மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பிக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒன்றிய அரசின் புதிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த நவம்பர் மாதம் முதல் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராடி வருகின்றனர். விவசாயிகளுடன் ஒன்றிய அரசு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை.
இந்த சூழ்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் நாடாளுமன்றத்துக்கு வெளியே தினமும் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்தனர். ஆனால், கொரோனாவை காரணம் காட்டி விவசாயிகளுக்கு இந்த போராட்டத்துக்கான அனுமதி மறுக்கப்பட்டது.
இதையடுத்து, வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி இன்று முதல் தினந்தோறும் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக தினந்தோறும் 200 போராட்டக்காரர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தையொட்டி ஜந்தர் மந்தரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது மற்றும் விவசாயிகள் போராட்டம் குறித்து அவையை ஒத்திவைத்து விவாதம் நடத்த வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் நாடாளுமன்றத்தில் அவை ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியிருந்தார்.
இந்நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் காந்தி சிலை முன்பு ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று(ஜூலை 22) தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சசிதரூர், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, ஆதீர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர். ”விவசாயிகளை காப்பாற்றுவோம், “நாட்டைக் காப்பாற்றுவோம்” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி, அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர் .
**-வினிதா**
�,”