தமிழ்நாட்டுக்கு உரிய நேரத்தில் யூரியா மற்றும் டிஏபி உரங்களை, உர வழங்கல் திட்டத்தின்படி முழுமையாக வழங்க வேண்டும் என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஒன்றிய அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
விவசாயிகளின் நலன் கருதி தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழக வரலாற்றில் இந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் வேளாண் துறைக்கு எனத் தனி பட்ஜெட் அறிவிக்கப்பட்டது. அதோடு ‘விவசாயிகளுடன் ஒரு நாள்’ என்ற புதிய திட்டம் கொண்டு வரப்படும் என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அறிவித்தார். இதன்மூலம் விவசாயிகளின் கோரிக்கைகளை நேரடியாகக் கேட்டு அதற்குத் தீர்வு காணப்படும் என்று கூறினார்.
இந்நிலையில் விளைபயிர்களுக்குப் பயன்படுத்தப்படும் யூரியா போன்ற உரங்கள் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் தட்டுப்பாடாக இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
இந்த சூழலில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் ஒன்றிய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டியாவுக்குக் கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.
கடிதத்தில் தமிழகத்துக்கான உரத்தை உரிய நேரத்தில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், “கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை தமிழகத்திற்கு 3. 83 லட்சம் மெட்ரிக் டன் ஒதுக்கப்பட்ட நிலையில், இதுவரை 2 .56 லட்சம் மெட்ரிக் டன் உரம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதே மாதங்களில் டிஏபி உரம் 1. 20லட்சம் மெட்ரிக் டன் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் தற்போது வரை 87 ஆயிரம் மெட்ரிக் டன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
எனவே, யூரியா மற்றும் டிஏபி உரங்களை உர வழங்கல் திட்டத்தின்படி, முழுமையாக வழங்க வேண்டும். இறக்குமதி செய்யப்படும் உரங்களைத் தமிழ்நாட்டில் உள்ள துறைமுகங்களில் மற்றும் புதுச்சேரியில் உள்ள துறைமுகத்திலும் வந்தடைய ஏற்பாடு செய்து தர வேண்டும்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவ காலத்தில் நல்ல மழை பெய்துள்ளது. அதுபோன்று உரிய நேரத்தில் டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. குறுவை சிறப்புத் தொகுப்பு திட்டம் செயல்படுத்தியதன் விளைவாக இந்த ஆண்டு, டெல்டா பகுதிகளில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 3.50 லட்சம் ஏக்கர் பரப்பளவைக் காட்டிலும் அதிகமாக 4.90 லட்சம் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இது ஒரு புதிய மைல் கல்லாக அமைந்துள்ளது.
இதன்காரணமாக யூரியா மற்றும் உரங்களின் தேவை அதிகரித்துள்ளதால், உரிய நேரத்தில் முழுமையாக உரங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
**-பிரியா**
�,