தெலங்கானா, புதுச்சேரி இரட்டைக் குழந்தைகள்: ஆளுநர் தமிழிசை

Published On:

| By Balaji

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான தமிழிசை சௌந்தரராஜன் கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தெலங்கானா மாநில ஆளுநராக குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தமிழிசைக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு நேற்று அறிவிக்கப்பட்டது. குடியரசுத் தலைவரின் இந்த உத்தரவு இன்று (பிப்ரவரி 17) ஹைதராபாத்தில் இருக்கும் ஆளுநர் தமிழிசையிடம் நேரில் வழங்கப்பட்டதை அடுத்து இன்று மாலையே தமிழிசை புதுச்சேரிவருகை தந்திருக்கிறார்.

மணக்குள விநாயகரை வழிபட்ட பின் வழக்கத்துக்கு மாறாக செய்தியாளர்களை சந்தித்தார் பொறுப்பு துணை நிலை ஆளுநர் தமிழிசை.

“நான் புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநர் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதற்காக மகிழ்கிறேன். இது கவி பாரதியின் மண். சுதந்திரப் போராட்ட காலத்தில் பாரதி இங்கேதான் தங்கியிருந்தார். அத்தகைய பாரதியின் மண்ணில் பணியாற்றுவதில் மகிழ்வும் பெருமையும் அடைகிறேன்.

தெலங்கானா ஆளுநராக பணியாற்றிய ஒன்றரை வருட அனுபவம் உள்ளது. அதன் அடிப்படையில் புதுச்சேரியிலும் செயல்படுவேன். மக்கள் ஆளுநராக செயல்படுவேன். அரசியல் அமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு எனது கடமையை ஆற்றுவேன்” என்று கூறினார்.

“தேர்தலுக்காக உங்களை நியமித்திருக்கிறார்களா?”என்ற கேள்விக்கு,

“ அரசியல் அமைப்பு சட்டத்தின்படி ஆளுநராக வந்திருக்கிறேன். ஆளுநராக எனது கடமையை செய்வேன். நான் ஒரு மகப்பேறு மருத்துவர். இரட்டைக் குழந்தை பிரசவங்களை கையாள்வது எனக்கு எளிதுதான்” என்று சிரித்தபடி கூறினார் தமிழிசை.

அதாவது தெலங்கானா, புதுச்சேரி ஆகிய இரு மாநிலங்களையும் இரு குழந்தைகள் போல கருதுவதாக குறிப்பிட்டுள்ளார் தமிழிசை.

**-வேந்தன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share