தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் அகழாய்வு மூலம் தமிழர்களின் தொன்மை,வரலாறு ஆகியவை வெளிச்சத்துக்கு வருவதால், ஒரு சிலருக்கு வயிறு எரிகிறது. அவர்களுக்கு வயிறு எரியட்டும்,நாங்கள் தொடர்ந்து அகழாய்வு மேற்கொள்வோம் என்று தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் இன்று(ஜூலை 29) செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “தலைவர் கலைஞர் வழியில் நின்று செம்மொழி தமிழாக அறிவிக்கப்பட்ட அக்டோபர் 12ஆம் நாள் செம்மொழி திருநாளாக அறிவித்திட வேண்டும் என்று முதல்வர் எங்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார். அதுபோன்று உலகபொதுமறையான திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தும். உலகெங்கும் இருக்கக் கூடிய முக்கிய பல்கலையில் உள்ள தமிழ் துறையில் தமிழ் ஆய்வறிக்கைகளை உருவாக்கி, ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தமிழ்மொழியின் மாட்சிமையை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் உயர் நிலைக்குஎடுத்து செல்ல வேண்டும் என்றும் முதல்வர் தமிழ் வளர்ச்சி துறைக்கு உத்தரவிட்டுள்ளார். அதற்கேற்ற வகையில் துறையும் சிறப்பாக முன்னெடுத்து வருகிறது.
தமிழ் வளர்ச்சி, பண்பாடு, நாகரீகம், தொன்மை ஆகியவற்றில் தமிழருக்கென்று மாபெரும் சிறப்பு இருக்கிறது. இது இலக்கிய சான்றுகள் மட்டுமில்லாமல், வரலாற்று சான்றுகளிலும் உள்ளது. அந்த வரலாற்று தரவுகளை அறிவியல்பூர்வமாக நிறுவதற்கு தொல்லியல் துறை சார்பாக பல்வேறு அகழாய்வுகள் நடைபெற்று வருகின்றன. கீழடி, மயிலாடும்பாறை,சிவகளை, கங்கைகொண்ட சோழபுரம், கொற்கை,ஆதிச்சநல்லூர்,அகரம் என அகழாய்வு பணிகள் நடைபெற்று வரும் இடங்களை அடுக்கி கொண்டே போகலாம்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ”ஒரு காலகட்டத்தில், தமிழ்மொழியின் தொன்மைக்கு சங்ககாலத்தில் உள்ள இலக்கியங்கள் மட்டும்தான் சான்றாக இருக்கிறது என்று கூறினார்கள். மாங்குளம் கல்வெட்டில் மாமன்னன் பாண்டியன் நெடுஞ்செழியன் பெயர் பொறிக்கப்பட்ட அக்கல்வெட்டின் காலம் கிமு இரண்டாம் நூற்றாண்டு. அப்போதுதான் தமிழின் தொன்மை தோன்றியிருக்கும் என்று கூறினார்கள். ஆனால் புலிமான்கோம்பையில் கிடைத்த கல்வெட்டு தமிழ் பண்பாடு அதற்கும் முந்தைய காலகட்டத்திலிருந்து துவங்குவதை உறுதி செய்தது. நமக்கு கிடைத்துள்ள தொல்லியல்துறை பொருட்களை ஆய்வு செய்ததன் மூலம் கிறிஸ்து பிறப்பதற்கு 6 நூற்றாண்டுகள் முன்பாகவே தமிழினத்தின் தொன்மை இருந்து வருகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பு வெள்ளியில் ஆன முத்திரை காசு கீழடியில் கிடைத்தது. கிறிஸ்து பிறப்பதற்கு நான்கு நூற்றாண்டுகள் முன்பாக இந்த நாணயம் புழக்கத்தில் இருந்து இருக்க வேண்டும் என்கிறார்கள். அப்படியென்றால், மௌரியர்களுக்கும் நமக்கும் வணிக தொடர்பு இருந்திருக்கிறது. கங்கைச் சமவெளிக்கும், வைகைச் சமவெளிக்கும் இருக்கக்கூடிய தொடர்பு நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய காசு நம்மிடத்தில் கிடைக்கிறது என்றால், வணிக குழுக்கள் அங்கிருந்து இங்கே வந்திருக்கிறார்கள் என்பதற்கான சான்றுதான் இது.
அகழாய்வு மூலம் இத்தனை சான்றுகள் கிடைக்கும்போது அதை எல்லாம் ஏற்றுக் கொள்வதற்கு சிலருக்கு மனம் வரவில்லை. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், தமிழின் பெருமை, தமிழனின் பெருமை உலக அளவில் எழுந்து வருவதில் சிலருக்கு வயிறு எரிகிறது. அந்த வயிறு நன்றாக எரியட்டும். வயிறு எரிவதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் தொடர்ந்து இந்த அகழாய்வுப் பணிகளை மேற்கொள்வோம்.
உலகளாவிய தமிழர்களுக்கு, நமது இனம் குறித்த பெருமை அறிய இத்தகைய அகழ்வாய்வு தேவை. ஆனால் இது தேவையற்றது என்று சில வேலையற்றவர்கள் கூறினால் அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். அவர்களுக்கு வயிறு நன்றாக எரியட்டும். ஆனால், பேரறிஞர் அண்ணா சொன்னது போல, இந்த பண்பாட்டு தீ, தமிழ் நாகரீக பண்பாட்டு தீ, அகிலமெல்லாம் பரவட்டும், தீ பரவட்டும்….. நமது உணர்வு பொங்கட்டும்.. பொங்கட்டும்”… என்று கூறியவர், தமிழ்பண்பாட்டு சூழலில் நாம் முன்னெடுத்துள்ள முயற்சியை யார் கொச்சைப்படுத்தினாலும் அது கண்டிக்கத்தக்கது” என்று பேசி முடித்தார்.
**-வினிதா**
�,