இந்தியாவில் அங்கீகாரம் பெறாத கட்சிகள் என்று 87 கட்சிகளை தேர்தல் கமிஷன் தன் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது. இந்த 87 கட்சிகளும் தற்போது செயல்பாட்டில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்திய தேர்தல் கமிஷன் நடத்திய ஆய்வின்படி இந்தியாவில் 2,796 கட்சிகள் அங்கீகாரம் பெறாத கட்சிகள் என்று தெரிவித்திருந்தது. இவை அனைத்தும் தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்ட கட்சிகள். இதில் 2100 கட்சிகள் தேர்தல் நிதி பங்களிப்புகள், முகவரி, பொறுப்பாளர் விவரங்கள் போன்றவற்றை மேம்படுத்த தவறியது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த கட்சிகள் குறித்து அந்தந்த மாநிலங்களில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாநிலங்களின் தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. இந்த விசாரணையில் 87 கட்சிகள் தற்போது செயல்பாட்டில் இல்லை என்று தெரியவந்தது, அதனால் இந்த 87 கட்சிகளையும் உடனடியாக தனது பட்டியலில் இருந்து நீக்கி தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.
இதுகுறித்து தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடு முழுவதும் 87 கட்சிகள் செயல்பாட்டில் இல்லை என்பதால் தேர்தல் கமிஷன் பட்டியலில் இருந்து அந்த கட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. மேலும் தேர்தல் விதிமீறல்களில் ஈடுபட்டுள்ள 2100 கட்சிகளும் அதை சரி செய்து கொள்ள நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இல்லையெனில் தேர்தலில் சின்னம் பெறுவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு சிக்கல் ஏற்படும் என்று எச்சரிக்கப்படுகிறது.” என்று தெரிவித்துள்ளது.
தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெறாத கட்சிகளில் 92 சதவீதத்துக்கும் அதிகமான கட்சிகள் கடந்த 2019ஆம் ஆண்டில் தங்கள் பங்களிப்பு அறிக்கைகளை தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
.