முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் தொடர்பான 58 இடங்களில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீஸார் இன்று (ஜனவரி 20) காலை முதல் ரெய்டு நடத்தினார்கள். பல இடங்களில் ரெய்டு முடிந்துவிட்டாலும், மாலையைத் தாண்டியும் சில இடங்களில் ரெய்டு தொடர்கிறது.
இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறை வெளியிட்ட செய்தியில்,
“சென்னை உயர்நீதிமன்றத்தில் எம் கிருஷ்ணமூர்த்தி என்பவர்… தான், லஞ்ச ஒழிப்புத் துறையிடம் முன்னாள் அமைச்சர் அன்பழகன் பற்றி அளித்த ஊழல் புகார்கள் தொடர்பாக அன்பழகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று மனு செய்திருந்தார்.
கேபி அன்பழகன் அமைச்சராக இருந்தபோது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தனது குடும்பத்தினர் பெயரிலும் தனது உறவினர்கள் பெயரிலும் பினாமிகள் பெயரிலும் தமிழ்நாட்டிலும் தமிழ்நாட்டைச் சுற்றி உள்ள மற்ற மாநிலங்களிலும் ஏகப்பட்ட சொத்துக்கள் வாங்கியிருப்பதாக அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையில் இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய விசாரணையில் அன்பழகன் தனது பெயரிலும் தனது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் தான் அமைச்சர் பதவியிலிருந்த 27- 4- 2016 முதல் 15- 3- 2021 காலகட்டத்தில் தன் வருமானத்திற்கு அதிகமாக 11 கோடியே 32 லட்சத்து 95 ஆயிரத்து 755 ரூபாய் மதிப்பில் சொத்து சேர்த்ததாக கண்டறியப்பட்டது.
இதையடுத்து ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் அன்பழகன் மீதும் அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், சந்திரமோகனின் மனைவி வைஷ்ணவி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் அடிப்படையில் இன்று (ஜனவரி 20) தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் அதிகாரிகளால் தர்மபுரியில் 53 இடங்கள், சேலத்தில் ஒரு இடம் சென்னையில் மூன்று இடங்கள், தெலங்கானா மாநிலத்தில் ஒரு இடம் என அன்பழகனுக்கு தொடர்புடைய 58 இடங்களில் இன்று சோதனை நடத்தப்பட்டது.
சோதனையில் பல்வேறு பொருள்களும் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. மேலும் இரண்டு கோடியே 87 லட்சத்து 98 ஆயிரத்து 650 ரூபாய், சுமார் 6.63 கிலோ தங்க நகைகள், 13.8 5 கிலோ வெள்ளி மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் கணக்கில் காட்டப்படாத ரூ.2.65 கோடி மதிப்புள்ள ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன” என்று லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
**-வேந்தன்**
�,