நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பரப்புரைக்கு அனுமதி கோரிய பாஜக நிர்வாகி வேலூர் இப்ராஹிமுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பல்வேறு கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி கோவை போத்தனூர் பகுதியில் பாஜக சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் பிரச்சாரம் செய்ய சென்றார். அப்போது அவரை தடுத்து நிறுத்தி போலீஸார் கைது செய்தனர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் கைது செய்யப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்துக்குச் சென்றபோது அவர் மூன்றாவது முறையாக கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் தன்னை பிரச்சாரத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில் கோவை மாநகராட்சி 95ஆவது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய போலீஸார் என்னை அனுமதிக்க மறுக்கின்றனர். ஆளுங்கட்சியினர் தூண்டுதலின் பேரில் என்னைப் பிரச்சாரம் செய்ய விடாமல் போலீஸார் தடுக்கின்றனர். எனவே என்னை தடுக்காமல் பிரச்சாரம் செய்ய அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று (பிப்ரவரி 15) விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், பதற்றமான பகுதிகளில் பிரச்சாரம் செய்ய வேண்டாம் என்று கடிதம் அனுப்பியும் அதை மீறி மனுதாரர் பிரச்சாரம் செய்ய முயன்றார். இது தொடர்பாக அவர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் இதை மறைத்து மனுதாரர் வழக்கு தாக்கல் செய்துள்ளார் என்று தெரிவித்தார்.
இந்த வாதத்தை ஏற்ற நீதிபதிகள் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளதை மறைத்து வழக்கு தாக்கல் செய்தது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்தனர்.
மேலும் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க எவ்வித காரணங்களும் இல்லை என்று தெரிவித்த நீதிபதிகள் அவருக்கு 10,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.
இந்தத் தொகையை 15 நாட்களில் தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்குச் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்து அவரது மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
**-பிரியா**
hபிரச்சாரம்: பாஜக நிர்வாகிக்கு அபராதம்!
+1
+1
+1
+1
+1
+1
+1