வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக தனித்து நின்றாலே 60 தொகுதிகளில் வெற்றிபெற முடியும் என்று தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்திருக்கிறார். தமிழக பாஜக இளைஞரணியின் செயற்குழுக் கூட்டம் மாநில இளைஞரணிச் செயலாளர் வினோஜ் தலைமையில் இன்று (ஆகஸ்டு 31) திருச்சியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் பாஜக தலைவர் முருகன்.
அப்போது அவர், “பிரதமர் மோடியின் செயல்பாடுகளால் இளைஞர்கள் மத்தியில் பாஜக எழுச்சி பெற்றிருக்கிறது. இன்றைய இளைஞர்கள்தான் நாளைய ஆட்சியாளர்கள். இன்று எடுத்த வேலையை இன்றே செய்து முடிக்க வேண்டும் என்பதுதான் இளைஞர்களின் எண்ண ஓட்டமாக இருக்கும், இருக்க வேண்டும். நம்மை எல்லாம் இன்னொரு மொழியை கற்கவிடாமல் திமுக செய்த அநீதியை துடைத்தெறிந்திருக்கிறது புதிய கல்விக் கொள்கை. கும்மிடிப்பூண்டி தாண்டி சென்றால் இந்தி தெரியாமல் தமிழர்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம்.
**இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தினர் நடத்தும் சிபிஎஸ்சி பள்ளிகளில், ‘நாங்கள் இங்கு இந்தி கற்றுக் கொடுக்க மாட்டோம்’ என்று போர்டு போட்டு அட்மிஷன் போட முடியுமா? அரசியலுக்காக ஏழை மக்களுக்கு எஸ்சி.எஸ்.டி. மக்களுக்கு இன்னொரு மொழி கற்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. திமுக கடைபிடிக்கும் இந்த நவீன தீண்டாமையை நாங்கள் எதிர்க்கிறோம்** இதையெல்லாம் போக்குவதற்காகத்தான் இளைஞரணியின் போர்ப்படைத் தளபதிகள் புதிய கல்விக் கொள்கையை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். இதற்கான இளைஞரணியின் கையெழுத்து இயக்கம் வெற்றிபெற நான் வாழ்த்துகிறேன்.
கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை ஊட்டியில் இருந்து நாகப்பட்டினம் வரை ஒவ்வொரு பாஜக மாவட்ட அலுவலகத்திலும் தினந்தோறும் கொரோனா ஊரடங்கிலும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சகோதரிகள் பாஜகவை நோக்கி வந்து சேர்ந்துகொண்டிருக்கிறார்கள். கமலாலயத்தில் தினமும் பலர் வந்து சேர்கிறார்கள். மாற்றுக் கட்சியினர் பாஜகவை தேடி வருகிறார்கள். இதற்குக் காரணம் மோடியின் வீரமான ஆட்சி தமிழகத்திலும் வரவேண்டும் என்று நினைக்கிறார்கள். நம்முடைய சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதம் கூட இல்லை. வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கோட்டையில் அமர்ந்திருப்போம் என்ற லட்சியத்தோடு பணிகளை நாம் செய்ய வேண்டும்” என்று பேசினார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய எல். முருகன், “கடந்த சட்டமன்றத் தேர்தலில் சுமார் 60 இடங்களில் எங்களால் வெற்றி வாய்ப்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. **வருகிற சட்டமன்றத் தேர்தலில் 60 இடங்களில் நாங்கள் தனித்து நிற்பதற்கான வாய்ப்புகள் இருக்கு. அந்த இடங்களில் வெற்றி பெறக் கூடிய வாய்ப்பும் இருக்குது.** மேலும் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றிய சேர்மன், மாவட்ட சேர்மன்னு பல இடங்கள்ல பாஜக வெற்றிபெற்றிருக்கோம். எனவே சட்டமன்றத் தேர்தல்ல நாங்கள் முக்கியப் பங்கு வகிப்போம்” என்று கூறினார்.
இதன் மூலம் அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்றால் குறைந்தது 60 இடங்கள் கேட்போம் என்பதையும் இல்லையென்றால் பாஜக தனித்தே நிற்கும் என்பதையும் தெளிவாகக் கூறியிருக்கிறார் தமிழக பாஜக தலைவர் எல். முருகன்.
-**ஆரா**
�,”