நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.
தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த ஆண்டு டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெற்று முடிந்தது. ஆனால், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் என்று சொல்லப்படும் நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகளுக்கு இதுவரை தேர்தல் அறிவிப்பு வெளியாகவில்லை. விரைவில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்று மட்டுமே தேர்தல் ஆணையர் பழனிசாமி தொடர்ந்து தெரிவித்துவந்தார். இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் நகர்ப்புற தேர்தலை விரைந்து நடத்தக் கோரி திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்று இன்று (பிப்ரவரி 20) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை இதுவரை தேர்தல் ஆணையம் நடத்தவில்லை. ஆகவே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்த மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளது.
இதனை அவசர வழக்காக ஏற்று விசாரிக்கும்படி தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் திமுக முறையீடும் செய்யவுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை என்று கூறி மாநிலத் தேர்தல் ஆணையருக்கு எதிராக ஜெய்சுகின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கோடு திமுகவின் இடைக்கால மனுவும் இணைத்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
**த.எழிலரசன்**�,