அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் டெல்லி வந்துள்ள நிலையில் உலகமே டெல்லியைத் தான் கவனித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் மறுபக்கம் டெல்லியில் சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை நடந்தது அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் சிஏஏவுக்கு எதிராகக் கடந்த சில மாதங்களாகவே போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் அவ்வப்போது வன்முறையும், போலீஸ் தடியடியும் நடத்தப்படுவது என்பது தொடர்கதையாகி வருகிறது. நேற்று ஜாப்ஃராபாத், மவுஜ்பூர், பஜன்புரா, கோகுல்புரி ஆகிய இடங்களில் சிஏஏவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். அப்போது சிஏஏவுக்கு ஆதரவாகவும் சிலர் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியுள்ளது.
இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் கல்வீசித் தாக்கிக்கொண்டதோடு அருகிலிருந்த வணிக கட்டிடங்கள் மற்றும் ஒரு பெட்ரோல் நிலையத்துக்கு தீ வைத்துள்ளனர். குறிப்பாக முஸ்லீம் அதிகம் வாழும் பகுதிகளில் கடைகள் மற்றும் அலுவலகங்களுக்கு தீ வைக்கப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த கலவரத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள் ரத்தன் லால் பலியானதாகவும், துணை போலீஸ் ஆணையர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியானது, இந்த வன்முறையால் நேற்று மாலை வரை 4 பேர் உயிரிழந்த நிலையில் இன்று மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
கல்வீச்சில் 76பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் அஞ்சப்படுகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது குழுவினர் டெல்லியில் உள்ள நிலையில் தீவிர பாதுகாப்புக்கு மத்தியிலும் இப்படி ஒரு வன்முறை ஏற்பட்டது என்பது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இதனால் டெல்லியில் சில இடங்களில் 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லி போலீஸ் மற்றும் சில மூத்த அதிகாரிகளுடன் இரவு 11 மணி முதல் 1.30 மணி வரை ஆலோசனை நடத்தியுள்ளார். இன்று மதியம் மீண்டும் ஆலோசனையை நடத்தவுள்ளார். இதற்காக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதனால் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற ட்ரம்ப் வரவேற்பு நிகழ்ச்சியை அமித் ஷா தவிர்த்ததாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
**-கவிபிரியா**�,