எதையாவது பேச வேண்டும், எதை வேண்டுமானாலும் செய்ய வேண்டும், எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்பதுதான் தமிழக அரசியலில் களம் இறங்கியிருக்கும் வேட்பாளர்களின் வேட்கையாக இருக்கிறது. வேட்பாளர்கள் கண்டதையும் பேசுகிறார்கள் என்றால், அவர்களுக்கு ஆதரவாகப் பேசுகிறேன் பேர்வழி என்று மற்றவர்கள் பேசுவது வேட்பாளர்களுக்கும் வேட்டு வைத்துக் கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியைப் பிடிக்கும் என்று பல்வேறு ஊடகங்களின் தேர்தல் கணிப்புகளும் கூறிவரும் நிலையில், அந்தக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசாவின் பேச்சு, தேர்தல் களத்தில் எதிர்வினைகளை உருவாக்கியிருக்கிறது. அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது; கைது நடவடிக்கையும் பாயுமென்று செய்தி பரவிக் கொண்டிருக்கிறது. ஏதோ திமுகவில் இருப்பவர்கள் மட்டும்தான் இப்படிப் பேசுகிறார்கள் என்பது போல, சமூக ஊடகங்களிலும் காட்சி ஊடகங்களிலும் பலரும் கடுமையான விமர்சனங்களை முன் வைக்கிறார்கள்.
ஆனால், திமுகவினருக்கு நாங்கள் சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்பதைப் போல, அதிமுகவினரும் தாறுமாறாகப் பேசி, கட்சிக்குச் சிக்கலை ஏற்படுத்தி வருகின்றனர். காஸ் சிலிண்டர் 4,500 ரூபாய்க்கு விற்பதால்தான் நாங்கள் ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்கள் விலையின்றி கொடுக்கப் போகிறோம் என்று திண்டுக்கல் சீனிவாசன் பேசியது, சமூக ஊடகங்களில் சந்தி சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. சிவகாசியிலிருந்து ராஜபாளையத்துக்கு தொகுதி மாறியதற்குக் காரணம் சாதி வாக்குகள்தான் என்று ராஜேந்திர பாலாஜி பேசியது, இரண்டு தொகுதிகளிலும் சத்தமின்றி ரகளையை உண்டாக்கி விட்டிருக்கிறது.
இவர்களுக்குப் போட்டியாக, கோவையில் ஒருவர், ‘திமுக வேட்பாளர்களை வெட்டி பிரியாணி போடுவோம்’ என்று பேசி, பீதியைக் கிளப்பியிருக்கிறார். இவர் அமைச்சரோ, எம்.எல்.ஏ.வோ இல்லை என்று ஒதுக்கிவிட முடியாது. கட்சியில் கோவை புறநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் என்கிற சாதாரண பொறுப்பில்தான் இவர் இருக்கிறார். ஆனால் அதிமுகவின் இன்றைய அதிகாரபூர்வ நாளிதழான ‘நமது அம்மா’ நாளிதழின் வெளியீட்டாளர் பொறுப்பில் இருக்கிறார். அதிமுகவைச் சேர்ந்த முதல்வர், அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் அனைவருடைய பேச்சுகளையும் வெளியிடும் பொறுப்பிலுள்ள ஒருவரே இப்படிப் பேசியிருப்பதுதான் அரசியல் வட்டாரத்திலும், ஆளும்கட்சியிலும் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
இவர் அமைச்சர் வேலுமணியின் வலது கரமாகக் கருதப்படுபவர் என்பது கூடுதல் தகவலாகவுள்ளது.
அமைச்சர் வேலுமணி போட்டியிடும் தொண்டாமுத்தூர் தொகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசும்போது, ‘‘நம்ம கட்சியில் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் சேர்ந்து இன்டர்வியூ வைத்துத்தான் நல்ல வேட்பாளர்களைத் தேர்வு செய்கிறார்கள். ஆனால் திமுகவில் கோவை மாவட்ட வேட்பாளர்களை தேர்வு செய்யும்போது கையில் ஒரு சொம்பை வைத்துக்கொண்டு தொகுதிக்கு நான்கு பேரை வரவழைத்துத் தண்ணீரைத் தெளிக்கிறார்கள். தலையை ஆட்டினால் வெட்டி விடுகிறார்கள். தொண்டாமுத்தூர் தொகுதிக்கு எவனுமே தலையை ஆட்டாததால் காங்கேயத்திலிருந்து ஒரு மாடு திருடனை அழைத்து வந்திருக்கிறார்கள். அவர் வந்ததிலிருந்து தொண்டாமுத்தூர் தொகுதியிலுள்ள மக்கள், மாடுகளைக் கழற்றிவிட்டு, தடியோடு துணைக்கு நிற்கிறார்கள். ஸ்டாலினுக்குச் சொல்லிக் கொள்கிறேன்… மாடு திருடனை வேட்பாளராக அறிவித்து, எங்கள் அமைச்சருக்கு சவால் விடுகிறாய். இந்தத் தேர்தல் முடிந்ததும் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி விழாவுக்கு கடா வெட்டி விருந்து வைப்போம். ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு ஆடு கம்மியாத்தான் வாங்குவோம். அதுக்குப் பதிலா நீ அனுப்புன ஆட்டைத்தான் வெட்டுவோம். கண்டிப்பாக நீ எழுதி வெச்சுக்க. எல்லா ஆட்டையும் வெட்டி திலகா அக்காவை வெச்சு பிரியாணி போட்டு அனுப்பலைன்னா வேலுமணி அமைச்சர் யாருன்னு கேளு’’ என்று பேசினார்.
இந்த வீடியோ வைரலாகப் பரவ, திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் சிவசுரேஷ் , வடவள்ளி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், தொண்டாமுத்தூர் தேர்தல் அலுவலர் செந்தில் அரசன் அனுப்பிய புகாரை ஏற்று, சந்திரசேகர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சந்திரசேகர் மீது 294 (பி) பொது இடத்தில் ஆபாசமாகப் பேசுதல், 506(1) கொலை மிரட்டல் விடுப்பது ஆகிய பிரிவுகளில் வழக்குகளை பதிவு செய்திருக்கிறது காவல்துறை. ராசா மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில், இவர் மீதும் கைது நடவடிக்கை பாய்வதற்கு வாய்ப்புள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
இப்படி இரண்டு கட்சிகளிலும் வாய்க்கு வந்தபடி தாறுமாறாகப் பேசுவது, மக்களை முகம் சுளிக்க வைப்பதுடன், அந்தந்தக் கட்சிக்கும், வேட்பாளருக்கும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.
இன்னும் ஒரு வாரத்தில் தமிழகத்தில் எத்தனை வீடியோக்கள் வெளியாகி எத்தனை பேருடைய வெற்றிக்கு வெடிவைக்கப் போகிறதோ?
**-பாலசிங்கம்**
.
�,”