ஏப்ரல் 6ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் மே 2 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அன்றே தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைப்பது யார் என்பது தெரிந்துவிடும்.
தேர்தலுக்கு முன் வெளியான பல்வேறு கருத்துக் கணிப்புகளும் தமிழகத்தில் திமுக கூட்டணியே வெற்றி பெறுமென்று தெரிவித்திருந்த நிலையில், தேர்தலுக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட எக்சிட் போல் பிற மாநில தேர்தல்கள் காரணமாக வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தேர்தலுக்குப் பின்னரும், ‘அடுத்த ஆட்சி அமைப்பது நாங்கள்தான்’என்று திமுக உறுதியாக நம்பி வருகிறது. பல்வேறு தரப்புகளில் இருந்து தங்களுக்கு கிடைத்த தகவல்படி திமுகவே ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தனக்கு நெருக்கமானவர்களிடம் பகிர்ந்து வருகிறார். எந்த அளவுக்கு ஸ்டாலின் நம்புகிறார் என்றால், அடுத்து அமைய இருக்கும் ஆட்சியின் அமைச்சர்கள் யார் யார் என்ற விவாதமும் திமுகவின் டாப் லெவலில் ஓடிக் கொண்டிருக்கிறது.
இதற்கிடையில், “தேர்தலின் போது ஸ்டாலின் கடுமையான பயணம் மேற்கொண்டார். தமிழகம் முழுதும் பிரச்சாரம் செய்தார். தேர்தல் முடிவு வந்துவிட்ட பிறகு மீண்டும் அவருக்கு பணிகள் அதிகமாகிவிடும். எனவே கிடைத்த இந்த இடைவெளியில் ஸ்டாலின் எங்காவது வெளிநாட்டுக்குச் சென்று சில நாட்கள் ஓய்வெடுத்து வரலாம் என்று அவரது குடும்பத்தினர் மத்தியில் ஒரு விவாதம் எழுந்தது. ஆனால் இப்போது உலகம் முழுதும் கொரோனா பீதி ஏற்பட்டுள்ள நிலையில், எந்த நாட்டுக்கும் போக முடியாது என்று குடும்பத்திலேயே சிலர் கருத்து கூறினார்கள். ஆனால் விவாதத்தின் முடிவில், மாலத்தீவு நாட்டில் கொரோனா பீதி மிகக் குறைவு என்றும் அங்கே குடும்பத்தினரோடு சென்று ஓய்வெடுக்கலாம் என்று ஸ்டாலினுக்கு ஆலோசனைகள் சொல்லப்பட்டன. அந்த ஓய்வின் போதே அடுத்து அமைய இருக்கும் திமுக ஆட்சிக்கான அமைச்சரவைப் பட்டியலையும் தயாரித்துவிடலாம் என்றும் ஸ்டாலினுக்கு நெருக்கமான வட்டத்தில் விவாதிக்கப்பட்டிருக்கிறது.
மாலத்தீவு நாட்டில் கடந்த 2020 ஆம் ஆண்டிலேயே பிற நாட்டுப் பயணிகளின் வருகை அனுமதிக்கப்பட்டது. அதேநேரம் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சில நிபந்தனைகள் மட்டும் விதிக்கப்பட்டுள்ளன. மாலத்தீவு நாட்டுக்குள் வர வேண்டுமென்றால், அந்த பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ், சோதனை நடத்திய லேபின் தெளிவான முகவரி ஆகியவை சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதன் பின் மாலத்தீவின் தலைநகரத்துக்குள் செல்ல வேண்டுமென்றால் மீண்டும் ஒரு பிசிஆர் டெஸ்ட் மேற்கொள்ள வேண்டும். இதுபோன்ற பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கபப்ட்டுள்ளன. இந்நிலையில் மாலத்தீவு உள்ளிட்ட எந்த வெளிநாட்டுக்குச் சென்றாலும் சென்று திரும்பிய பிறகு இந்தியாவில் பத்து நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது.
எனவே இந்த சூழலில் வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டுமா என்று தயக்கத்தில் இருக்கிறார் ஸ்டாலின். இதுகுறித்து அவர் இன்னமும் முடிவெடுக்கவில்லை.” என்கிறார்கள் திமுகவின் உயர்மட்ட வட்டாரங்களில்.
**-வேந்தன்**�,