ட்விட்டர் பதிவுகள்: முதல்வரின் உடனடி ரியாக்‌ஷன், ஆக்‌ஷன்!

politics

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் 571 பேருடன் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதனால் கொரோனா வைரஸ் பாதிப்பு மேலும் பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு பல தரப்பினரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர். 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் ஏழை தொழிலாளர்கள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தங்கியுள்ளவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கான உணவு உள்ளிட்ட தேவைகளுக்காக வெளிமாநில எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களும், தமிழகத்தைச் சேர்ந்த செயற்பாட்டாளர்களும் ட்விட்டரில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தனக்கு வந்த கோரிக்கைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுப்பதாக ரியாக்‌ஷன் செய்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் செயல் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை நிர்வாகியான இடும்பாவனம் கார்த்தி இன்று (ஏப்ரல் 5) தனது ட்விட்டர் பக்கத்தில், “இடும்பாவனம், அடஞ்சவிளாகம் பகுதியில் குடிசைகள் அமைத்து பிழைத்து வரும் 40க்கும் மேற்பட்ட நரிக்குறவ குடும்பங்கள் ஊரடங்கு உத்தரவால் உணவுக்கே வழியின்றி சில நாட்களாக அல்லாடி வருகின்றனர். அரசும், அதிகாரிகளும் இதனைக் கவனமெடுத்து உடனடியாக அவர்களுக்கு உதவ வேண்டும் எனக் கோருகிறோம்” என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு அடுத்த ஒரு மணி நேரத்தில் தனது ட்விட்டரில் பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “அவர்களில் ஒருவரின் தொலைபேசி எண்ணை பகிருங்கள், அந்த பகுதியில் இருக்கும் மக்களுக்கு தேவையான உணவு பொருட்களை உடனடியாக கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். நன்றி” என்று பதிலளித்தார்.

அடுத்த கவுசிக் என்பவர், பெரம்பலூர்-எறையூர் நரிக்குறவர் காலனியில் உள்ள 25 நபர்கள் ஆந்திர மாநிலத்திற்கு பிழைப்பு தேடி வேலைக்கு சென்றவர்கள் உணவு, தங்குமிடம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள் என்று குறிப்பிட, “அவர்களுக்கு உடனடியாக உதவுமாறு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன்” என்று பதிலளித்தார். இதுபோலவே மற்ற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு உதவுமாறு அந்தந்த மாநிலத் தலைவர்கள் இட்டிருந்த பதிவுகளுக்கு பதிலளித்துள்ளார். முதல்வரின் இந்த நடவடிக்கையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

**எழில்**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *