நாடாளுமன்றத்தில் சில நிமிடங்களில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கினார்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக இருக்கும் மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக டெல்லியில் முகாமிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை அரசு நடத்தியும் அது தோல்வியில் முடிந்தது.
இந்த நிலையில் பிரதமர் மோடி கடந்த நவம்பர் 19ஆம் தேதி மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து, நவம்பர் 29ஆம் தேதி கூடிய முதல்நாள் குளிர்கால கூட்டத் தொடரிலேயே வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதுதொடர்பாக விவாதம் நடத்த அனுமதி அளிக்காமல், மக்களவையில் 4 நிமிடங்களுக்குள்ளும் மாநிலங்களவையில் 5 நிமிடங்களுக்குள்ளும் குரல் வாக்கெடுப்பில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்தசூழலில் வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் வழங்கி கையெழுத்திட்டார். தற்போது, வேளாண் சட்டங்கள் ரத்து சட்டம் 2021- ஐ மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.
இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது விவசாயிகளின் உயிரிழப்புகளுக்கும், கடுமையான போராட்டத்துக்கும் கிடைத்த வெற்றியாக பார்ப்பதாக விவசாய அமைப்புகள் கூறுகின்றனர்.
ஆனால், இந்த ஓராண்டு போராட்டத்தில் 700 விவசாயிகள் உயிரிழந்ததாக எந்த பதிவும் அரசிடம் இல்லை என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியது விவசாயிகளிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
**-பிரியா**
�,