காஞ்சிபுரம் காமராஜர் சாலையில் கோயில் ஒன்றை ஆக்கிரமித்து டயர் கடை நடத்தி வருவதாக சமூக வலை தளங்களில் வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.
கடந்த இரு நாட்களாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலானது. அதில் பேசும் நபர் ஒரு டயர் கடைக்குள் செல்கிறார். அதனுள் சென்றால் பாழடைந்த சிவன் கோயில் உள்ளது. நந்தி சிலை, சிவன் சிலை உள்ளது. இதனை மீட்டெடுக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு வலியுறுத்தியிருந்தார்.
இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து அக்கோயில் இடத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளார்களிடம் கூறுகையில், “காஞ்சிபுரம் காமராஜர் சாலையில் பல 100 ஆண்டுகளுக்கு முன்பு ஜீவசமாதி ஆகிய இருக்கிற லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த கோயில் ஒன்று உள்ளது. இங்குத் திருமணமாகாத இருவரின் ஜீவசமாதிகள் உள்ளன .வருவாய்த் துறையினரின் ஏடுகளில் கல்மடம் எனவும் பதிவாகி இருக்கிறது. இக்கோயில் தொடர்பாக நீதிமன்றத்திலும் பல்வேறு வழக்குகள் நடந்துள்ளன. இக்கோயிலானது தனிப்பட்ட நபருக்குரியதா அல்லது லிங்காயத்துச் சமுதாயத்தினருக்கு சொந்தமானதா என அவர்கள் தரும் ஆவணங்களைப் பார்த்து முடிவு செய்யப்படும். நீதிமன்ற உத்தரவுகளும் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதையும் அறநிலையத் துறை சட்டப்பிரிவு ஆய்வு மேற்கொண்டு தொடர்ந்து கண்காணிக்கும்.
தற்போது ஆக்கிரமித்திருப்பதாகக் கூறப்படும் இந்த இடத்தை அவர்களே வைத்துக் கொள்வதா அல்லது அவர்கள் இந்து சமய அறநிலையத் துறைக்கு கொடுத்தால் அதை அனைவரும் வந்து வழிபடும்படியாக சிறந்த கோயிலாக மாற்றுவதா என்பதை ஆவணங்களைப் பொறுத்தே முடிவு செய்யப்படும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் ரூ.1200 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பில் இருந்த சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. 129 ஏக்கர் நிலம் தன்வசப்படுத்தப்பட்டுள்ளது.
இது காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள நமச்சி ரிபில்ட் டயர் கடை இதுநாள் வரை இப்படி ஒரு கோயில் இருப்பது யாருக்கும் தெரியவில்லை நண்பரின் பதிவுக்கு நன்றி பணியைத் துவங்குவோம் 👍🏻 pic.twitter.com/Xse57lbiYI
— சேட்டை செல்வம் சேட்டை செல்வம் (@FaMD3WNWPuvnuSL) April 10, 2022
அறநிலையத்துறை ஆக்கிரமிப்புகள் எதுவாக இருந்தாலும் பாரபட்சமின்றி அகற்றப்பட்டு வருகிறது. சட்டப் பேரவையில் அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி கோயில் குறித்து மகிழ்ச்சியான தகவல் வரும். மதுரை வீரவசந்தராயர் மண்டபம் ரூ.19 கோடியில் புதுப்பிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
அமைச்சரது ஆய்வின் போது காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினர் க.செல்வம்,எம்.எல்.ஏ.க்கள் க.சுந்தர்,சி.வி.எம்.பி. எழிலரசன்,அறநிலையத்துறை இணை ஆணையர் பொன்.ஜெயராமன், மாவட்ட வருவாய் அலுவலர் சிவ.ருத்ரய்யா மற்றும் அறநிலையத் துறை அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.