கொரோனா தொற்று இரண்டாவது அலை நாட்டை உலுக்கிப் போட்டு ஓரிரு மாதங்கள் ஆன நிலையில் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் மெல்ல மெல்ல ஊரடங்கு தளர்வுகளை அதிகரித்து வருகின்றன. தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகளை திறக்கும் ஏற்பாடுகள் பற்றிய ஆலோசனைகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவின் மூன்றாவது அலை எப்போது வரும், எப்படிப்பட்டதாக வரும் என்பது பற்றி கான்பூர் ஐஐடி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
.ஐஐடி-கான்பூர் விஞ்ஞானி மணீந்திரா அகர்வால், நோய்த்தொற்றுகள் கணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மூன்று பேர் கொண்ட நிபுணர்கள் குழுவில் ஒருவராக இருகிறார். அவர் மூன்றாவது அலை பற்றிய தனது கணிப்புகளை இன்று வெளியிட்டுள்ளார்.
“அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்குள் இந்தியாவில் இருக்கும் COVID-19 இன் மூன்றாவது அலைப் பரவல் ஏற்படலாம். ஆனால் அதன் தீவிரம் இரண்டாவது அலையை விட மிகக் குறைவாக இருக்கும். புதிய வகை வைரஸ் எதுவும் தோன்றவில்லை என்றால், நிலைமை மாற வாய்ப்பில்லை. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தொடங்கி நடைபெற்று வரும் தடுப்பூசி இயக்கம் நாட்டின் நோய் எதிர்ப்பு சக்திக்கு முக்கிய காரணியாக இருக்கிறது” என்றும் அகர்வால் குறிப்பிட்டுள்ளார்.
மே மாதத்தில் கொடிய இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தபோது நாடு 4 லட்சத்திற்கும் அதிகமான தினசரி கொரொனா தொற்றாளர்களை எதிர்கொண்டது. இரண்டாவது அலை ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றது மற்றும் பல லட்சக்கணக்கானோரை பாதித்தது. மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்று சொல்லப்படும் நிலையில் மணீந்திரா அகர்வாலின் கருத்துகள் நம்பிக்கை தருவதாக உள்ளன.
**-வேந்தன்**
�,