விஜயபாஸ்கரை எதிர்த்து போட்டியிடும் நெவளிநாதன்: நீக்கப்படாதது ஏன்?

Published On:

| By Balaji

அதிமுகவில் ஆங்காங்கே சுயேச்சையாக போட்டியிடும் போட்டி வேட்பாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு வருகிறார்கள். பெருந்துறையில் அதிமுக வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிடும் முன்னாள் அமைச்சரும், தொடர்ந்து இருமுறை எம்.எல்.ஏ.வாக இருப்பவருமான தோப்பு வெங்கடாசலம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதேபோல நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் சிட்டிங் எம்.எல்.ஏ. சந்திரசேகரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.

ஆனால், அமைச்சர் விஜயபாஸ்கரை எதிர்த்து விராலிமலை தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் மாவட்ட வழக்கறிஞர் அணி துணைத்தலைவர் நெவளிநாதன் மீது இன்னும் தலைமை நடவடிக்கை எடுக்கவில்லை.

ஏற்கனவே மார்ச் 18 ஆம் தேதி விஜயபாஸ்கரை எதிர்த்து மாவட்ட வழக்கறிஞர் அணி துணைத் தலைவர் நெவளிநாதன் விராலிமலை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இதுகுறித்து அவர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் தனித்தனியே கடிதமும் எழுதியிருந்தார். அதில், “கட்சிக் கட்டுப்பாடு என்ற பெயரில் சமூக நீதி சாகடிக்கப்படுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாது” என்று குறிப்பிட்டிருந்தார். அதாவது அமைச்சர் விஜயபாஸ்கர் சார்ந்த சமுதாயமே புதுக்கோட்டை மாவட்ட அதிமுகவில் முக்கியத்துவம் பெறுகிறது. முத்தரையர் உள்ளிட்ட பிற சமுதாயங்கள் புறக்கணிக்கப்படுகின்றன என்பதுதான் நெவளிநாதனின் புகார். அதனால்தான் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த நெவளிநாதன் சுயேச்சையாக விராலிமலையில் போட்டியிடுகிறார்.

அதிமுகவில் 22 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிவரும் புதுக்கோட்டை மாவட்ட வழக்கறிஞர் அணி துணைத் தலைவர் நெவளிநாதன் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்.

இன்று (மார்ச் 20) தமிழகம் எங்கும் சட்டமன்றத் தேர்தலில் வேட்பு மனு செய்தவர்களுக்கான மனுக்கள் பரிசீலனை நடந்தது. அதன்படியே விஜயபாஸ்கர் போட்டியிடும் தொகுதியான விராலிமலை தொகுதி வேட்பு மனுக்கள் பரிசீலனை விராலிமலை-இலுப்பூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடந்தது.

அப்போது விஜயபாஸ்கரின் வேட்பு மனுவில் சொத்து விவரங்கள், வழக்கு விவரங்கள் சரியாக குறிப்பிடப்படவில்லை என்று திமுக, அமமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயபாஸ்கரின் மனுவை ஏற்றுக் கொண்டார். இன்று விஜயபாஸ்கரை எதிர்த்துப் போட்டியிடும் முத்தரையர் சமுதாய வேட்பாளர் நெவளிநாதனின் மனுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

வேட்புமனு பரிசீலனையின் போது நெவளிநாதனும் அங்கே சென்றிருந்தார். அங்கே வந்திருந்த மாவட்ட அதிமுக அவைத் தலைவர் வி.ஆர். சுப்பிரமணியன் மற்றும் விஜயபாஸ்கரின் வழக்கறிஞர்கள் நெவளிநாதனை அழைத்துச் சென்று, “ஏன் இப்படி அமைச்சரை எதிர்த்து போட்டி போடுறீங்க? நம்ம கட்சிய விட்டு நீங்க போகக் கூடாது. வேட்பு மனுவை நீங்க வாபஸ் வாங்கிக்கணும்’ என்று வலியுறுத்தியிருக்கிறார்கள்.

அவர்களிடம் பேசிய நெவளிநாதன், “அண்ணே உங்க எல்லார் மேலயும் எனக்கு மரியாதை இருக்கு. எப்போதும் போல நட்பா இருப்போம். ஆனா இந்த விஷயத்துல நீங்க என்கிட்ட பேசக் கூடாது. இந்த விஷயமா பேசணும்னா அமைச்சர்தான் பேசணும். அவரும் நானும் பேசினாதான் இது ஒரு முடிவுக்கு வரும். அவரை பேசச் சொல்லுங்க’’என்று பதில் கூறியிருக்கிறார். சுமார் இருபது நிமிடங்களுக்கு மேலும் நெவளிநாதனிடம் பேசியும் அவரை சரிக்கட்ட முடியாமல் அமைச்சரின் ஆதரவு நிர்வாகிகள் சென்றுவிட்டனர்.

திங்கள் கிழமை சின்னம் ஒதுக்கப்பட்டுவிடும். அதன்பின் விராலிமலையில் இருக்கும் முத்தரையர் சமுதாய வாக்குகளைக் குறிவைத்து நெவளிநாதன் தீவிரப் பிரச்சாரத்தில் இறங்க முடிவு செய்திருக்கிறார். இந்நிலையில், “அமைச்சர் விஜயபாஸ்கர் உங்களிடத்தில் பேசினால் முடிவை மாற்றிக் கொள்வீர்களா?”என்று நெவளிநாதனிடமே நாம் கேட்டோம்.

“அது எப்படிங்க முடியும்?என்றவர், “நாங்கள் அதிமுகவில் எங்களுக்கான அங்கீகாரத்தைக் கேட்கும் போது அமைச்சர் அலட்சியப்படுத்திவிட்டார். இப்போது அமைச்சருக்காக நிர்வாகிகள் என்னிடம் வந்து பேசுகிறார்கள்.ஆனால் செய்ய மனமிருந்தால் அமைச்சர் எப்போதோ செய்திருக்க வேண்டும். நான் பிப்ரவரி 24 ஆம் தேதியே விராலிமலை தொகுதிக்கு விருப்ப மனு வாங்கிவிட்டேன். அது ஏன் என்று அவருக்கு நன்றாகத் தெரியும். அமைச்சருக்கே என் கோரிக்கைகளை வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளேன். நோட்டடு ஆல் என்று அதற்கு பதிலும் அனுப்பியுள்ளார்.முதல்வர் இங்கே வந்து சென்றபிறகு, ‘டோண்ட் வொரி பிரதர்’என்று மெசேஜ் அனுப்பினார். ஆனால் சமூக நீதி அடிப்படையில் அமைச்சர் செயல்படவில்லையே. இந்த சூழலில் அமைச்சர் பேசிவிட்டார் என்பதற்காக என்னால் பின் வாங்க முடியாது. இதுக்கு ஒரு முடிவு வேண்டுமென்றால் அதிமுக தலைமை அழைத்துப் பேசி உறுதியான சில உத்தரவாதங்களை வழங்கினால்தான் முடியும்” என்றார் நெவளிநாதன்.

அதிமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளரான விஜயபாஸ்கரை எதிர்த்துப் போட்டியிடும் நெவளிநாதனை ஏன் இன்னும் அதிமுக தலைமை நீக்கவில்லை என்று புதுக்கோட்டை அதிமுக வட்டாரத்தில் பேசினோம்.

“பொதுவாக ஒருவரை நீக்க வேண்டுமென்றால் மாவட்டச் செயலாளர் பரிந்துரைக் கடிதம் அனுப்ப வேண்டும். அதாவது விஜயபாஸ்கர் பரிந்துரைக்க வேண்டும். ஆனால் தன்னை எதிர்த்துப் போட்டியிட்டாலும் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த நெவளிநாதன் நீக்கம் என்ற அறிவிப்பு வெளியிட்டால் அது மேலும் தனக்கு எதிராய் போகும் என்று விஜயபாஸ்கர் யோசிக்கிறார். அதனால்தான் அவைத் தலைவரை அனுப்பி நெவளிநாதனுக்கு தூதுவிட்டார். இன்னமும் பொறுமை காத்துக்கொண்டிருக்கிறார். அதனால்தான் நெவளிநாதன் இன்னமும் அதிமுகவில் இருந்து நீக்கப்படவில்லை” என்கிறார்கள்.

**-ராகவேந்திரா ஆரா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share