மேட் இன் தமிழ்நாடு: சேலம் எம்.எஸ்.எம்.இ நிறுவனத்துடன் ஒப்பந்தம்!

politics

போயிங் நிறுவனத்திற்கு உதிரி பாகங்களை சப்ளை செய்ய சேலத்தைச் சேர்ந்த ஏரோ ஸ்பேஸ் என்ற எம்.எஸ்.எம்.இ நிறுவனத்துடன் நேற்று (செப்டம்பர் 27) ஒப்பந்தம் கையெழுத்தானது.

‘உலகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம், ‘Made in India’ என்பது போல ‘Made in Tamil Nadu’ என்ற குரல் ஒலிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி நடைபெற்ற ஏற்றுமதி மாநாட்டில் தெரிவித்தார். அதன்படி தமிழகத்தில் போயிங் விமானத்துக்கு முதன்முறையாக உதிரி பாகங்கள் தயாரித்து கொடுக்க சேலத்தைச் சேர்ந்த நிறுவனத்துடன் நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சேலத்தில் செயல்பட்டு வரும் ஏரோஸ்பேஸ் இன்ஜினீயர்ஸ் பிரைவேட் நிறுவனம், உலகளாவிய விண்வெளி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கான முக்கிய விமான பாகங்கள் தயாரித்து வழங்க நீண்டகால ஒப்பந்தத்தை போயிங் இந்தியா நிறுவனத்திடம் இருந்து பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தம் தமிழகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தரம், துல்லியம் மற்றும் கூட்டுக் கலாச்சாரத்தின் அர்ப்பணிப்புக்கான சான்றாகும். ஏரோஸ்பேஸ் இன்ஜினீயரிங் நிறுவனம் – போயிங் இடையிலான ஒத்துழைப்பு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். இது சேலம், ஓசூர் உள்ளிட்ட தமிழ்நாடு பாதுகாப்பு தொழில் வழித்தடத்தில் உள்ள வளர்ந்து வரும் விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்களுக்கு உத்வேகத்தை அளிக்கும்.

ஏரோஸ்பேஸ் இன்ஜினீயர்ஸ் நிறுவனம், ஓசூரில் ரூ.150 கோடி முதலீட்டில் சிவில் ஏரோஸ்பேஸ் உற்பத்திக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புதிய உற்பத்தி வசதியை அடுத்த 24 மாதங்களில் ஏற்படுத்த உள்ளது. மேலும்,தற்போது சேலத்தில் உள்ள உற்பத்திக் கூடத்தை 50 ஆயிரம் சதுர அடி பரப்பில் விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் 1,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். இது, தமிழக முதல்வரின் தொலைநோக்குப் பார்வையான ‘தமிழகத்தில் தயாரிக்கப்பட்டது’ (Made in TamilNadu) என்பதன் ஒருபடியாக அமையும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஏரோ ஸ்பேஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தரம் கூறுகையில், “கடந்த 33 ஆண்டுகளாகத் தமிழகத்தில் விமானங்களுக்குத் தேவையான உதிரிப் பாகங்களைத் தயாரித்துக் கொடுக்கும் தொழிலைச் செய்து வருகிறோம். அமெரிக்க நிறுவனமான போயிங் நிறுவனத்துடன் பல ஆண்டுகளாக இணைந்து பணியாற்றி வருகிறோம். போயிங் நிறுவனத்திற்கு சப்ளை செய்யும் நிறுவனத்திற்கு (T-2) துணை நிறுவனமாக நாங்கள் செயல்பட்டு வந்தோம், தற்போது நேரடி ஒப்பந்தம் (T-1) கிடைத்துள்ளது. உதிரி பாகங்கள் தயாரித்துக் கொடுக்கும் பணி விரைவாகத் தொடங்கப்பட்டு 2022க்குள் வழங்கப்படும்” என்றார்.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *