வன்னியர்களுக்கு எதிராக ஜெய் பீம்: அடுத்த சர்ச்சை!

politics

நடிகர் சூர்யா நடித்து வெளியான ஜெய் பீம் திரைப்படத்தைப் பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் இந்தப் படத்தைப் பாராட்டினார். கூடவே தீபாவளி தினமான நேற்று (நவம்பர் 4) பழங்குடியின இருளர் மக்களை அவர்களது வீட்டுக்கே சென்று சந்தித்து அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கௌரவித்தார்.

ஜெய் பீம் பற்றி எங்கும் பாராட்டு மழைகளே பொழிந்துகொண்டிருக்கும் நிலையில், இந்தப் படம் வன்னியர் சமுதாயத்துக்கு எதிராக சித்திரிக்கப்பட்டிருக்கிறது என்று இடி விமர்சனம் வைத்துள்ளார் கவிஞர் ஜெயபாஸ்கரன். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு நெருக்கமானவரான ஜெயபாஸ்கரன், தமிழ்நாடு படைப்பாளிகள் பேரியக்கத்தின் பொதுச் செயலாளராகவும் இருக்கிறார்.

ஜெய் பீம் பற்றி அவர் வைத்துள்ள விமர்சனங்கள் இந்தப் படத்தை அரசியல் ரீதியாக திருப்பியிருக்கிறது.

“திரைப்படம் என்கிற ஒரு மாபெரும் காட்சி ஊடகம், சமூக நல்லிணக்கத்திற்கும், உண்மைகளுக்கும் முற்றிலும் எதிராக, சிலரது இழிவான நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கின்ற அவலத்தை, ஜெய் பீம் திரைப்படம் எனக்கு மிகத் தெளிவாக உணர்த்தியது. அந்தத் திரைப்படக் கதையின் முதன்மையான களங்களாக, தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி வட்டாரப் பகுதிகள் படம்பிடிக்கப்பட்டுள்ளன.

இத்திரைப்படம், புத்தம் புதியதோர் ‘கலைசீற்றம்’ அல்ல. இதுபோன்ற, இதைவிடச் சிறந்த, ‘விசாரணை’ போன்ற பல திரைப்படங்கள் ஏற்கனவே ஏராளமாக வந்துவிட்டன. இதுவும் ஒரு வகையான, சமூக அக்கறை என்ற முகமூடி தரித்த காட்சி ஊடகப் பெருவணிகம் என்பதை, இப்படம் வெளியான ஓ‌டிடி தளத்தின் வாயிலாக நாம் உணரலாம். அவலங்களைக் கூவிக் கூவி விற்பனை செய்கிற இந்த வணிகத்திற்கு இப்போது பலியாகி இருப்பவர்கள், நமது தமிழ்நாட்டின் செஞ்சி வட்டாரப் பழங்குடி மக்களான இருளர்கள்.

தளி – கல்பனா சுமதி, சிதம்பரம் பத்மினி போன்று சில காவல் துறையினர் நடத்திய முந்தைய பல கொடூரங்களைக் கடந்து,1995ஆம் ஆண்டுக்குப் பிறகும் மிகக் கொடூரமான பல அதிகார வெறியாட்டங்கள் நமது தமிழ்நாட்டில் நிகழ்த்தப்பட்டுள்ளன. மிகவும் அண்மையில்கூட, சாத்தான்குளம் சம்பவம் நடந்திருக்கிறது.

*இவற்றையெல்லாம் ஒரு கள்ள மௌனத்தோடு கடந்து, 1990-களின் முற்பகுதியில் நடந்த ஓர் அதிகார அவலத்தை இந்தப் படக்குழுவினர் தூசி தட்டி எடுத்து திரைப்படமாக்கி, கசடுகள் நிறைந்த தங்களது கண்ணீரை வடிக்க வேண்டிய காரணம் என்ன?

நிராயுதபாணிகளாகக் கிடந்து, ஒவ்வொரு வேளை உணவுக்கும் அல்லாடிச் செத்துக் கொண்டிருக்கும் நிலையில், இப்போது விழிப்புணர்வு பெற்று நிமிர்ந்திருக்கின்ற ஒரு தனிப்பெரும் சமூகத்திற்கு எதிரான ஒரு பெரு வன்மம். அந்த வன்மம்தான், தொண்ணூறுகளின் தொடக்கக் காலச் சம்பவத்தை தூசி தட்டிக் கையிலெடுத்துக் கதறக் கதற இப்போது காட்சிகளாகக் காட்டி இருக்கிறது.

அந்த வன்மம்தான், அந்தோணிசாமி என்கிற அந்த உண்மையான உதவி ஆய்வாளரின் பெயரை மறைத்து, ‘குருமூர்த்தி’ என்று தங்களுக்குக் கசக்கிற ஒரு பெயரைச் சூட்டியிருக்கிறது. அந்த வன்மம்தான், நீதிமன்றத்தில், ‘குருமூர்த்தி’ என்று கதாபாத்திரத்தின் முழுப்பெயரைச் சொல்லாமல்,மூச்சுக்கு முப்பது முறை, ‘குரு… குரு’ என்று உரக்கச்சொல்லி அந்தக் கதாபாத்திரத்துக்கு எதிராக வாதிடுகிறது. அந்த வன்மம்தான், தான் செய்த லாக்கப் கொலையை மறைக்க தன் வீட்டிலிருந்து அந்த உதவி ஆய்வாளர் உத்தரவிடும்போது, அவருக்குப் பின்புலமாக வன்னியர் சங்கச் சின்னம் பொறித்த காலண்டரை படம் பார்க்கின்ற பார்வையாளர்களுக்குத் தெளிவாகக் காட்டுகிறது.

இந்தப் படத்தில், லாக்கப்பில் ஓர் அப்பாவியைப் படுகொலை செய்கிற உதவி ஆய்வாளர், குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர் என்று வரையறை செய்து, மறைமுகமாக அதைப் பார்வையாளர்களுக்கு உணர்த்துகின்ற ஒரு அயோக்கியத்தனம், எதன் பொருட்டு வெளிப்படுத்தப் படுகிறது? மேலும், கடுகளவுகூட அது உண்மையும் அல்லவே!

அந்தக் காலக் கட்டத்தில், அப்போது பாதிக்கப்பட்ட அந்த பழங்குடி மக்களுக்காக வாதாடியும், போராடியும் நீதியை நிலைநாட்டியவர்கள், இவர்கள் எந்தச் சமூகத்தை வன்முறைச் சமூகமாகச் சித்தரிக்கிறார்களோ, அந்தச் சமூகத்தின் வழக்கறிஞர்கள்தான் என்றுதானே இப்போது செய்திகள் வெளிவருகின்றன. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் மிகப்பெருமளவில் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்குள் கொம்பு சீவிவிட்டு மோதல்களை உருவாக்கிக் குளிர்காய்கிற ‘விஷமிகள்’ பெருகி வருகிறார்கள்! இதுதான், நமது நிகழ்காலத் தமிழ்ச் சமூகத்தின் பெருந்துயரம்” என்று குறிப்பிட்டுள்ள ஜெயபாஸ்கரன் தொடர்ந்து,

“என்ன நடந்தது என்று என் மதிப்பிற்குரிய மானுட உரிமைப் போராளி ஐயா கல்யாணி அவர்களிடம் தொலைபேசியில் கேட்டேன். ‘இருளர் இன மக்கள் தொடர்பாக சில கருத்துகளை என்னிடம் கேட்டார்கள். சொன்னேன். அதைத் தாண்டி அந்தப் படம் எப்படியிருக்கிறது என்று இன்னும் நான் பார்க்கவில்லை என்று தெளிவாகச் சொன்னார், ஐயா கல்யாணி

‘ஐம்பதாயிரம் ரூபாய் பணம் கொடுத்தார்கள். இந்த வட்டார வழக்கு மொழிநடையைச் சொன்னேன்.ஆனால், அந்தப் படத்தில் இப்படியெல்லாம் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை!’ என்று சொல்லி வருந்தியிருக்கிறார், எழுத்தாளர் கண்மணி குணசேகரன். இயக்குனர் தங்கர்பச்சான் இந்தத் திரைப்படத்தைப் பாராட்டியிருப்பதாகச் சொல்கிறார்கள். அவரது கருத்தை உண்மையின் கருத்தாக நாம் ஏற்கத் தேவையில்லை. அது அவரது விருப்பம்.

நாம் கேட்பதெல்லாம் ஒரே ஒரு கேள்விதான். ஒருவன் குற்றவாளி என்று நிறுவ நினைத்தால், அதற்கான சான்றுகளைத்தான் காட்ட வேண்டுமே தவிர, உண்மைகளுக்கு முற்றிலும் எதிராக அவனது சாதியைக் காட்டுவது என்பது மிகவும் முற்றிய மனநோயன்றி வேறென்ன? என்றைக்காவது இவர்கள் தாழ்த்தப்பட்ட, மக்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும், அவர்கள் ஒற்றுமையாகக் கைகோத்துக் கொண்டு தங்களது வாழ்வுரிமைகளுக்காகப் போராட வேண்டிய அவசியத்தையும் கருப்பொருளாகக் கொண்டு வலியுறுத்தி, இவர்களில் யாராவது, எப்போதாவது ஒரு திரைப்படம் எடுத்தது உண்டா?

பின்தங்கிக் கிடக்கின்ற மக்களுக்குள் பிளவையும், பிரிவையும், பேதங்களையும் ஏற்படுத்திக் குளிர் காய்வதற்காக, எழுதுகோலையும் கேமராவையும் இன்னும் எவ்வளவு காலத்திற்கு இவர்கள் பயன்படுத்துவார்கள்? தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, அதை உறுதி செய்து காட்டும் வகையில் மருத்துவர் அய்யா ச.இராமதாசு, தமிழ் நாட்டில் 120 ஊர்களில் ‘ஒரு தாய் மக்கள் மாநாடு’ நடத்தியதைப் பற்றியும், அவர்கள் அனைவரது வாழ்வுரிமைகளுக்காக ஆயிரக்கணக்கான போராட்டங்களை நடத்தி அவற்றில் பெற்ற வெற்றிகளைப் பற்றியும் சில’ஞான’ சூனியங்களுக்கு ஏதாவது தெரியுமா?

ஒன்றை மட்டும் தெளிவுபடுத்துகிறோம்! எச்சரிக்கையும் செய்கிறோம்! தர்மத்தின் வாழ்வுதனை, சில கேமராக்களும், சில எழுது கோல்களும், அவ்வப்போது ‘கவ்வும்’. ஆனால், வெகுவிரைவில் வரலாற்றின் விசாரணையில், அவையனைத்தும் மண்ணைக் ‘கவ்வும்’. இப்போதைக்கு இதுவே செய்தி” என்று கூறியிருக்கிறார் ஜெயபாஸ்கரன்.

**-வேந்தன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *