நைஜீரியாவிலிருந்து தமிழ்நாடு வந்தவருக்கு ஒமிக்ரானா?

Published On:

| By Balaji

நைஜீரியாவில் இருந்து வந்தவர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மாதிரிகள் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இன்று(டிசம்பர் 14) செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”ஒமிக்ரான் எனும் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகளவில் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள ஒமிக்ரான், இந்தியாவில் 40க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆபத்தான மற்றும் ஆபத்து இல்லாத நாடுகளிலிருந்து தமிழ்நாடு வரும் விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இன்று காலைவரை ஆபத்தான நாடுகளிலிருந்து 11,480 பேரும், ஆபத்து இல்லாத நாடுகளிலிருந்து 58,745 பேரும் தமிழ்நாடு வந்துள்ளனர். அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. யாருக்கும் ஒமிக்ரான் தொற்று இல்லை. இதில் 33 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் ஆபத்து இல்லாத நாடுகளான நைஜீரியா நாட்டிலிருந்து வந்தவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டதில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருக்கு எஸ்-ஜீன் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. ஒருவேளை இது ஒமிக்ரான் பாதிப்பின் தொடக்கநிலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டதால், அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ஆறு பேருக்கு கொரோனா தொற்றும் எஸ்-ஜீன் குறைவும் உறுதி செய்யப்பட்டதையடுத்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரும் கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்கள் முதல்நிலை நோயாளியாகவே இருக்கிறார்கள். பெரியளவில் பாதிப்பு இல்லை. சளி, இருமல், லேசான உடல்வலி உள்ளிட்ட உடல் உபாதைகளுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களின் மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்றோ அல்லது நாளையோ முடிவுகள் வந்துவிடும். சந்தேகத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக தெரிவிக்கப்படும். மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. இதுவரை வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களுக்கு உறுதிசெய்யப்பட்டது டெல்டா வகை மட்டுமே. ஒமிக்ரான் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால் போதுமானது. இங்கு நாளொன்றுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன” என்று கூறினார்.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share