சமீபத்தில் இந்தி தெரியாது என்று சொன்னதற்காக கனிமொழியை, நீங்கள் இந்தியரா என சிஎஸ்ஐஎஃப் அதிகாரி கேட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தற்போது மீண்டும் இந்தி தொடர்பான சர்ச்சை உண்டாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் 2020-21ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த 17ஆம் தேதி முதல் அனைத்து வகையான பள்ளிகளிலும் தொடங்கியது. அதன்படி, கோவை மாநகராட்சியின் கீழ் இயங்கும் பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. இந்த நிலையில் ஒரு பள்ளியின் விண்ணப்பப் படிவத்தினை நிரப்புவதற்கு பிரித்துப் பார்த்த பெற்றோர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்காக கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தில், 14 ஆவது கேள்வியாக மூன்றாவது மொழியாக இந்தியை எடுத்துக்கொள்ள விருப்பமா என்று கேட்கப்பட்டிருந்தது. அல்லது கைத்தொழில் ஒன்றை அதிகப்படியாக கற்றுக்கொள்ள விரும்புகிறாரா என்ற கேள்வியும் இடம்பெற்றது.
தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை மட்டுமே அமலில் உள்ள நிலையில், சமீபத்தில் புதிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்ட மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த முடியாது என தமிழக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது. தேசிய கல்வி கொள்கையே இன்னும் அமலாகாத நிலையில், அதிலுள்ள மும்மொழிக் கொள்கை மற்றும் கைத்தொழில் கற்றுக்கொள்ளும் அம்சம் ஆகியவை விண்ணப்பத்தில் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை மறைமுகமாக அமல்படுத்த தயாராகிவிட்டனரா என்ற கேள்வியும் எழுந்தது.
இந்த விவகாரத்திற்கு மறுப்புத் தெரிவித்த கோவை மாநகராட்சி ஆணையர் சர்வன் குமார், “ : கோவையில் 3வது மொழியாக இந்தி படிக்க விருப்பமா என மாநகராட்சி பள்ளிகளின் மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் கேட்கப்படவில்லை. அந்த விண்ணப்பப் படிவம் நான் பதவியேற்ற பின் வெளியிடப்படவில்லை” என்று விளக்கம் அளித்தார். குறிப்பிட்ட ஒரு பள்ளியில் மட்டுமே அப்படி ஒரு விண்ணப்பம் வந்ததாகவும், அந்த பள்ளி தலைமை ஆசிரியர் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
**எழில்**
�,