இஸ்லாமியர் என்பதால் என்.ஆர்.சி குறித்து தானும் பயப்படுவதாக அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் 13 நாட்களைக் கடந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேற்கு வங்கம், கேரளா, பஞ்சாப், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இவற்றை அமல்படுத்தமாட்டோம் என அம்மாநில முதல்வர்கள் தெரிவித்துவிட்டனர்.
குடியுரிமை திருத்தச் சட்டம் மாநிலங்களவையில் நிறைவேற முக்கிய காரணமாக அமைந்தது அதிமுக எம்.பி.க்களின் வாக்குகள்தான். இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தின்போது, தருமபுரியில் இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகளைச் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் சந்தித்து கலந்துரையாடும் வீடியோ வெளியானது. குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை தொடர்பாக பல கேள்விகளை அவர்கள் அமைச்சரிடம் கேட்க, அமைச்சரும் அவர்களுக்கு விளக்க முற்பட்டார்.
இந்த நிலையில் தி நியூஸ் மினிட் ஊடகத்திற்கு நிலோபர் கபில் இதுதொடர்பாக பேட்டியளித்துள்ளார். அதில், “என்.ஆர்.சி குறித்து நானும் பயப்படுகிறேன். அதனை என்னால் மறுக்க முடியாது. ஏனெனில் நானும் அவர்களைப் போன்ற இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவள்தான். என்ன ஆவணங்கள் அளிக்க வேண்டும் என்று அனைவரும் பயப்படுகிறார்கள்” என்று குறிப்பிட்டார்.
இஸ்லாமியர்கள் பயப்படுவதால், இதுதொடர்பாக முதல்வரின் கவனத்திற்கும் கொண்டு சென்றதாகவும் அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்தார். “எனது கவலைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து முறையிட்டேன். நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள் என்று என்னிடம் கேட்டார். அனைத்தையும் தான் பார்த்துக்கொள்வதாகவும், தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்பட விடமாட்டேன் என்றும் உறுதியளித்தார். அவர் அளித்த பதில் எனக்கு திருப்தியாக இருந்தது. முதல்வர் மிகவும் இனிமையானவர். எனது கட்சியின் மீது எனக்கு 100 சதவிகிதம் நம்பிக்கை உள்ளது” என்று கூறினார்.
நாடு முழுவதும் நடைபெற்றுவரும் போராட்டங்கள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியபோது, எனது சமூகத்திற்கும் மற்றவர்களுக்கும் தங்களது எண்ணங்களை வெளிப்படுத்த இது ஒரு வழிமட்டுமே என்று தெரிவித்தார். “என்னால் தமிழகத்திற்கு மட்டுமே பேச முடியும். நான் பார்ப்பதிலிருந்து மக்கள் தங்களது உரிமைகளுக்காகத்தான் போராடுகிறார்கள். வேலூரில் ஜமாத்தார் முன்னெடுத்த போராட்டங்கள் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றது” என்று குறிப்பிட்டார் அமைச்சர்.
தமிழக அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஒரே இஸ்லாமிய சமூக அமைச்சர் நிலோபர் கபில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.�,