திரைக் கலைஞரான விவேக் 59 வயதிலேயே மாரடைப்பால் மரணம் அடைந்த தகவல் அவரது ரத்த சம்பந்தம் இல்லாதவர்களைக் கூட உலுக்கிக் கொண்டிருக்கிறது. அறிமுகம் இல்லாதவர்கள், அவரை திரையில் மட்டுமே ரசித்த கோடிக்கணக்கானோர் துயருற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் தங்கள் அப்பாவை இழந்த அந்த இரு பிஞ்சுகள் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கிற காட்சி விவேக்கின் குடும்ப நன்பர்களையும், உறவினர்களையும் மனதைச் சுட்டுக் கொண்டிருக்கிறது.
தனது செல்ல மகன் பிரசன்ன குமார் 13 ஆவது வயதிலேயே 2015 ஆம் ஆண்டு மூளைக் காய்ச்சலால் இறந்துபோனது விவேக்கை மிகக் கடுமையாகத் தாக்கிவிட்டது., புத்திர சோகத்தில் இருந்து மீளமுடியாதவராக இருந்த விவேக்கிடம், அவரது மருத்துவ நண்பர்கள், ‘என்னப்பா… மருத்துவ அறிவியல் உதவியோட உனக்கு இன்னொரு ஆண் குழந்தையை பெத்துக்கலாம்’ என்று தைரியமூட்டினார்கள்.
அவர்களின் ஆலோசனையின் பேரில் ஜிஜி செயற்கை கருத்தரிப்பு மருத்துவமனையில் விவேக் தம்பதியினர் சிகிச்சை எடுத்துக் கொண்டனர். இதையடுத்து விவேக் மனைவி கருவுற்றார். மீண்டும் பிரசன்ன குமார் தன் முன் வருவான் என்று எதிர்பார்த்த நிலையில், விவேக்குக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தார்கள். மீண்டும் தனது இளமைக் காலம் திரும்பியதைப் போல உணர்ந்த விவேக் தனது பெண் குழந்தைகள் மீது பாசத்தைக் கொட்டினார். இப்போது அந்த இரு பெண் குழந்தைகளுக்கும் 3 வயதுதான் ஆகிறது.
தங்களது தந்தை தங்களை விட்டு போய்விட்டார்கள் என்பதைக் கூட அறியாமல் விவேக் வீட்டின் இன்னொரு அறையில் அந்தக் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். இந்தக் காட்சியைப் பார்த்த விவேக்கின் உறவினர்கள், ‘புத்திர சோகத்தில் இருந்த விவேக், அதை தணிப்பதற்காக இப்படி இந்த இரு செல்வ மகள்களைப் பெற்றார். இப்போது தந்தை இல்லாமல் இந்தப் பிஞ்சுகளை தவிக்கவிட்டுச் சென்றுவிட்டாரே…?’என்று கதறுகிறார்கள். பாவம் அந்த பிஞ்சுகள் விவேக் வாழ்வில் காலன் விளையாடியது தெரியாமல் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.
-வேந்தன்
�,