�தேர்தல் அறிவிப்புக்கு ஒரு மணி நேரம் முன்னதாக வன்னியர் 10.5% உள் ஒதுக்கீடு!

Published On:

| By Balaji

வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதா இன்று (பிப்ரவரி 26) பிற்பகல் சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடந்த டிசம்பர் மாதம் முதலே எம்பிசி இட ஒதுக்கீட்டில் வன்னியர்கள் அடையும் பயன்பாடு மிகவும் குறைவு என்றும் இதனால் வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராட்டங்களைத் தொடங்கினார். சில வாரங்களில் ராமதாஸ் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, எம்பிசி பட்டியல் சாதிகளுக்கு அளிக்கப்பட்ட 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று கோரினார். இதை நிறைவேற்றினால்தான் அதிமுகவோடு கூட்டணி பற்றி பேச முடியும் என்று ராமதாஸ் திட்டவட்டமாக கூறிவிட்டார் .

அதிமுக சார்பில் அமைச்சர்கள் தைலாபுரம் தோட்டத்துக்குச் சென்று சந்தித்து பேசினார்கள். அதன் பின் சென்னையில் அமைச்சர் தங்கமணி வீட்டில் பாமக, அதிமுக பிரதிநிதிகள் பேசினார்கள். இந்த நிலையில்தான் எதிர்பார்க்கப்பட்டது மாதிரியே வன்னியர்களுக்கு 10.5%இட ஒதுக்கீட்டு அளித்து சட்ட மசோதா கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்னும் ஆறு மாதத்துக்குள் சாதிவாரி கணக்கெடுப்பு முடிக்கப்பட்டு அதன் பிறகு இந்த உள் ஒதுக்கீடு நிறைவுபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு சில மணி நேரம் முன்பாக அதிமுக அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கை அரசியல் அரங்கிலும், சட்ட ரீதியாகவும் விமர்சனத்துக்கும் உள்ளாகியிருக்கிறது,

இதுகுறித்து பாமகவைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.பாலு பேசும்போது, “வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற 40 ஆண்டு கால போராட்டத்துக்கு விடை கிடைத்திருக்கிறது. மருத்துவர் அய்யா இதற்காகத்தான் தன் வாழ்க்கை முழுதும் போராடியிருக்கிறார். ஒட்டுமொத்த வன்னியர்கள் மத்தியிலும் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத உணர்ச்சிப் பெருக்கில் இருக்கிறோம்.

இந்த வரலாற்றைச் சிறப்பு மிக்க சட்டத்தைக் கொண்டு வந்த தமிழக முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டார்.

இந்த 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5%, சீர் மரபினருக்கு 7%, எஞ்சியுள்ளவர்களுக்கு 2.5% என உள் ஒதுக்கீடு பிரிக்கப்பட்டுள்ளது.

**வேந்தன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share