ஹிஜாப் அணிய தடை விதித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விரிவான அமர்வு விசாரிக்கும் என்று தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் அனைத்து மாணவர்களிடையே சமத்துவத்தை கொண்டு வரும் வகையில், ஒரே சீருடை திட்டம் கொண்டு வரப்பட்டது. இதில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இதன் காரணமாக ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகளை கல்லூரி நிர்வாகம் வகுப்பறைக்குள் அனுமதிக்க மறுத்தது. இதை எதிர்த்து மாணவிகள் போராட்டம் நடத்தினர். அவர்கள் ஹிஜாப் அணிந்து வந்தால், நாங்கள் காவி சால்வை அணிந்து வருவோம் என்று சில மாணவர்களும் காவி சால்வை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடகாவில் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. போராட்டம் வன்முறையாக மாறி வருவதை அறிந்த கர்நாடக அரசு, பள்ளி,கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளித்தன.
ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்குச் செல்லக் கூடாது என்ற மாநில அரசின் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி உடுப்பியில் உள்ள அரசு முன் பல்கலைக்கழக(pre-university) கல்லூரியைச் சேர்ந்த 5 மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு நேற்று(பிப்ரவரி 8) தனி நீதிபதி கிருஷ்ணா தீட்சித் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தேவதத் காமத்,” ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மதத்தின் இன்றியமையாத ஒன்றாகும். ஹிஜாப் அணிந்த மாணவிகளை கல்லூரிக்குள் சேர்க்காமல் தடுப்பது அல்லது அவர்களை தனித்தனியாக உட்கார வைப்பது சமத்துவம் மற்றும் மதம் கடைப்பிடிக்கும் உரிமையை மீறும் செயலாகும்.
இது அரசியலமைப்பு சட்டப்பிரிவுகள் 25, 19(1)(ஏ) மற்றும் 14-ன் கீழ் உள்ள உரிமைகளை முற்றிலும் அவமதிக்கும் செயலாகும். ஹிஜாப் அணிவது எப்படி பொது ஒழுங்கு பிரச்சினையாகும்?. கர்நாடகா கல்விச் சட்டத்தின் 7வது பிரிவின் கீழ் வெளியிடப்பட்ட அரசு ஆணை மாநிலத்தின் அதிகாரங்களுக்கு அப்பாற்பட்டது. புட்டசாமி வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி உடை அணிவது தனிநபர் உரிமையாகும்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவிகள் ஹிஜாப் அணிந்து கொண்டு அமைதியான முறையில் மத வழக்கங்களைக் கடைபிடித்து வந்துள்ளனர். அடுத்த இரண்டு மாதங்களில் தேர்வு நடக்கவிருக்கிறது. கல்லூரி பரிந்துரைத்திருக்கும் சீருடையில் துப்பட்டா இடம் பெறுவதால், அதை ஹிஜாப்பாக பயன்படுத்த மாணவிகளை அனுமதிக்க வேண்டும்” என்று வாதாடினார்.
அரசின் தலைமை வழக்கறிஞர் பிரபுலிங் நவடகி,”ஹிஜாப் விவகாரம் தொடர்பாக பெரும்பாலான இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அந்த வகையில் இந்த வழக்கு முக்கியமானதாகும். நிலைமையை மாநில அரசு கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது. இந்த வழக்கை முழுமையாக விசாரித்து தீர்ப்பு கூறும் வரை, இடைக்காலமாக சில உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்” என்று வாதாடினார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி கிருஷ்ணா தீட்சித்,,” நாங்கள் சட்டப்படியே நடப்போம். விருப்பங்கள், உணர்வுகளின் அடிப்படையில் எதையும் தெரிவிக்க மாட்டோம். நாங்கள் அரசியலமைப்புச் சட்டம் என்ன சொல்கிறதோ, அதன்படியே நடப்போம். எனக்கு, அரசியலமைப்புச் சட்டமே புனிதமான பகவத் கீதை.
பொதுமக்களின் நற்குணங்களில் நீதிமன்றம் முழு நம்பிக்கை வைத்திருக்கிறது. அதை மக்கள் செயல்படுத்துவார்கள் என்றும் நம்புகிறேன். மாணவர்கள் மற்றும் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து வழக்கு விசாரணை பிப்ரவரி 9ஆம் தேதி பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கு மீண்டும் இன்று(பிப்ரவரி 9) பிற்பகலில் நீதிபதி கிருஷ்ணா தீட்சித் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ”இந்த வழக்கை விரிவான அமர்வு விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்றார்.
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தேவதத் காமத்” எங்களுக்கு நீதிமன்றம் மீது முழு நம்பிக்கை இருக்கிறது. நீதிமன்றத்தின் கோரிக்கையை நான் எதிர்க்கவில்லை. இந்த வழக்கு விரிவான அமர்வுக்கு மாற்றிக் கொள்ளப்படட்டும். ஆனால், மாணவர்கள் அவர்களின் நம்பிக்கையை பின்பற்றி மீண்டும் பள்ளிக்கு செல்ல அனுமதிக்க வேண்டும். அடுத்த இரண்டு மாதங்களுக்கு மாணவர்கள் படிக்க செல்வதற்கு தற்காலிகமாக சில உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்” என்று வாதாடினார்.
அரசின் தலைமை வழக்கறிஞர் பிரபுலிங் நவடகி,” இந்த மனுக்கள் தவறானவை. மாநில அரசின் அரசாணை மீது கேள்வி எழுப்புகின்றனர். ஒவ்வொரு நிறுவனத்திற்கும் சுயாட்சி வழங்கப்பட்டுள்ளது. ஹிஜாப், மத நடைமுறையின் ஒருங்கிணைந்த பகுதி இல்லை என்று முக்கிய வழக்கில் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதனால் கல்லூரி நிர்ணயித்துள்ள சீருடையை பின்பற்றி மாணவர்கள் வகுப்பில் கலந்து கொள்ள வேண்டும்.
இந்த விவகாரம் சட்ட ஒழுங்கு பிரச்சினையை பிரதிபலிக்கிறது.இந்த விவகாரம் ஏற்கனவே பெரியதாக மாறிவிட்டது. எல்லோரும் ஒரு முடிவிற்காக நீதிமன்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். நீதிமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடக்கலாம். ஆனால் சட்டப் பிரச்சினை நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட வேண்டும்” என்று வாதாடினார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி,” முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கின் விவாத்தைக் கருத்தில் கொண்டு, இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க ஒரு விரிவான அமர்வை அமைக்க முடியுமா என்பது குறித்து முடிவெடுக்க தலைமை நீதிபதியிடம் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கருதுகிறது.
தலைமை நீதிபதி தனது விருப்பத்தின்படி அமைக்கக்கூடிய விரிவான அமர்வு முன் இடைக்கால கோரிக்கைகள் வைக்கப்பட வேண்டும். மனுக்களில் கோரப்பட்டுள்ள அவசரத்தை கருத்தில் கொண்டு, இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை உடனடியாக பரிசீலனைக்கு தலைமை நீதிபதி முன் சமர்ப்பிக்குமாறு பதிவுத்துறைக்கு உத்தரவிடப்படுகிறது.
விரிவான அமர்வு அமைப்பது தொடர்பாக தலைமை நீதிபதி முடிவு எடுத்த பிறகு, மனுதாரர்கள் இடைக்கால உத்தரவுகளை பெறலாம். தற்போது, கர்நாடக அரசின் ஒரே சீருடை திட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது” என்று கூறினார்.
**-வினிதா**