�மேயர் ஸ்டாலின் நண்பருக்கு பதவி வழங்கியது எப்படி?: கராத்தே தியாகராஜன் கேள்வி!

Published On:

| By Balaji

ஸ்டாலின் சென்னை மேயராக இருந்தபோது தனது நண்பருக்கு பதவி வழங்கியதாக கராத்தே தியாகராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக அரசின் நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளர் நடராஜன் திடீரென்று சென்னை மாநகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.அவருக்கு பதிலாக சென்னை மாநகராட்சியிலிருந்து முதன்மை தலைமைப் பொறியாளர் புகழேந்தி நகராட்சிகள் ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின், இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட முடியுமா என முதல்வருக்கு கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி, நிர்வாக வசதிக்காக மேற்கொள்ளப்படும் இடமாற்றம், நியமனங்கள் குறித்து ஸ்டாலின் சிபிஐ விசாரணை கேட்பதாக குற்றம்சாட்டினார். இந்த விவகாரம் தொடர்பாக திமுக-அதிமுகவின் அறிக்கைப் போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் ஸ்டாலின் சிபிஐ விசாரணை கோருவது குறித்து ஜூலை 8 ஆம் தேதி அறிக்கை வெளியிட்ட சென்னை மாநகர முன்னாள் பொறுப்பு மேயர் கராத்தே தியாகராஜன், “திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், சென்னை மாநகர மேயராக இருந்தபோது அவரது நண்பா் ராஜா சங்கா் சிறப்பு அதிகாரி என்ற பதவியில் நியமிக்கப்பட்டாா். அதாவது மேயருக்கான சிறப்பு அதிகாரி-பாலங்கள் என்ற ஒரு புதிய பதவியை உருவாக்கி அதில் ராஜா சங்கா் நியமிக்கப்பட்டாா்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரது இந்த நியமனம் தொடா்பாக எந்த அரசாணையோ அல்லது மன்ற ஒப்புதலோ கிடையாது என்ற கராத்தே தியாகராஜன், “மேயா் தலைமையிலான இரண்டு மன்ற உறுப்பினா்களைக் கொண்ட நியமனக் குழுவின் ஒப்புதலை மட்டும் பெற்று ராஜா சங்கரை நியமித்தனா். அவருக்கு மேயருக்கு இணையான அந்தஸ்தில் பொறுப்பு அளிக்கப்பட்டு அவரிடம், ஆணையா், துணை ஆணையா் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் ஆலோசனை மற்றும் உத்தரவுகளைப் பெற வேண்டி இருந்தது” என்றும் கூறியுள்ளார்.

மேலும், “பணி ஆய்வு, ஒப்பந்தப்புள்ளிகளை முடிவு செய்வது என சா்வ வல்லமை படைத்த மேயருக்கு இணையான பதவியை ராஜா சங்கருக்கு எப்படி வழங்கினாா்கள். இதற்கு எந்த வகையான விசாரணைக்கு உத்தரவிடலாம் என்று திமுக தலைவா் அண்ணன் மு.க.ஸ்டாலின் கூறினால் நல்லது” என்றும் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

பொறியாளர் நியமனம் குறித்து ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் அறிக்கைப் போரில் ஈடுபட்டிருக்கும் சமயத்தில், காங்கிரஸ் தலைமையால் நடவடிக்கைக்கு ஆளானவரும், ரஜினியின் நெருக்கமான நண்பருமான கராத்தே தியாகராஜன் இவ்வாறு கூறியது சென்னை திமுகவினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக கடும் கோபத்தில் உள்ள மா.சுப்பிரமணியத்தின் ஆதரவாளர்கள், “பணியிட மாற்றம் தொடர்பாக அமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவரும் விவாதம் செய்யும் நேரத்தில், சம்பந்தமே இல்லாமல் கராத்தே தியாகராஜன் பழைய விஷயங்களை கிளறுகிறார். தனக்கு பின்னால் ரஜினி இருக்கிறார் என்ற தைரியத்தில் இவ்வாறு பேசுகிறார். இது டிரான்ஸ்பார்மரில் கை வைப்பதைப் போன்றது” என்று கராத்தே தியாகராஜனுக்கு எதிராகக் கொந்தளித்து வருகிறார்கள்.

**எழில்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share