சமூக நீதி கூட்டமைப்பு: ஓபிஎஸ்ஸுக்கு தங்கம் தென்னரசு பதில்!

Published On:

| By admin

சமூக நீதி கூட்டமைப்பில் இணைய விருப்பமில்லை என்று ஓபிஎஸ் கூறியதற்கு, பாஜகவுக்கு பல்லக்குத் தூக்குவதே அவர்களுக்குத் தலையாய பணி என்று தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார்.
அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணையுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 37 தலைவர்களுக்கு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடந்த 2ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார்.
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “ஓர் அமைப்பை ஆரம்பிப்பதற்கு முன்னர் ஒத்தக் கருத்துகளை உடையவர்களை அழைத்துப் பேசி, அதுகுறித்து விவாதிக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் தாங்களே ஓர் அமைப்பை ஏற்படுத்திவிட்டு, அதில் பிரதிநிதியை நியமிக்குமாறு வேண்டுகோள் விடுப்பதே கூட்டாட்சித் தத்துவத்துக்கு முரணாக உள்ளது என்பதை தங்களுக்கு முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டின் நலத்துக்காக, தமிழக மக்களின் நலத்துக்காகக் குரல் கொடுக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தயங்காது. தாங்கள் அனுப்பிய கடிதத்தில் தமிழ்நாட்டின் நலன், தமிழக மக்களின் நலன் ஏதாவது இருக்கிறதா என்று துருவித் துருவிப் பார்த்தபோது அதுபோன்ற எதுவும் இல்லை என்பதும், அரசியல் ஆதாயம்தான் மேலோங்கி இருக்கிறது என்றும் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. தற்போது திமுக ஆட்சி மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை திசை திருப்பவே அனைத்திந்திய சமூக நீதிக் கூட்டமைப்பு என்ற அமைப்பு தங்களால் உருவாக்கப்பட்டிருப்பதாக அனைவரும் கருதுகிறார்கள். அரசியல் ஆதாயத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த அமைப்பில் அஇஅதிமுக தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பவில்லை என்பதை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இதில் நேரத்தை வீணடிப்பதைத் தவிர்த்து, நீட் தேர்வு ரத்து போன்ற மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் இந்தக் கடிதத்துக்கு தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்க இருக்கும் அனைத்து இந்திய சமூக நீதி கூட்டமைப்பில் சேருவதற்கு விடுத்த அழைப்பை ஏற்க மறுத்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் 7 பக்க அறிக்கை அளித்திருப்பது வேடிக்கை கலந்த வினோதமாக இருக்கிறது.
சமூக நீதியில் தமிழ்நாட்டில் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்பதற்காகவே அதிமுகவையும் அழைத்தார் மு.க.ஸ்டாலின். இட ஒதுக்கீட்டை முதலில் 25%இல் இருந்து 31% ஆக உயர்த்தியதே எங்கள் தலைவர் கருணாநிதிதான். மண்டல் கமிஷன் பரிந்துரைகளைச் செயல்படுத்த அதிமுக துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை.
அதைச் செயல்படுத்த சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அப்போது இருந்த பிரதமர் வி.பி.சிங்குக்குக் கடிதம் எழுதி வலியுறுத்தி பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இட ஒதுக்கீட்டை மத்திய அரசுப் பணிகளில் பெற்றுக் கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி. விளிம்பு நிலை மக்களை கைதூக்கி விட பட்டியலின மக்களின் இட ஒதுக்கீட்டை 16%இல் இருந்து 18% ஆக உயர்த்தி, பழங்குடியினருக்கு 1% தனியாகக் கொடுத்து, இன்றைக்கு உள்ள 69% இட ஒதுக்கீட்டை இந்தியாவுக்கே முன்னோடியாகத் தமிழ்நாட்டில் கொண்டு வந்தது திமுக ஆட்சி.
அந்த 69% இட ஒதுக்கீட்டுக்கு மண்டல் தீர்ப்பால் ஆபத்து வருகிறது என்று தெரிந்தவுடன் அதற்கான அழுத்தத்தைக் கொடுத்து, சட்டப் பாதுகாப்பு கொண்டுவர வைத்தது கலைஞர் கருணாநிதியும், திமுகவும், திராவிடர் கழகமும் தான் என்பதை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ள பன்னீர்செல்வம் பழைய வரலாறுகளை சற்று புரட்டிப் பார்க்க வேண்டும்” என்று கூறியுள்ள அவர்,
“அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணையாமல் இருப்பது அதிமுகவின் விருப்பம். ஆனால் “நீட் தேர்வு ரத்து” போன்ற மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலினைப் பார்த்து சொல்லும் ஓ.பன்னீர்செல்வம் நேற்று கூட்டப்பட்ட மிக முக்கியமான நீட் கூட்டத்துக்குக்கூட வராமல் போனது “ஊருக்கு உபதேசம்” என்ற பழமொழியை நினைவுபடுத்துகிறது.
மு.க.ஸ்டாலினை விமர்சித்தால் மட்டுமே தங்களுக்குப் பிழைப்பு என்று இருப்பவர்கள், சமூக நீதி கூட்டமைப்பில் இணைய மாட்டோம் என்பதில் வியப்பும் இல்லை; கடிதம் எழுதுவதில் புதிரும் இல்லை. ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட முன்னாள் அதிமுக அமைச்சர்களுக்கு, தங்கள் பழவினையால், சமூக நீதி – சமத்துவ விரோத பாஜகவுக்குப் பல்லக்குத் தூக்குவதே தலையாய பணியாக இருப்பதைத்தான் அவரது அறிக்கை உணர்த்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக சமூக நீதி கூட்டமைப்பு என்ற பெயரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது திறமையின்மையை மறைக்க பார்க்கிறாரா என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்ததற்கு, தனக்குக் கடிதம் எழுதாமல், ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் கடிதம் எழுதிவிட்டாரே என்ற பொறாமையில் இப்படி ஓர் அறிக்கையை வெளியிட்டு தன் முதுகை தானே சொறிந்துக் கொண்டுள்ளார் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
**-வினிதா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share