காஷ்மீர்: ஐ.நா.வில் மீண்டும் தோற்ற சீனா- பாகிஸ்தான் கூட்டணி!

பாகிஸ்தானுக்காக காஷ்மீர் பிரச்சினையை சர்வதேசமயமாக்க சீனா மேற்கொண்ட மற்றொரு முயற்சி, நேற்று (ஜனவரி 15) இரவு ஐக்கிய நாடுகள் சபையில் தோல்வியடைந்தது.

பட்டியலிடப்பட்ட பிரச்சினைகள் விவாதிக்கப்பட்ட பின்னர், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் (யு.என்.எஸ்.சி) ‘எனி அதர் பிசினஸ்’ (Any Other Business) என்ற தலைப்பில் பட்டியலிடப்படாத பிரச்சினைகளை விவாதிக்கவும் இடம் இருக்கிறது.

கடந்த ஆகஸ்டு மாதம் காஷ்மீரில் 370 ஆவது சிறப்புப் பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது. அதை எதிர்த்து இப்பிரச்சினையை கடந்த ஆகஸ்டு 16 ஆம் தேதி அதிகாரபூர்வமற்ற வகையில் மூடிய அறைக்குள் விவாதிக்குமாறு சீனா கோரியது. அப்போது சீனாவுக்கு பாகிஸ்தானை தவிர வேறு ஏதும் நாடுகள் ஆதரவு அளிக்காததால் அது தோல்வி அடைந்தது.

இந்தப் பின்னணியில் மீண்டும் காஷ்மீர் பிரச்சினையை விவாதிக்க ஐ.நாவின் பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினரான சீனா, கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட முயற்சியில் இறங்கியது. நேற்று (ஜனவரி 15) பாதுகாப்பு அவை கூடியபோது சீனாவின் கோரிக்கையை பாதுகாப்பு சபையின் உறுப்பினர்களான 14 நாடுகளில் யாரும் ஆதரிக்கவில்லை.

பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு நாடுகள் வெளியே வந்து, “காஷ்மீர் பிரச்சினை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு பிரச்சினை” என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டனர். ஐ.நா.வின் பாதுகாப்பு சபை உறுப்பினரான ரஷ்யாவின் தூதர் டிமிட்ரி பாலியன்ஸ்கியும், “காஷ்மீர் ஒரு இருதரப்பு விஷயம்” என்று ஒப்புக் கொண்டார். அவர் வெளியிட்ட ட்விட்டில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகளை இயல்பாக்குவதற்கு ரஷ்யா உறுதியாக நிற்கிறது. 1972 சிம்லா ஒப்பந்தம் மற்றும் 1999 லாகூர் ஆகியவற்றின் அடிப்படையில் இருதரப்பு முயற்சிகள் மூலம் அவர்களுக்கு இடையிலான வேறுபாடுகள் தீர்க்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று கூறியிருக்கிறார். அமெரிக்கா, “இப்பிரச்சினை இங்கே விவாதிப்பதற்கு ஏற்றதல்ல” என்று குறிப்பிட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர்தான் ஜம்மு-காஷ்மீருக்கு 15 வெளிநாட்டு தூதர்களைக் கொண்ட ஒரு குழுவை இந்தியா அழைத்துச் சென்றது. சீனாவும் பாகிஸ்தானும் ஐ.நா. பாதுகாப்பு சபையில் மீண்டும் காஷ்மீரை எழுப்ப முயற்சி எடுத்துவந்ததை முறியடிக்கவே இந்த தூதர் குழுவை காஷ்மீருக்கு அழைத்துச் சென்றது இந்தியா.

ஐ.நா.வில் நடந்தது குறித்து குறித்து ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி சையத் அக்பருதீன்,

“பாகிஸ்தானின் தவறான கூற்றுக்கள் உலக அரங்கில் மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தப்பட்டுள்ளன . நமது உலக நண்பர்கள் பலர் நம்மை ஆதரித்ததில் மகிழ்ச்சியடைகிறோம். பாகிஸ்தானின் பல்வேறு பிரதிநிதிகள் பலமுறை கூறிய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. இந்தியாவுடனான உறவுகளில் பாகிஸ்தானுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இருதரப்பு வழிமுறைகள் உள்ளன என்பதை உலகம் சுட்டிக்காட்டியிருக்கிறது. காஷ்மீர் என்பது இருதரப்பு விஷயம் என்பதை மறைக்க பொய்களைச் சொல்லும் பாகிஸ்தானின் செயல்முறை இத்தோடு முடிவுக்கு வரும் என்று நம்புகிறோம்” என்று ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

சிஏஏ சட்டம் மூலம் உலக நாடுகளிடையே இந்தியா தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக காங்கிரஸ் ஆதரவு வெளியுறவு நிபுணர்கள் மத்திய அரசு மீது குற்றம் சாட்டிய நிலையில், மோடியின் ராஜதந்திரத்துக்கு கிடைத்த வெற்றியாகவே இது பார்க்கப்படுகிறது.�,”

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts