இந்தியாவால் தேடப்படும் தலைமறைவு பயங்கரவாத தாதா தாவூத் இப்ராஹிம் கொரோனா வைரஸால் தாக்கப்பட்டு உயிரிழந்துவிட்டதாக ஒரு தகவல் சர்வதேச ஊடகங்களிலும் சமூக தளங்களிலும் பரவி வருகிறது.
மும்பை தொடர் குண்டுவெடிப்புக்கு பக்க பலமாக இருந்து பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பான ஐஎஸ்ஐ யுடன் சேர்ந்து அந்த பயங்கரவாதச் செயலை நடத்தியதாக தாவூத் இப்ராஹீம் மீது குற்றம் சாட்டப்பட்டது. பல பாலிவுட் பிரபலங்களுக்கு நெருக்கமான தாவூத் இப்ராஹிம் துபாயில் இருப்பதாகவும், பின் பாகிஸ்தானுக்கு சென்றுவிட்டதாகவும் அவ்வப்போது தகவல்கள் வெளிவந்துகொண்டிருந்தன.
இந்த நிலையில் பாகிஸ்தானிலுள்ள கராச்சியில் ராணுவ மருத்துவமனையில் தாவுத் இப்ராஹிம் கொரோனா வைரஸ் தாக்கி சிகிச்சை பெற்று வந்ததாகவும், சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டதாகவும் தகவல்கள் நேற்று (ஜூன் 5) முதல் பரவிக்கொண்டிருக்கின்றன,. தாவூத் மற்றும் அவரது மனைவியும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாகவும், இதனால் தாவூதின் தனிப்பட்ட ஊழியர்கள் மற்றும் காவலர்கள் கூட தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் தாவூத் இப்ராஹிம் தம்பியும், அவரது நிறுவனங்களை எல்லாம் கவனித்துக் கொள்பவருமான அனீஸ் இப்ராஹிம் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “தாவூத் இப்ராஹிமுக்கும், அவரது மனைவிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. அவர்கள் வீட்டில் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன” என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.
தாவூத் இப்ராஹிம் இருக்கிறார் என்பதும் இல்லை என்பதும் கடந்த ஆண்டுகளில் பல முறை சர்ச்சைகளுக்குரிய செய்திகளாகவே இருந்திருக்கின்றன. புலனாய்வு நிறுவனங்கள் தாவூத்தை காப்பாற்றுவதற்காக இதுபோன்ற செய்திகளைக் கசியவிடலாம் என்று தகவல்கள் சமூக தளங்களில் பரவிக் கிடக்கின்றன.
**-வேந்தன்**�,