இன்று காலை 10 மணிக்குத் தொடங்கி சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, சென்னை கலைவாணர் அரங்கில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதைத்தொடர்ந்து காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியதும், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆளுநர் உரையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். அம்மா மினி கிளினிக்குகள் மூடல், முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
இதுதொடர்பாக கலைவாணர் அரங்குக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி,
“தமிழகத்தில் கடந்த 8 மாத திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது. கொலை, கொள்ளை, சிறுமிகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் எவ்வித கவனமும் செலுத்தவில்லை என்பது இதிலிருந்து தெளிவாக தெரிகிறது. தமிழகத்தில் கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்களின் விற்பனை அதிகரித்திருக்கிறது. இன்றைய தினம் கூட ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்குக் கடத்தி வரப்பட்ட 98 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
போதைப் பொருட்களால் இளைஞர்கள், மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். போதை பொருட்களைக் கட்டுப்படுத்த திமுக தவறிவிட்டது. இதை கண்டிக்கிறோம்.
சென்னையில் பெய்த மழையால் பெரும்பாலான வீதிகளில் தண்ணீர் தேங்கி மக்கள் சிரமப்பட்டனர். அவர்களுக்கு உணவு, மருத்துவ வசதி, குழந்தைகளுக்குப் பால் என எதுவும் கிடைக்காமல் அவதிப்பட்டனர். ஆனால் வெள்ளத்துக்கு அதிமுக தான் காரணம் என பொய் பிரச்சாரம் செய்தார் முதல்வர்.
நாங்கள் ஆட்சியில் இருக்கும் போது ஒவ்வொரு பகுதிக்கும் ஐஏஎஸ் அந்தஸ்திலான அதிகாரிகளை நியமித்து, தூர்வாரும் நடவடிக்கைகளை மேற்கொண்டோம். ஆனால் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சரியாகச் செயல்படாததால் தான் மக்கள் மழையால் பாதிக்கப்பட்டனர்.
2015ஆம் ஆண்டு வெள்ளத்தால் சென்னை மக்கள் பாதிக்கப்பட்டனர். அப்போது நிவாரண நிதியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ. 5000 வழங்கப்பட்டது. ஆனால் இந்த அரசு நிவாரண நிதி வழங்கவில்லை.
அதுபோன்று பொங்கல் பரிசு தொகையைக் கூட மக்களுக்கு திமுக அரசு வழங்கவில்லை. கடந்த ஆண்டு பொங்கல் பரிசாக ரூ.2,500 அம்மா அரசு வழங்கியது. இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகை அளிக்காதது மக்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.
கடந்த ஆட்சியில் 1900 அம்மா கிளினிக்குள் திறக்கப்பட்டன. மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் நியமிக்கப்பட்டு அம்மா கிளினிக்குகள் சிறப்பாகச் செயல்பட்டு வந்தது. முதல்வர் ஸ்டாலினும், துறை அமைச்சரும் அம்மாவின் பெயரில் இயங்கி வந்த கிளினிக்குகளை பொறுத்துக்கொள்ள முடியாமல் ,அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மூடியுள்ளனர். இதன்மூலம் ஏழை மக்கள் மீது அக்கறை இல்லாத அரசு திமுக என்பதைக் காட்டுகிறது.
அதுபோன்று தென்மேற்கு பருவ மழையின் போது டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களும் பாதிப்பைச் சந்தித்தன. கனமழையால் விளைபயிர்கள் பாதிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவில்லை. சேத கணக்கைக் கணக்கிட்டு நிவாரணம் அறிவித்தனர். ஆனால் நிவாரணத்தைக் கொடுக்கவில்லை.
வடகிழக்கு பருவமழையாலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். வேளாண் , வருவாய்த் துறை அதிகாரிகளை அனுப்பிப் பாதிக்கப்பட்ட விவசாயிகளை கண்டறிந்து நிவாரணம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். அதையும் இந்த அரசு கண்டுகொள்ளவில்லை. எந்த அதிகாரிகளையும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கவில்லை.
மேலும், காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் கட்சி நிர்வாகிகளை அழைத்துச் செல்கின்றனர். அவ்வாறு அழைத்துச் செல்லும்போது அவர்களை இரண்டு மூன்று நாட்கள் எங்கு வைத்திருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.
ஒருவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றால் 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். அதுதான் சட்டம். ஆனால் சட்டத்தை மீறித் திட்டமிட்டு முன்னாள் அமைச்சர்கள் மீதும், நிர்வாகிகள் மீதும் பொய் வழக்குகள் போடுகின்றனர். திமுகவின் ஏவல்துறையாகவும், கைப்பாவையாகவும் காவல்துறை செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
இதை எல்லாம் கண்டித்தும், திமுகவைக் கண்டித்தும் தான் வெளிநடப்பு செய்தோம்” என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது, அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 5 சவரனுக்குட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் எனப் பிரச்சாரம் செய்தார். இதையே சட்டமன்றத் தேர்தலின் போதும் சொன்னார்.
ஆனால் இன்று பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளனர். இவர்களை நம்பி 48 லட்சம் பேர் கடன் பெற்றனர். ஆனால் 13 லட்சம் பேருக்குத்தான் கடன் தள்ளுபடி செய்வோம் என்று கூறுவது கண்டிக்கத்தக்கது. இவர்கள் இன்று இவ்வளவு நிபந்தனைகள் விதிப்பதைத் தேர்தல் அறிக்கையிலேயே சொல்லியிருந்தால் இத்தனை லட்சம் பேர் கடன் பெற்றிருக்கமாட்டார்கள்” என்றும் குறிப்பிட்டார்.
**-பிரியா**
�,