முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது ஏற்பட்டு வருவதாக அதிமுகவில் சலசலப்புகள் எழுந்து அடங்கிக்கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில்தான் நேற்று (மார்ச் 24) தேர்தல் பரப்புரை செய்வதற்காக முதல்வரின் மாவட்டமான சேலத்துக்கு வந்தார் துணை முதல்வரும் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம்.
சேலம் மாநகரில் பிரச்சாரம் செய்த ஓ.பன்னீர்செல்வம் பின் முதல்வரின் சொந்தத் தொகுதியான எடப்பாடிக்குச் சென்றார். அங்கே முதல்வர் வேட்பாளரான எடப்பாடி பழனிசாமிக்காக வாக்கு சேகரித்தார். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வெகுவாகப் புகழ்ந்தார் ஓ.பன்னீர் செல்வம்.
“தற்போது நல்லாட்சி நடத்திவரும் முதல்வர் அண்ணனின் ஆட்சி தொடர வேண்டும். அம்மா வழியில் தமிழகத்தைத் தடம்பிறழாது வழிநடத்திச் சென்றுகொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி” என்று பேசிய ஓ.பன்னீர் தமிழக அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக செய்திருக்கும் சாதனைகளையும் பட்டியலிட்டார். குறிப்பாக தொழில்துறையில் சுமார் 26,000 புதிய தொழிற்சாலைகளுக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்திருப்பதையும் பிரச்சாரத்தில் சுட்டிக்காட்டினார்.
எடப்பாடிக்கு வந்து ஓ.பன்னீர் பிரச்சாரம் செய்தது முக்கியத்துவம் என்றால், இதற்கு முன்பு நேற்று காலை தனக்காக பிரச்சாரம் செய்ய வந்த ஓ.பன்னீரை சேலத்தில் வரவேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி சில நிமிடங்கள் முக்கிய ஆலோசனை நடத்தியிருக்கிறார். நேற்று காலை சீக்கிரமே கரூர் புறப்பட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் ஐந்து ரோடு அருகே தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைத் தேடிச் சென்று சந்தித்தார். சேலத்துக்கு வந்ததற்கு வரவேற்பு தெரிவித்தார். பின் இருவரும் சுமார் பத்து நிமிடங்களுக்கும் மேல் முக்கிய ஆலோசனை நடத்தினார்கள்.
இருவரும் தனித்தனியாகத் தமிழகம் எங்கும் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கும் நிலையில் இப்படி திடீரென சந்தித்து ஆலோசித்தது முக்கியத்துவம் பெறுகிறது.
அந்த ஆலோசனையில் சசிகலாவை மீண்டும் கட்சியில் இணைப்பது பற்றி பேசப்பட்டதாக சேலத்து வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது குறித்து ஓ.பன்னீர் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். ஆனால், எடப்பாடி கடந்த ஜனவரி மாதமே இதுகுறித்து வெளிப்படையாக மறுப்பு தெரிவித்துவிட்டார். அதன்பின் தேர்தல் பிரச்சாரங்களிலும் வெளிப்படையாக சசிகலா பற்றி விமர்சனம் செய்துவந்தார். ஆனால், கடந்த சில வாரங்களாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சசிகலா பற்றியோ, தினகரன் பற்றியோ பெரிதாகப் பேசுவதில்லை. ஸ்டாலினுக்கு பதில், ஸ்டாலின் மீதான தாக்குதல், தமிழக அரசின் சாதனைகள் ஆகியவற்றைச் சுற்றியே முதல்வரின் பிரச்சாரம் அமைந்துவருகிறது.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் ஓ.பன்னீர் செல்வம் அளித்த பேட்டியொன்றில், ‘அதிமுகவில் இப்போது இருக்கும் செட்டப்பை ஏற்றுக்கொண்டால் அதிமுகவில் அவர் சேர்வதை பரிசீலிக்கலாம்’ என்று கூறியிருந்தார். இதுகுறித்து முதல்வரும் வெளிப்படையாகக் கருத்து தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று சேலத்தில் இருவரும் சந்தித்து சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தபோது தேர்தலுக்கு முன்பே சசிகலா பற்றி ஒரு நல்ல முடிவு எடுக்கலாமா என்பது குறித்து விவாதித்திருக்கிறார்கள்.
தென்மாவட்டங்களில் சசிகலாவைப் பகைத்துக்கொண்டு அதிமுகவின் வெற்றி அவ்வளவு எளிதல்ல என்பதை அமித் ஷாவிடமே எடுத்துக் கூறியிருந்தார் ஓபிஎஸ். குறிப்பாக தனது வெற்றிவாய்ப்பேகூட இதனால் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் அப்போது ஓபிஎஸ், அமித் ஷாவிடம் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் தினகரன் கட்சிக்குத் தேவையில்லாமல் வாக்குகள் செல்வதைத் தடுக்கும்விதமாக சசிகலா குறித்து ஓபிஎஸ் – இபிஎஸ் ஆகிய இருவரும் சேர்ந்து ஒரு பாசிட்டிவ் ஆன அறிவிப்பை வெளியிடலாமா என்றும் இந்தச் சந்திப்பின்போது ஆலோசனை நடத்தியுள்ளார்கள். விரைவில் இதற்கான விளைவுகள் தெரியலாம்” என்கிறார்கள்.
**-வேந்தன்**
�,