நாப்கின், குடும்ப வன்முறை: காணொலியில் கனிமொழி இட்ட உத்தரவு!

politics

திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்பி மகளிரணியின் மாவட்ட நிர்வாகிகளோடு ‘ஸ்டாலின் பாணி’யில் உரையாடியிருக்கிறார். அப்போது சில உத்தரவுகளையும் பிறப்பித்திருக்கிறார்.

கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது அரசியல் தலைவர்கள், நிர்வாகிகள் பலரும் வெளியே வர தயங்கிய நிலையில் சென்னையில் இருந்து தனது தொகுதியான தூத்துக்குடிக்கு காரிலேயே சென்று அங்கே மருத்துவமனையை பார்வையிட்டு, மருத்துவர்கள் சுகாதாரப் பணியாளர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்தார் கனிமொழி. அதன் பிறகே பல தலைவர்கள் வெளியே வந்தனர்.

நலத்திட்டப் பணிகளைக் கனிமொழி தொடர்ந்த நிலையில் நேற்று (மே 9) மகளிரணி நிர்வாகிகளுடன் காணொலிக் காட்சி முறையில் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்ட மகளிரணி நிர்வாகியிடமும் ஆலோசித்தார் கனிமொழி.

அப்போது சில மகளிரணி நிர்வாகிகள், “அக்கா….மக்களுக்கு உதவி பண்ணிக்கிட்டிருக்கோம். எல்லாரும் பொதுவா அரிசி, மளிகை சாமான் கொடுக்குறாங்க. கிராமப்புறங்கள்ல நம்ம மகளிரணியினர் உதவி பண்றதுக்காக போகும்போது பெண்கள் ரொம்பத் தயக்கமா, ‘அம்மா… நாப்கின் கிடைச்சா வாங்கிட்டு வந்து குடுங்கம்மா’னு கேக்கறாங்க. இப்ப நாங்க உதவிப் பொருட்களோட நாப்கினும் சேர்த்துக் கொடுக்குறோம்க்கா” என்று சொல்ல அவர்களைப் பாராட்டினார் கனிமொழி.

“இது ரொம்ப முக்கியமான விஷயம். நகர்ப்புறத்துல கடைகள் சில திறந்திருந்தாலும் கிராமப்புறங்கள்ல சானிடரி நாப்கின் தட்டுப்பாடு இருக்கு. பெண்கள் இதப் பத்தி பெண்கள்கிட்டதான் கேட்க முடியும். மெடிக்கல்ஸ் பல கிராமங்கள்ல இல்லாததால நம்ம மகளிரணியினர் உதவிப் பொருட்கள் கொடுக்கும்போது சானிடரி நாப்கினும் கொடுங்க” என்று அன்பாய் உத்தரவிட்டார் கனிமொழி.

கனிமொழியுடன் காணொலி ஆலோசனையில் கலந்துகொண்ட வேலூர் மேற்கு மாவட்ட மகளிரணிச் செயலாளர் கவிதா தண்டபாணியிடம் பேசினோம்.

“கொரோனா ஊரடங்கு காலத்தில் மகளிர் நிலைமை பற்றி குறிப்பாக கிராமப்புற மகளிரின் நிலைமைகள் பற்றி கேட்டார். குடும்ப வன்முறைகளை பெண்கள் சந்திக்கிறார்களா? உங்கள் பகுதியில் என்ன நிலைமை என்று கேட்டார். அதுவும் டாஸ்மாக் திறந்த பிறகு குடும்ப வன்முறைகள் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. அதனால் அவரவர் பகுதியில் பெண்களின் சமூக பாதுகாப்பு, குடும்பப் பாதுகாப்பு பற்றி அக்கறை செல்லுத்துமாறு கேட்டுக் கொண்டார். அதன் பின் மகளிரணி செய்து வரும் உதவிகள் பற்றிக் கேட்டார். நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் பகுதிகளில் ஆற்றி வரும் மக்கள் பணிகளை குறிப்பிட்டுச் சொன்னோம். அப்போது கனிமொழி, ‘யார் அதிகம் உதவி செய்கிறோம், யார் குறைவாக உதவி செய்கிறோம் என்பது பொருட்டல்ல. இந்த காலத்தில் உதவி என்பதே முக்கியம். அதில் அளவு முக்கியம் அல்ல. அதனால் உங்களை வருத்திக் கொள்ளாமல் உங்களால் முடிந்த அளவுக்கு மக்களுக்கு உதவி செய்யுங்கள்’ என்று சொன்னார். இது மகளிரணி நிர்வாகிகளுக்கு ஊக்கம் அளிப்பதாக அமைந்தது. தலைவரின் வழிகாட்டுதலில் கனிமொழி அக்காவின் வார்த்தைகளுக்குப் பின் மக்கள் பணிகளில் மேலும் தீவிரமாகிவிட்டோம்” என்கிறார் கவிதா தண்டபாணி.

**-வேந்தன்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *