கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பூண்டி அடிவாரத்தில் வெள்ளிங்கிரி மலை உள்ளது. இந்த மலைப் பாதை மிகவும் கரடுமுரடானதாக இருக்கும். இந்நிலையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இந்து சமய மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது வெள்ளியங்கிரி உட்பட 5 திருக்கோயில்களில் மலைப்பாதை அமைக்கப்படும். இதற்காக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன் படி முதல் கட்டமாக வெள்ளியங்கிரி ஆண்டவர் மலைக்கோயிலுக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கள ஆய்வு மேற்கொள்ள சென்றார்.
நேற்று காலை 7 மணிக்கு மலையேறத் தொடங்கினார். அவருடன் ஆணையர் குமரகுருபரனும் சென்றார். கடந்த சில தினங்களாக வெள்ளியங்கிரி பகுதியில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் பாதுகாப்புக்காக வனத்துறை ஊழியர்கள், அறநிலையத் துறை ஊழியர்கள், மருத்துவக் குழுவினர் ஆகியோரும் உடன் சென்றனர்.
7 மலைகளுக்கு நடந்து சென்ற அமைச்சர் இறுதியாகச் சுயம்பு லிங்கத்தைத் தரிசனம் செய்தார். அதோடு பக்தர்களுக்குத் தேவையான வசதிகள், மலைக்கோயிலில் பாதை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் மற்றும் கோயில் திருப்பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
நேற்று காலை 7 மணிக்கு மலையேறிய அவர் 22 மணி நேரத்துக்கு பின் இன்று அதிகாலை 5 மணியளவில் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கீழே இறங்கினர். கடும் சூறாவளி காற்று, மழையில் நடந்தே சென்று ஆய்வு செய்தார். 7 மலைகளை நடந்து சென்று பார்வையிட்ட முதல் துறை சார்ந்த அமைச்சர் சேகர்பாபு ஆவார்.
இதுதொடர்பாக இன்று (மே 23) அவர் கூறுகையில், “வெள்ளியங்கிரி மலைக்கு ஆண்டுதோறும் 5 லட்சம் பக்தர்கள் செல்கிறார்கள். இந்நிலையில் மலைப்பாதை அமைக்க நேரடியாகக் கள ஆய்வு மேற்கொண்டோம். அங்கிருந்த பக்தர்களிடம் கருத்துக் கேட்டோம். இந்த கருத்துகளை முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று, பக்தர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மலைப்பாதை அமைப்பதற்கான நல்லதொரு முடிவை விரைவில் வெளியிடுவோம்” என்றார்.
**-பிரியா**