2021, 2022 ஆகிய இரு ஆண்டுகளுக்கும் சேர்த்து மொத்தம் 3 லட்சம் பேருக்குப் பட்டா வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது. அப்போது அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், “மூதாதையர் காலத்திலிருந்து வசித்து வரும் மக்களுக்கு தற்போது நேரடியாக வாரிசு அடிப்படையில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மூதாதையர் காலத்திலிருந்து நிறைய இடங்களில் பட்டா மாறுதல்கள் இல்லாமல் இருக்கிறது. அதைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வாரிசுகளின் எண்ணிக்கைகளைக் கருத்தில் கொண்டு அது சரிசெய்யப்பட நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் சேர்த்து 3 லட்சம் பட்டாக்கள் வழங்க டார்கெட் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை அரசு தரப்பில் பட்டா வழங்கப்படும்போது சர்வே செய்து கொடுப்பது இல்லை. நிகழ்ச்சிகளில் பட்டா என்ற பெயரில் ஒரு காகிதம் கையில் கொடுக்கப்படும். அந்த இடத்தை பயனாளிகளுக்குக் காட்டுவதுமில்லை. இந்தமுறை அதுபோல இல்லாமல், பயனாளிகளுக்கு இடத்தைக் காட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று கூறினார்.
அதுபோன்று திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை தனி தாலுகாவாக செயல்படத் தொடங்கும் என்றும் தெரிவித்தார்.
**-பிரியா**