நாடாளுமன்றத்தில் நடைபெறும் காந்தி பிறந்தநாள் நிகழ்ச்சி ரத்துசெய்யப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தியின் 151ஆவது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் நாளை கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் காந்தி உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்படும். கடந்த வருடங்களில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள், அமைச்சர்கள் காந்தி படத்திற்கு மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினர். கடந்த 2019ஆம் ஆண்டு காந்தியின் 150 ஆவது பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில் நாடாளுமன்ற பொதுப்பணி பிரிவு வெளியிட்ட அறிக்கையில், “மகாத்மா காந்தி மற்றும் லால்பகதூர் சாஸ்திரி ஆகியோருக்கு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறும் மலரஞ்சலி நிகழ்ச்சி கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டு ரத்துசெய்யப்படுகிறது என்பதை உறுப்பினர்களுக்கு தெரிவிக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், “தேசத்தந்தை மகாத்மா காந்திக்கு பிறந்தநாளை முன்னிட்டு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடத்த வேண்டிய மலரஞ்சலி நிகழ்வை காரணங்காட்டி ரத்து செய்துள்ளது மத்திய அரசு. இன்னும் செய்யுங்கள். ஆனால் காலம் அநீதியின் கைகளில் என்றென்றும் கட்டுண்டு கிடந்ததாக வரலாறும் இல்லை; புராணங்களும் இல்லை” என்று சாடியுள்ளார்.
**எழில்**�,