தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு 21 வகையான பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டது. அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள குடும்பத்தினருக்கும் என மொத்தம் 2.15 கோடி குடும்பங்களுக்கு ரூ.1,296.88 கோடி செலவில் சிறப்புப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
ஆனால் இந்த பொருட்கள் தரம் அற்றவையாக இருந்ததாக பல்வேறு இடங்களில் இருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதோடு 21 பொருட்களுக்குப் பதிலாக 15, 16 பொருட்கள் மட்டுமே வழங்கப்பட்டதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
இதுதொடர்பாக நேற்று (ஜனவரி 21) எடப்பாடியில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் 500 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. கரும்பு கொள்முதலில் 34 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பான புகார் குறித்து முதல்வர் ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் இன்று ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
அந்த ஆய்வுக் கூட்டத்தில் பொங்கல் பரிசுப் பொருட்கள் கொள்முதல் மற்றும் விநியோகத்தின் போது சம்பந்தப்பட்ட துறையில் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் குறித்து முதல்வரிடம் அதிகாரிகள் விளக்கினர்.
மேலும் தரக் கட்டுப்பாடு குறித்த விவரங்களும் இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின் , “பொங்கல் பரிசுப் பொருட்கள் விநியோகத்தில் புகார்களுக்குக் காரணமான அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்களைக் கருப்பு பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்ட தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றும் அறிவுறுத்தினார்.
பொதுமக்களுக்கு அனைத்து வகையிலும் தரமான பொருட்கள் மட்டுமே வழங்கப்பட வேண்டும். அரசின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த முயல்வதற்கு எக்காரணம் கொண்டும் அனுமதிக்க இயலாது என்று தெரிவித்த அவர், “நியாய விலை கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்கள், எப்போதும் தரமானதாகவும் உரிய எடையிலும் வினியோகம் செய்யப்படுவதை அந்தந்த பகுதியில் உள்ள அரசு அலுவலர்கள் உறுதிப்படுத்தவேண்டும். தவறு செய்வோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அறிவுறுத்தினார்.
இந்தக் கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, நிதித்துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
**-பிரியா**
�,