புதுச்சேரி காங்கிரஸ் முதல்வர் நாராயணசாமியோடு தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வந்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மாற்றப்பட்டு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பிப்ரவரி 16 ஆம் தேதி புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே புதுச்சேரிக்கு வந்து சேர்ந்த தமிழிசை இன்று பிப்ரவரி 18 ஆம் தேதி புதுச்சேரி துணை நிலை ஆளுநராக பதவியேற்றுக் கொண்டார்.
தமிழிசை பதவியேற்ற சூழலும், வேகமும் கிரண்பேடி மீது டெல்லி அதிருப்தியில் உள்ளதையே காட்டுகிறது என்கிறார்கள் புதுச்சேரி அரசியல் வட்டாரத்தினர்.
ராஜ்பவனில் சிலரிடம் இதுகுறித்து விசாரித்தபோது
”முன்னாள் போலீஸ் அதிகாரியான கிரண்பேடி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தனது பணியில் பெரும்பாலான நேரங்களில் போலீஸ் அதிகாரிபோலவே செயல்பட்டுவந்துள்ளார்.
கிரண்பேடி நடவடிக்கையை காங்கிரஸ், திமுக, அதிமுக, விசிக, போன்ற கட்சிகளும் எதிர்த்து விமர்சனம் செய்துவந்தார்கள். முதல்வர் நாராயணசாமி தொடர் போராட்டம் நடத்தினார்.
இதனிடையில் மல்லாடி கிருஷ்ணா ராவ் தனது எம்.எல்.ஏ,பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்றால் கிரண்பேடியை மாற்றவேண்டும் என்று பாஜக தலைமையிடம் கோரிக்கை வைத்தார். அதே கோரிக்கையை ஜான் குமார் முன்னாள் எம்.எல்.ஏ,வும் அமித்ஷாவிடம் வைத்துள்ளார்.
பிப்ரவரி 15ஆம் தேதி, மல்லாடி கிருஷ்ணாராவ் எம்.எல்.ஏ. ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புகிறார். மறுநாள் 16ஆம் தேதி, கிரண்பேடிக்கு மாற்றாகத் தெலுங்கானா ஆளுநர் தமிழிசையை நியமிக்கிறார்கள்.
16ஆம் தேதி, ராஜ் நிவாஸ் மாளிகையில் கீழ்த் தளத்தில் உள்ள அலுவலகத்தில் கோப்புகளை பார்த்தபடி கிரண்பேடி ஜூஸ் கேட்டுள்ளார். மேல் தளத்திலிருந்து ஜூஸ் எடுத்துவந்து மேசையின் மீது வைத்தார் பணியாளர். அப்போதுதான் துணை நிலை ஆளுநரின் தனிச் செயலாளர், கிரண்பேடியை மாற்றி குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து வந்த ஆர்டரை கொடுத்தார்.
ஆர்டரை பார்த்த கிரண்பேடி ஜூஸ் வேண்டாம் என்று சொல்லிவிட்டு கோபமாக மேல் தளத்தில் உள்ள தனது அறைக்கு சென்றுவிட்டார். பொதுவாக ஆளுநரை மாற்றினால் அவர் காலி செய்வதற்குக் குறைந்தது ஒருவாரம் காலமாவது அவகாசம் கொடுப்பார்கள். ஆனால் கிரண்பேடிக்கு ஒரு நாள்கூட கொடுக்கப்படவில்லை.
புதியதாக பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்ட தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை மறுநாளே பொறுப்பேற்க சொல்லியுள்ளார்கள் டெல்லி வட்டாரத்தினர். இதையடுத்து தமிழிசை நேற்று பிப்ரவரி 17ஆம் தேதி புதுச்சேரி ராஜ்நிவாஸ் மாளிகைக்கு வந்தவர், ஜனாதிபதி, பிரதமர் போன்ற விவிஐபி தங்கக்கூடிய ஷூட் ரூமில் தங்கினார். இன்று காலையில் துணை நிலை ஆளுநர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
கிரண்பேடி தன்னுடைய அறையில் உடைமைகளை பேக்கிங் செய்து வரும் 20, அல்லது 21ந் தேதிகளில் ராஜ் நிவாஸிலிருந்து காலி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது”என்கிறார்கள் ஆளுநர் மாளிகையில் உள்ளவர்கள்.
இன்று காலை பதவியேற்றுக் கொண்டதும் செய்தியாளர்களிடம் பேசிய பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசை,
“புதுச்சேரியின் அரசியல் சூழலை நான் நன்கு அறிவேன். என்னை தலைவர்கள் சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து, தற்போதைய அரசியல் சூழலை அலசி ஆராய்ந்து அரசியல் அமைப்புக்கு உட்பட்டு உறுதியான முடிவுகளை எடுப்பேன். நான் பிரச்சினையின் அடிப்படையிலேயே எதையும் அணுகுவேன். தனி நபர் அடிப்படையிலான அணுகுமுறை என்னிடம் கிடையாது. ஈகோ கிடையாது. என் பாணி எப்போதுமே சுமுகமான பாணிதான்”என்று விளக்கியுள்ளார்.
**-வணங்காமுடி**�,