என்ற பெயரில் ஒரு கருத்துச் சித்திரம் வெளியிடப்பட்டது.

அதில் அம்புஜம் “அதிமுகவில் சின்னம்மாவுக்கு இடமில்லை என்று கூவத்தூர் பழனிசாமி கூவியிருக்கிறாரே?” என்று கேட்க, அதற்கு பங்கஜம், “இணை ஒருங்கிணைப்பாளர்தானே அவர்? ஒருங்கிணைப்பாளர் என்ன சொல்லப் போறாருன்னு பார்ப்போம். அதன் பிறகு உரிய பதிலளிப்போம்” என்று கூறுவதாக அந்த கருத்துச் சித்திரம் எழுதப்பட்டிருக்கிறது.

அதாவது சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை என்ற எடப்பாடியின் கருத்துக்கு ஓபிஎஸ் இதுவரை ஏதும் சொல்லவில்லை. ஏற்கனவே சசிகலாவுக்கு அதிமுகவில் இடமுண்டா என்ற கேள்விக்கு, ‘அதுபற்றி தலைமை முடிவு செய்யும்’ என்று ஒருமுறை பதில் அளித்திருந்தார் ஓபிஎஸ்.

இந்த நிலையில் எடப்பாடியின் கருத்து பற்றி ஓபிஎஸ் பதில் கூறிய பிறகு அடுத்து பதிலளிப்போம் என்று அமமுக கூறியிருப்பது அதிமுகவிலும், அமமுகவிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போதும் ஓபிஎஸ் பதிலளிக்கவிலலை.

இதற்கிடையே சசிகலா விடுதலையை ஒட்டி அவரை வரவேற்பதற்காக தென் மாவட்டங்களில் இருந்து பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் பலர் பெங்களூரு செல்வதற்காக கார்களிலும், பஸ்களிலும் தயாராகிவிட்டனர். ஆனால் கடைசி ஒரு வாரத்தில் நடந்த சசிகலாவின் உடல் நிலை மாற்றத்தை அடுத்து அவர் விடுதலையாவது தள்ளிப் போனது. அதனால் பன்னீர் ஆதரவாளர்களின் வரவேற்பு வாகனங்களும் பெங்களூரு செல்வதற்காக காத்திருக்கின்றன.

மேலும், ஜனவரி 27ஆம் தேதி நடந்த ஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழாவுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் புறப்படும் பேருந்துகளின், கார்களின்,வேன்களின் பதிவெண்கள் பட்டியலை தலைமை கேட்டிருந்தது. இதன்படி ஒப்படைக்கப்பட்ட பதிவெண் பட்டியலை ஆய்வு செய்து பார்த்தபோது தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்த வாகனங்களின் எண்ணிக்கை மற்ற பகுதிகளைவிட குறைவாக இருந்ததாக முதல்வருக்கு தகவல்கள் சென்றிருக்கின்றன.

இந்த நிலையில்தான் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தயார் படுத்தி வரும் ஓபிஎஸ்ஸின் இரண்டாவது மகன் ஜெயபிரதீப் சசிகலாவை வாழ்த்தி செய்தி வெளியிட்டிருக்கிறார்.

நேற்று இரவே இந்தத் தகவல் முதல்வருக்குத் தெரியப்படுத்தப்பட்டதும் எடப்பாடி கோபமாகியிருக்கிறார். ‘அவர்தான் முதல்ல இவங்களை எல்லாம் எதிர்த்து வெளியில வந்தாரு. இப்ப அண்ணன் சாதி அரசியல் பண்ண ஆரம்பிச்சிட்டாரோ’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசியிருக்கிறார் எடப்பாடி” என்கிறார்கள்.

நேற்று முன்தினம் சசிகலா விடுதலைக்கு வாழ்த்து தெரிவித்து சுவரொட்டி அடித்த நெல்லை மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் சுப்பிரமணிய ராஜாவை கட்சிக் கட்டுப்பாடுகளை மீறியதாக கட்சியை விட்டே நீக்கினார்கள் ஓபிஎஸ்ஸும், ஈபிஎஸ்ஸும்.

இந்த நிலையில் அதே ரீதியில் போஸ்டருக்குப் பதில் ட்விட்டர் மூலம் சசிகலாவுக்கு வாழ்த்து சொன்ன ஓபிஎஸ்ஸின் மகன் ஜெயபிரதீப் கட்சியில் இருந்து நீக்கப்படுவாரா, கட்சியின் ஒருங்கிணைப்பாளரின் மகனை கட்சியில் இருந்து நீக்க முடியுமா என்ற பரபரப்பு அதிமுகவுக்குள் அடர்த்தியாக எழுந்திருக்கிறது. ஆனால் இப்படி ஒரு கேள்வி எழும் என்று தெரிந்துதான் தனது விளக்கத்தையும் சேர்த்தே அந்தப் பதிவில் வெளியிட்டு மனிதாபிமான பதிவு என்று குறிப்பிட்டுவிட்டார் ஜெயபிரதீப்.

ஜெயபிரதீப்பை முன்வைத்து இன்னும் பலர் சசிகலாவுக்கு வாழ்த்து சொன்னால் இதுவே அதிமுகவில் பெரும் விவகாரமாக வெடிக்கும்.

**-வேந்தன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share