�மாணவர்களுக்கு இலவச டேட்டா கார்டு: அரியரில் விட்டதை பிடிக்கும் எடப்பாடி

Published On:

| By Balaji

கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2 ஜிபி அளவு வீதம் இலவச இணைய டேட்டா வழங்கி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து இன்று ஜனவரி 10ஆம் தேதி முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்.‌‌.

ஆன்லைனில் படிக்கும் மாணவர்களுக்காக தமிழகத்தில் படிக்கும் அரசு கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்கள் 9.69 லட்சம் பேருக்கு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை தினமும் 2 ஜிபி டேட்டா கார்டு இலவசமாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் பங்கேற்க ஏதுவாக இந்த டேட்டா கார்டுகள் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளன. தமிழக அரசின் எல்காட் நிறுவனம் மூலம் இந்த விலையில்லாத தரவு அட்டைகள் வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஜெயலிதா ஆட்சி காலத்தில் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இப்போது மாணவர்களுக்கு இலவச டேட்டா வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், ‘‘கலை மற்றும் அறிவியலில் இளநிலை படிப்பு, பாலிடெக்னிக் டிப்ளமா படிப்பு ஆகியவற்றில் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள்; இன்ஜினியரிங்கில் இளநிலை மூன்றாம் ஆண்டு வரையிலான மாணவர்களுக்கு கொரோனா ஊரடங்கால் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இறுதி செமஸ்டர் தேர்வுகளை தவிர பிற செமஸ்டர் பாடங்களின் அரியர் தேர்வுக்கான கட்டணத்தை செலுத்தி காத்திருக்கும் மாணவர்களுக்கு யு.ஜி.சி. மற்றும் ஏ.ஐ.சி.டி.இ.யின் வழிகாட்டுதலின்படி தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களித்து மதிப்பெண்கள் வழங்கப்படும்’’ என்று அறிவித்திருந்தார்.

மாணவர்களின் வயிற்றில் பால் வார்த்த இந்த அறிவிப்புக்கு பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி. மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ கடும் எதிர்ப்பு தெரிவித்தது.மேலும், இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் சென்னைப் பல்கலைக் கழகம் அரியர் தேர்வுகளுக்கான அட்டவணையை நேற்று தயாரித்துள்ளதாக தகவல் வெளியானது.

அடுத்தடுத்த பல்கலைக் கழகங்களும் அரியர் தேர்வு அட்டவணைகளை வெளியிடத் தயாராகின்றன. நேற்று முதல் மாணவர்கள் மத்தியில் இது பேச்சாக இருந்து வரும் நிலையில் திடீரென இன்று மாணவர்களை குறிவைத்து இந்த இலவச டேட்டா கார்டு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

**வேந்தன்**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share