Sஇந்தியா-சீனா: முக்கியப் பேச்சு!

Published On:

| By Balaji

இந்திய சீன எல்லைப் பகுதியான கிழக்கு லடாக்கில் ஏற்பட்ட சர்ச்சைகளை அடுத்து இந்திய அரசின் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், சீன வெளியுறவு அமைச்சருடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார். இந்தத் தகவலை இன்று (ஜூலை 6) வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்திய சீன எல்லைப் பிரச்சினையில் கடந்த ஜூன் 15 ஆம் தேதி இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் சீன வீரர்களின் ஆயுதங்களால் தாக்கிக் கொல்லப்பட்ட நிலையில், ஜூலை 3 ஆம் தேதி பிரதமர் மோடி லடாக் சென்றார்.

இந்த நிலையில் ஜூலை 5 ஆம் தேதி இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகியோர் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். இவர்களுக்கு இடையேயான வெளிப்படையான மற்றும் ஆழமான உரையாடலுக்குப் பிறகு, இருதரப்பு உறவுகளுக்கும் எல்லையில் அமைதி அவசியம் என்று இருவரும் ஒப்புக்கொண்டனர். வேறுபாடுகள் சர்ச்சைகளாக மாற இரு தரப்பினரும் அனுமதிக்கக்கூடாது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் இருந்து துருப்புகளை இரு தரப்பும் விலக்கிக் கொள்வது என்பதை இருவரும் ஒப்புக் கொண்டனர்.மேலும், முழு மறுசீரமைப்பிற்காக இந்தியா-சீனா எல்லைப் பகுதிகளில் நடந்து வரும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்பதிலும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இரு சிறப்பு பிரதிநிதிகளும் இரு தரப்பினரின் இராஜதந்திர மற்றும் இராணுவ அதிகாரிகள் தங்கள் விவாதங்களைத் தொடர வேண்டும் என்று ஒப்புக் கொண்டனர். உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் முழுமையான அமைதி, மற்றும் நீடித்த மறுசீரமைப்பை உறுதி செய்வதற்காக டோவல், வாங் யி தங்கள் உரையாடல்களைத் தொடருவார்கள்” என்று வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

வெளியுறவுத் துறை அமைச்சராக ஜெய்சங்கர் இருக்கும்போது தோவல் ஏன் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றிருக்கிறார் என்று கேள்விகள் எழுந்த நிலையில் இருவரும் ஒரே அந்தஸ்தில் உள்ளவர்கள்தான் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரதமரின் லடாக் பயணம், அதைத் தொடர்ந்த தோவல்- வாங் யி பேச்சுவார்த்தைக்குப் பிறகே லடாக்கில் இந்திய மற்றும் சீன படையினர் கால்வான் பகுதியில் பின்னோக்கித் திரும்பியுள்ளனர்.

**-வேந்தன்**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share