மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசினர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் தீவிரப் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. பல இடங்களில் இஸ்லாமியர்கள் இரவு-பகல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்களை சந்தித்து இஸ்லாமிய அமைப்பினர் ஆதரவு கோரிவருகின்றனர்.
இந்த நிலையில் ஆழ்வார்பேட்டையிலுள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனை இன்று (மார்ச் 5) ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலத் தலைவர் காஜா மொய்தீன் தலைமையில் இஸ்லாமிய கூட்டமைப்பினர் சந்தித்துப் பேசினர். அவர்களுடன் சென்னையில் உள்ள மலபார் முஸ்லீம் அசோசியேஷனை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.
அப்போது குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மக்கள் நீதி மய்யம் வழக்கு தொடுத்ததற்காக நன்றியும், தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதற்காக கமல்ஹாசனுக்கு பாராட்டும் தெரிவித்தனர். சிஏஏ போராட்டம் அனைத்து மக்களும் பங்குபெறும் போராட்டமாக மாறுவதற்கு மக்கள் நீதி மய்யத்தின் ஆதரவு தேவை என்றும் கேட்டுக்கொண்டனர்.
அவர்களிடம் கமல்ஹாசன், ‘நான் எப்போதும் எல்லா வகையிலும் இந்திய இறையாண்மைக்கும், இந்திய மக்களின் ஒற்றுமைக்கும் உறுதுணையாக இருப்பேன்’ என்று உறுதியளித்தார். மேலும், போராட்டம் உறுதியாகவும் வலிமையாகவும் நடந்திட வேண்டுமெனவும், அதே நேரம் எந்த வகையிலும் அதில் வன்முறை புகுந்திடக் கூடாது என்பதில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டுமெனவும் கூறினார். அதற்கு இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
முன்னதாக சில நாட்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்தை இஸ்லாமியக் கூட்டமைப்பினர் சந்தித்துப் பேசினர். இதுதொடர்பான கேள்விக்கு இன்று பதிலளித்த நடிகர் ரஜினிகாந்த், “சிஏஏவின் பாதிப்பு குறித்து பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரிடம் எடுத்து கூறுங்கள் என தன்னிடம் இஸ்லாமிய அமைப்புகள் கோரினர்” என்று குறிப்பிட்டார். இந்த நிலையில் தற்போது கமல்ஹாசனையும் சந்தித்துப் பேசியுள்ளனர்.
**எழில்**
�,