கார்த்திக் ராம் மனோகரன் – தமிழில்: தீபலட்சுமி
**முடிவுரை**
ழான் பால் சார்த்தர் பற்றிய ஆய்வில் பாட்ரிக் பர்ட் இப்படி எழுதுகிறார்:
“புத்திஜீவிகள் எவ்வளவுதான் தங்கள் கொள்கைகளையும் சுய ஆளுமையையும் ஒரே கோட்டில் நிலைப்படுத்த கவனத்துடன் கணக்கிட்டு செயல்பட்டாலும், அவர்களது அறிவுசார் செயல்பாடுகளின் விளைவுகள் எல்லாமே அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் இருப்பது சாத்தியமில்லை” (Baert – The Existentialist Moment – 175)
இப்போது நாம் கேட்கலாம்… அத்தகைய புத்திஜீவிகளை மதிப்பீடு செய்ய எதை முக்கிய காரணியாகக் கொள்ள வேண்டும்? அவர்களது சிந்தனைகளையும் செயல்பாடுகளின் உண்மையான நோக்கத்தையும் கருத்தில் கொள்வதா அல்லது சிந்தனைகளின் பின்விளைவுகளைக் கணக்கிலெடுப்பதா?
அல்ஜீரியா சுதந்திர நாடாக உருவெடுப்பதை சார்த்தர் ஆதரித்தார். அல்ஜீரியாவின் விடுதலை அந்நாட்டு மக்களின் ஒற்றுமைக்கும் சகோதரத்துவத்துக்கும் வழிவகுக்கும் ஒரு புதுயுகத்தின் பிறப்பு என்று நம்பினார். ஐரோப்பாவில் சோஷலிசத்தைப் பரப்புரை செய்ததோடு 1968இல் மாணவர்கள் எழுச்சி பிரான்சில் புரட்சியை நிகழ்த்தக்கூடும் என்று அசாத்தியக் கனவு கண்டார். இந்தச் செயல்பாடுகள் எல்லாம் தோல்வியுற்றதால் சார்த்தரின் அரசியல் சிந்தனைகளைப் புறந்தள்ளிவிட முடியுமா? இவற்றைத் தொடர்ந்து, பிரான்சில் தலையெடுத்த இனவெறி இயக்கங்களைத் தவிர்க்கத் தவறியதாக மட்டுமல்லாமல் அவரே அதற்கு முழுப்பொறுப்பு என்றும் சார்த்தரைக் குற்றம்சாட்ட முடியுமா?
இந்த ஆய்வுக்கட்டுரை தலித்துகளைப் பற்றி பெரியாரின் நிலைப்பாட்டைக் குறித்து ஒரு முறையான புரிதலை வழங்க முயன்றிருக்கிறது. **பெரியார் அம்பேத்கரை நாடி ஏற்றுக்கொண்டு, அவரது சிந்தனைகளைத் தமிழகத்தில் பரப்புரை செய்ததோடு, தலித்துகளுக்கு மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட ஏனைய வகுப்பினருக்கும் அம்பேத்கர் ஒப்பற்ற தலைவர் என்று வெளிப்படையாகப் பேசி வந்திருக்கிறார்.**
தலித்துகளுக்கு வகுப்புவாரியான உரிமைகள் வழங்கவும் சட்டப்பேரவையிலும், ஏனைய அரசு நிறுவனங்களிலும் அவர்களுக்குப் பிரதிநிதித்துவம் கிடைக்கவும் குரல் கொடுத்திருக்கிறார். தலித்துகளின் உரிமைப் போராட்டத்தையும் எழுச்சியையும் எந்த வழியிலும் ஆதரித்தார். (மதமாற்றம் மற்றும் மதச்சார்பற்ற வழியிலும்). இறுதியாக, அனைத்து சாதிகளும் சமம் என்று கூறாமல் சாதிகளையே முற்றாக அழிக்க வேண்டுமென்று போராடினார்.
**தமிழக சட்டப்பேரவையில் தலித் பிரதிநிதிகள் இடம்பெற்றிருப்பதற்கும், இந்தியாவிலேயே அதிக அளவிலான தலித் தொழிலதிபர்கள் இருப்பது தமிழ்நாட்டில் என்பதற்கும் (தி ஹிந்து, 11 செப்டம்பர், 2015) எப்படி பெரியாரையே முழு காரணம் என்று சொல்வது உண்மையாகாதோ, (இவையெல்லாமே அவரது நோக்கம்தான் என்றாலும்) அதே போல, தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்வதற்கும், சாதிக் கட்சிகள் பெருகி வளர்ந்ததற்கும் அவரைக் குற்றம்சாட்ட முடியாது; இவை எல்லாம் அவரது நோக்கங்களுக்கு எதிரான, அவரது கட்டுப்பாட்டில் இல்லாத விளைவுகள்.**
தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகளை நிகழ்த்தும் சாதிய நிறுவனங்கள் பெரியாரின் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிராகச் செயல்படுகின்றன, அவரது வழியைப் பின்பற்றி அல்ல. தலித்துகள் மீதான பெரியாரின் பார்வைகளை ஒருங்கிணைத்து வாசித்தால் பெரியாரியம் என்பது பார்ப்பனர்களிடமும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரிடமும் நிலவிய சாதிமனப்பான்மையை எதிர்க்கும் சமூக அரசியல் கோட்பாடு மட்டுமல்ல, தலித் எழுச்சியையும் வெகுவாக ஊக்குவிக்கும் சிந்தனை என்பது புலப்படும்.
**முதுகுளத்தூர்**
பெரியார் வாழ்வில் நிகழ்ந்த இரு முக்கிய நிகழ்வுகளை இங்கே திரும்பிப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும். 1957இல் நடந்த முதுகுளத்தூர் கலவரத்துக்கும் 1968இல் நடந்த கீழ்வெண்மணி படுகொலைக்கும், பெரியாரின் எதிர்வினைகள் என்னவாயிருந்தன என்று பார்ப்போம்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த முதுகுளத்தூர் கலவரம் என்பது பள்ளர் சமூகப் போராளி இம்மானுவேல் சேகரனை, தேவர் சமூகத்தைச் சேர்ந்த தென் தமிழகத்தின் பெருஞ்செல்வாக்கு மிகுந்த முத்துராமலிங்கத் தேவர் (இனி முத்துராமலிங்கம் என்றே குறிப்பிடப்படும்) தன் ஆட்களை ஏவிக் கொன்றதாகக் குற்றம்சாட்டப்பட்டதன் அடிப்படையில் வெடித்த கலவரமாகும். இக்கலவரங்களில் தேவர், குறிப்பாக மறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர்களை, குறிப்பாகப் பள்ளர்களைக் குறிவைத்துத் தாக்கியதில் பலர் உயிரிழந்தனர்; பலத்த பொருட்சேதங்கள் உண்டாயின. ஆனால் பள்ளர்களும் எதிர்த்துத் தாக்குதல் நடத்தினர். அன்றைய காமராசர் அரசின் காவல் துறையானது கலவரம் செய்த மறவர் சாதியினரை இரும்புக்கரம் கொண்டு அடக்கியது. சாதி ஆதிக்கவாதியான முத்துராமலிங்கம், கலவரத்துக்கு முன்பாக காமராசர் மீதும் நாடார் சாதியினர் மீதும் காழ்ப்பை உமிழ்ந்ததுடன் காங்கிரஸைத் தீவிரமாக (தேவைப்பட்டால் வன்முறையைப் பயன்படுத்திக்கூட) எதிர்க்கும்படி தேவர்களைத் தூண்டிவிட்டிருந்தார். (Manikumar – Murder in Mudukalathur – 101)
**கலவரம் நடந்தபோது, பெரியார் தலித்துகளின் பக்கம் உறுதியாக நின்றதுடன் சாதி வன்கொடுமைகளைத் தூண்டிய தேவர் சாதித்தலைவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கிறார். ஏறத்தாழ அனைத்து எதிர்க்கட்சிகளும், (கம்யூனிஸ்டு கட்சிகள் உட்பட) முத்துராமலிங்கத்தை ஆதரித்தபோது, பெரியார், முத்துராமலிங்கம் கைது செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததோடல்லாமல், ராமநாதபுரத்தில் மேற்கொண்டு வன்முறைகள் நிகழாமல் தடுக்க ராணுவச்சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறார்.** (Manikumar – Murder in Mudukalathur – 104)
முத்துராமலிங்கம் கைது செய்யப்பட்டபோது, அக்கைதினைக் குறித்து, “முன்கூட்டியே இவரைத் தனிமைப்படுத்தியிருந்தால் இத்தனை உயிர்கள் பலியாகியிருக்குமா? இவ்வளவு பொருட்சேதம் ஏற்பட்டிருக்குமா? இத்தனை ஆதி திராவிட (இங்கு பெரியார் ஆதிதிராவிடர்கள் என்று அனைத்துப் பட்டியிலின சாதியினரையும் குறிப்பிடுகிறார்) குடும்பங்கள் ஊரை விட்டு வெளியேறித் தவிக்குமாறு ஏற்பட்டிருக்குமா?” என்று ஆதங்கப்படுகிறார். (ப.திருமாவேலன் – ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா? – 347)
காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஐந்து மறவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் காவல்துறையினரின் நடவடிக்கையை ஆதரித்த பெரியார், அதனால்தான் கலவரம் முடிவுக்குக்கொண்டு வரப்பட்டதாகவும், பல நூறு உயிர்கள் காப்பாற்றப்பட்டதாகவும் வாதிடுகிறார். (Ramasamy – Periyar Kalanjiyam No. 10 – 291) இந்த அறிக்கைகளின் வாயிலாக வலிமை வாய்ந்த தேவர் சாதியினரின் தீவிர எதிர்ப்புக்குப் பெரியார் ஆளாகிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, தேவர்களின் ஆதிக்கம் மிகுந்த மதுரையில் ஒரு கூட்டத்தில் பேசிய பெரியார், தங்களைச் சத்திரியர்களாக வரித்துக்கொள்ளும் தேவர்கள் முதலிய இடைநிலை சாதிகளின் போக்கை ஏளனம் செய்கிறார். தேவர்களை அவமானப்படுத்தியதாகக் கருதப்பட்ட இந்தப் பேச்சு பலத்த சலசலப்பை ஏற்படுத்தியது; எதிர்ப்பு முழக்கங்கள் எழுப்பப்பட்டு பெரியார் மீது கற்களும் எறியப்பட்டன. (ப.திருமாவேலன் – ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா? – 358)
**கீழ்வெண்மணி**
25 டிசம்பர் 1968இல் கீழ்வெண்மணியில் நில உரிமையாளர்கள், கோபாலகிருஷ்ண நாயுடு என்பவரின் தலைமையில், 44 தலித் விவசாயக் கூலிகளை உயிரோடு எரித்துக் கொன்றனர். கோபாலகிருஷ்ணன் நெல் உற்பத்தியாளர் சங்கத் தலைவராகவும் காங்கிரஸ் ஆதரவாளராகவும் இருந்தார். படுகொலை நடந்தபோது 90 வயதான பெரியார் சென்னை பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு 30ஆம் தேதி வீடு திரும்பினார். இருப்பினும் டிசம்பர் 28ஆம் தேதி விடுதலை இதழில் படுகொலையைக் கண்டித்து, “இந்தியாவை ஆள இந்தியருக்குத் தகுதி இல்லை! ஜனநாயகத்தால் ஏற்பட்ட பெருங்கேடு” என்ற கட்டுரை பெரியாரின் கையொப்பத்துடன் வெளியாகியது. இப்படியான கொடூரமான குற்றங்களைத் தண்டிக்கப் போதுமான சட்டங்கள் இல்லை என்றும், நாட்டில் நிலவும் நீதிமன்றங்கள் சட்டத்தையும் நீதியையும் பிரித்து விட்டன என்றும் அவரது ஆதங்கத்தைப் பதிவு செய்கிறது. (ப.திருமாவேலன் – ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா? – 290)
இந்த வன்முறையைக் கண்டித்த, திராவிட முன்னேற்றக்கழகத்தைச் சார்ந்த, அந்நாளைய முதலமைச்சர் சி.என்.அண்ணாதுரை, சம்பவத்தில் தொடர்புடைய அத்தனை பேரும் கடுமையாகத் தண்டிக்கப்படுவதில் அரசு உறுதியாகச் செயல்படும் என்று தெரிவித்தும் அப்படுகொலைச் சம்பவத்தைக் காட்டுமிராண்டித்தனமானதென்றும் கொடூரமானதென்றும் விவரித்தார். (ப.திருமாவேலன் – ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா? – 291) அப்போது அண்ணா புற்று நோய்க்கான சிகிச்சையில் இருந்ததும், அடுத்த ஒரு மாதத்துக்குள் மரணமெய்தியதும் குறிப்பிடத்தக்கது.
கோபாலகிருஷ்ணனும் அவரது கூட்டாளிகளும் விரைவில் கைது செய்யப்பட்டாலும், போதிய ஆதாரமில்லை என்று விடுவிக்கப்பட்டனர். இந்திய நீதிமன்றத்தின் இந்த மெத்தனமான போக்கு பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
அத்தகைய விமர்சகர்களில் ஒருவரான **மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மைதிலி சிவராமன், பொருளாதாரம் குறித்து போதிய புரிதல் இல்லாத காரணத்தால் பெரியாருக்குச் சாதி குறித்தும் முழுமையான புரிதல் இல்லை என்று வாதம் செய்கிறார். (Sivaraman, Haunted by Fire)
சாதி என்பதைச் சமூகப் பிரச்சினையாக அணுகிப் பயில்வதற்கு பொருளாதார அறிவு, உளவியல் பகுப்பாய்வு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனாலும், பெரியாரும் அம்பேத்கரும் தலித்துகள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகத் தங்கள் எழுத்துகளில் வெளிப்படுத்திய நுட்பமான நுண்ணுணர்வைக் கொண்டிராமல், ஆதிக்க சமூகப் பின்னணியில் இருந்துகொண்டு, வர்க்கம் குறித்த பார்வை மட்டுமே மைதிலி சிவராமன் கொண்டிருந்தாரோ என்ற எண்ணம் தோன்றுவதை மறுக்க முடியவில்லை.**
மேலும், அறிவியல் ரீதியாகப் பொருளாதாரப் பிரச்சினைகளை அணுகிய சிபிஎம் அரசு இந்திய விடுதலைக்குப் பின்பு மேற்கு வங்கத்தில் மரிஜ்ஜாப்பியில் ஆயிரக்கணக்கான தலித்துகளைப் படுகொலை செய்தது வரலாற்றில் அவர்கள் மீது என்றும் படிந்திருக்கும் சிவப்புக் கறை. (Mandal, ‘40 Yrs Ago, The Left Mercilessly Massacred Dalit Bengalis.’)
கீழ்வெண்மணி படுகொலை பல எழுத்தாளர்களின் புதினங்களுக்கும் வித்திட்டது. சமீபத்தில் வெளிவந்த அப்படியொரு புதினம்தான் மீனா கந்தசாமியின் குறத்தியம்மன் (The Gypsy Goddess). இந்தப் புதினத்தில், கொல்லப்பட்ட தலித்துகளின் குரலாக ஒலிக்கும் கதை சொல்லி, “பெரியார் நாகப்பட்டினம் வந்தபோது கோபாலகிருஷ்ண நாயுடுவைச் சென்று சந்தித்ததாகக் கேள்விப்பட்டு பெரிதும் ஏமாற்றமடைந்தோம்” என்று கூறுகிறார். (Kandasamy, The Gypsy Goddess, 251) பெரியாரின் ஆதரவு கோபாலகிருஷ்ணனுக்கு இருந்ததற்கு இருவரும் ஒரே சாதி (பெரியார் பிறப்பால் பலிஜா நாயுடு சாதியைச் சேர்ந்தவர்) என்பதுதான் காரணம் என்றும் நாவலாசிரியர் குற்றம்சாட்டுகிறார்.
மூத்த பத்திரிகையாளர் திருமாவேலன் இதற்கு முற்றிலும் புறம்பான சாட்சியங்களைப் பெரியாரின் சமகால ஆளுமைகளின் வாயிலாகப் பதிவு செய்கிறார் – **கோபாலகிருஷ்ணன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், பெரியாரைச் சந்திக்க (பெரியார் நாகப்பட்டினம் வந்திருந்தபோது) விரும்பிச் செய்தி அனுப்பி இருக்கிறார்; ஆனால், பெரியார் அதற்குத் திட்டவட்டமாய் மறுத்து விடுகிறார். (ப.திருமாவேலன் – ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா? – 301) புனித பாண்டியனும் இதற்கு இசைவாக, பெரியார் நில உரிமையாளர்கள் சார்பாக இருந்ததற்கான எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்றும், பெரியாரின் ஆதரவாளர்கள் சிலர், பெரியாரின் அமைதி வழிப் போராட்டம் எனும் கோட்பாட்டை மீறி, கீழ்வெண்மணி படுகொலைக்குக் காரணமான கோபாலகிருஷ்ணனைக் கொல்லத் திட்டமிட்டு அதை நிறைவேற்றினர் என்றும் கூறுகிறார்** (த ஒயர், 15 அக்டோபர், 2017). 1980இல் கோபாலகிருஷ்ணன் தீவிர இடதுசாரி மற்றும் திராவிட இயக்கத்தைச் சேர்ந்த ஒரு குழுவினரால் கொல்லப்படுகிறார். அதில் குறைந்தது ஒன்பது பேராவது தீவிர பெரியாரிய ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. (ப.திருமாவேலன் – ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா? – 330)
போராட்ட உணர்வுமிக்க தலித் எழுச்சியையும், எல்லா சாதியிலும் ஆணாதிக்கவாதிகளைக் கடுமையாக எதிர்க்கவும் தூண்டிய பெரியாரை, இந்த எதிர்வினைக்கு வேண்டுமானால் நிச்சயம் பொறுப்பாக்கலாம்.
(நிறைவுற்றது)
**நன்றி: விலாசினி**
**முந்தைய பகுதிகள்**
[பகுதி 1](https://minnambalam.com/politics/2020/07/20/20/periyar-ambedkar-dali-politics-special-article)
[பகுதி 2]( https://minnambalam.com/politics/2020/07/21/11/Periyar-Ambedkar-special-article)
[பகுதி 3](https://minnambalam.com/politics/2020/07/22/15/periyar-ambedhkar-dalit-issues-special-article)
[பகுதி 4](https://minnambalam.com/politics/2020/07/23/25/periyar-Ambedkar-dalit-caste-hindus-issues)�,