கொரோனா பரவல் காரணமாக ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று(ஏப்ரல் 26) சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணை ஒன்றில், ”தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையினால் தற்போது ஏற்பட்டுள்ள நிலைக்கு தேர்தல் ஆணையமே காரணம். கடந்த சில மாதங்களாகவே பொறுப்பற்ற முறையில் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. விதிமுறைகளை முறையாக பின்பற்றாத அரசியல் கட்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்காக தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தினாலும் தவறில்லை” என நீதிபதிகள் கடுமையாக குற்றம்சாட்டினர்.
இந்த தீர்ப்பை வரவேற்ற மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி,” சென்னை உயர்நீதிமன்றத்தின் கருத்தை நான் வரவேற்கிறேன். தன்னுடைய பொறுப்புகளில் இருந்து தேர்தல் ஆணையம் தப்பிக்க முடியாது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேர்தல் ஆணையம்தான் மாநிலத்தில் கொரோனா பரவலுக்கு காரணம். கொரோனா பாதிக்கப்பட்ட மாநிலங்களில் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தங்கியுள்ள 2 லட்சம் மத்திய படை வீரர்களை வாபஸ் பெறுங்கள்” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில்,” சட்டமன்ற தேர்தல் நடந்த ஐந்து மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கையின்போதும், தேர்தல் முடிவுக்கு பின்னரும் எந்தவித தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கும் அனுமதி கிடையாது. பட்டாசு வெடிப்பது, இனிப்பு வழங்குவது, தெருவில் ஆரவாரத்துடன் ஊர்வலமாக செல்வது உள்ளிட்ட எந்த செயல்களிலும் அரசியல் கட்சிகள் ஈடுபடக் கூடாது. அமைதியான முறையில் தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதுபோன்று, சான்றிதழ் பெற வெற்றி பெற்ற வேட்பாளருடன் இரண்டு பேர் மட்டுமே செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. . இந்த உத்தரவை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா பரவலைக் குறைக்கும் நோக்கில் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
**வினிதா**
.�,