qஎஸ்.வி.சேகர் மீது வழக்குப் பதிவு: கைதாவாரா?

Published On:

| By Balaji

எஸ்.வி.சேகர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாஜகவைச் சேர்ந்தவரும், நடிகருமான முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.வி.சேகரின் சமீபத்திய பேச்சுக்களுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்புகள் உண்டானது. பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் விதமாக பேசிய அவருக்கு எதிராக பல புகார்கள் அளிக்கப்பட்ட நிலையிலும், அவரை காவல் துறையினர் கைது செய்யவில்லை.

இதனிடையே மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த முதல்வரை விமர்சித்து எஸ்.வி.சேகர் வீடியோ வெளியிட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்த முதல்வர், எஸ்.வி.சேகர் ஏதாவது பேசுவார், வழக்கு என்றால் ஓடி ஒளிந்துகொள்வார் என விமர்சித்தார்.

எஸ்.வி.சேகர் வெளியிட்ட அதே வீடியோவில் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி துண்டு அணிவித்ததற்கு முதல்வர் கண்டனம் தெரிவித்தது குறித்தும் பேசினார். “காவி துண்டு போட்டா காவி களங்கம் என்கிறார். தேசியக் கொடி களங்கமா? காவியை நீக்கிவிட்டு, வெள்ளையும், பச்சையுமான கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் இருந்தால்போதும், இந்துக்கள் வேண்டாம் என்கிற முடிவுக்கு நீங்களும் வந்துவிட்டீர்களா” என்று முதல்வருக்கு கேள்வி எழுப்பினார்.

இதனை முன்வைத்து தமிழக முதல்வர் மீது அவதூறு பரப்பும் வகையிலும், தேசிய கொடியை அவமதித்தும் வீடியோ வெளியிட்ட எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் சென்னை மாநகர ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் எஸ். வி.சேகர் மீது தேசிய கவுரவ பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் சென்னை குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “எஸ்.வி.சேகருக்கு சிறை செல்லும் ஆசை இருந்தால் அதை அதிமுக அரசு நிறைவேற்றும்” எனத் தெரிவித்திருந்தார். தற்போது எஸ்.வி.சேகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

**எழில்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share