திமுக: ஈரோட்டுக்கே இரு துணைப் பொதுச் செயலாளர்களா?

Published On:

| By Balaji

திமுகவின் அமைப்பு விதிகளின் படி அக்கட்சியில் மூன்று துணைப் பொதுச் செயலாளர்கள் உண்டு. நியமனப் பதவியான இதில் ஒரு மகளிர், ஒரு பொதுப் பிரிவினர், ஒரு பட்டியல் இனத்தவர் என்ற வகையில் ஒதுக்கீடு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அண்மையில் துணைப் பொதுச் செயலாளர் வி.பி. துரைசாமி பாஜகவில் இணைந்த நிலையில், உடனடியாக அவரது இடத்துக்கு ராஜ்யசபா எம்பி அந்தியூர் செல்வராஜை துணைப் பொதுச் செயலாளராக நியமித்திருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

இந்நிலையில் இந்தத் தேர்வு குறித்து திமுக நிர்வாகிகள் மட்டத்தில் சில கருத்துகள் பேசப்படுகின்றன.

திமுகவின் தலைமைக் கழகப் பதவிகளில் முக்கியமானது துணைப் பொதுச் செயலாளர் பதவி. ஏற்கனவே சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி. துரைசாமி இருவரும் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள். ஐ.பெரியசாமி தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இந்நிலையில் வி.பி. துரைசாமி விலகலால் ஏற்பட்ட காலியிடத்துக்கு அந்தியூர் செல்வராஜை நியமித்துள்ளார் ஸ்டாலின். சுப்புலட்சுமி, அந்தியூர் செல்வராஜ் இருவருமே ஈரோடு மாவட்டக் காரர்கள். ஏற்கனவே மேற்கு மண்டலத்துக்கே இரு துணை பொதுச் செயலாளர்களா என்ற குமுறல் மற்ற மண்டலத்துக்காரர்களிடையே இருந்தது. இந்த நிலையில் இப்போது ஈரோடு மாவட்டத்துக்கே இரு துணைப் பொதுச் செயலாளர்களா என்ற குமுறல் மீண்டும் எழுந்துள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி என்று பேசப்பட்டது. ஆனால் அவர் அதை மறுத்துவிட்டதாக மின்னம்பலத்தில் [செய்தி](https://minnambalam.com/politics/2020/05/22/12/dmk-vp-duraisamy-rasa-anthiyur-selvaraj-what-happened) வெளியிட்டிருந்தோம்.

“ஒருவேளை ஆ.ராசா நியமிக்கப்பட்டிருந்தால் அவர் மேற்கு மண்டலத்தில் இருந்து எம்பி ஆனவர் என்ற போதிலும் மத்திய மாவட்டத்துக்காரர் என்ற ஒரு திருப்தி இருந்திருக்கும். அவரை நியமிக்கவில்லை என்ற நிலையில் தமிழகத்தின் வேறு ஏதேனும் ஒரு பகுதியில் இருந்து துணைப் பொதுச் செயலாளரை நியமித்திருக்கலாம். அப்போது கொங்குவை புறக்கணித்துவிட்டார்கள் என்ற குரல் வரப் போவதில்லை. ஏனெனில் ஏற்கனவே சுப்புலட்சுமி ஜெகதீசன் இருக்கிறார். அந்தியூர் செல்வராஜுக்கு ஏற்கனவே எம்பி பதவி கொடுத்துவிட்ட நிலையில் வி.பி. துரைசாமியின் இடத்தில் அவருக்கு கட்சிப் பதவி கொடுக்கப்பட்டது அவசரமாக எடுக்கப்பட்ட முடிவாகவே இருக்கிறது. அருந்ததியர் சமூகத்துக்கே பிரதிநித்துவம் கொடுக்கப்பட வேண்டுமெனில் மேற்கு மண்டலத்தில் வேறு மாவட்டங்களில் இருந்தாவது செலக்ட் செய்திருக்கலாம். திமுக என்ற பெரிய கட்சியின் மூன்று துணைப் பொதுச் செயலாளர்களில் இருவர் ஈரோடு மாவட்டத்துக்கே என்பது ஈரோட்டுக்கு வேண்டுமானால் பெருமையாக இருக்கலாம். ஆனால் இது மற்ற மண்டலங்களின், மற்ற மாவட்டங்களின் பிரநிநிதித்துவத்தை குறைப்பதாக அல்லவா இருக்கிறது. இதுகுறித்து தலைவருக்கும் தகவல் அனுப்பியுள்ளோம்” என்கிறார்கள்.

திமுக தலைமை கழகத்தில் இதுகுறித்து விசாரித்தபோது, “இப்போதைய நிலையில் இந்த கோரிக்கை நியாயமாக இருக்கலாம். விரைவில் அமைப்புத் தேர்தல் நடக்கும்போது இதற்கெல்லாம் விடை கிடைக்கும்” என்கிறார்கள்.

**-வேந்தன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share